top of page
Writer's pictureKrishnapriya Narayan

தேன் சிந்தும் பூ வனம்! (சிறுகதை)



தேன் சிந்தும் பூ வனம்!


{மிகப்பெரிய வெல்லக் கட்டி ஒன்றை மொய்த்து, தன் சிறு நாவினால் தான் சுவைத்த இனிமையை விவரிக்க ஒரு சிற்றெறும்பு முனைவதுபோல், பொன்னியின் செல்வன் எனும் கடலில் மூழ்கிய தாக்கத்தில், முழுக்க முழுக்க எனது கற்பனை கொண்டு இந்த கதையை உருவாக்கி இருக்கிறேன்.


பிழை இருந்தால் பொருத்தருள்க.}


திரண்ட தோள்களும் திண்ணிய மார்புமாய், ஒரு வீரனுக்கே உரித்தான சர்வ லட்சணங்களுடன், புயலெனப் பாய்ந்து வரும் அந்த வெண்ணிற புரவியின் மேல் வீற்றிருந்தான் ஆதித்தன். வேங்கை தேசத்தின் இளவரசன்.


ஒரு மிகப்பெரிய போரின் முழு வெற்றியைச் சுவைத்து அவன் திரும்பிக்கொண்டிருந்தாலும் அது எந்தவிதத்திலும் அவனுக்கு கொஞ்சம் கூட மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.


அந்த ராஜ பாட்டையின் இருமருங்கிலும் அரண் போன்று ஓங்கி வளர்ந்து குளுமையை பரப்பிக்கொண்டிருந்த தேக்கு, சந்தனம், ஆல், அகில் போன்ற பல்வேறு மரங்களும், இடையிடையே காணப்பட்ட மா.. பலா எனக் கனிகளைத் தாங்கிய விருட்சங்களும் கூட அவன் மனதின் வெம்மையைக் கொஞ்சம் கூட தனிக்கவில்லை.


அவனது நிழல் போன்று மற்றொரு குதிரையில் வந்துகொண்டிருந்த அவனது மெய்க்காப்பாளன் முத்தழகன், "இளவரசே! புரவிகளுக்குத் தண்ணீர் வேட்கை போலும்... சற்று இளைப்பாறிவிட்டுச் செல்லலாமா?" என பணிவுடன் வினவினான்.


"வேட்கை புரவிகளுக்கு மட்டும்தானா... இல்லை சோர்வு ஆட்கொள்ள அதன் மேல் வீற்றிருக்கும் பரிமேல் அழகனுக்குமா?" எனக் கேட்டு இடி இடி என சிரித்தவாறே புரவியிலிருந்து குதித்து இறங்கினான் ஆதித்தன்.


அவனது கேலிப்பேச்சில் புன்னகை அரும்ப, தானும் புறவியிலிந்து இறங்கிய முத்தழகன் அதன் சேணத்தைப் பற்றியவாறு, இளவரசனை பின் தொடர்ந்து, பாலாற்றை நோக்கிச் சென்றான்.


ஆதித்தனின் முகம் மலர்ந்து இருந்தாலும், அவனுடைய அகத்தில் அந்த மலர்ச்சி சிறிதும் இல்லை என்பது அவனுக்கும் புரியவே செய்தது.


அதன் காரணம் விளங்கினாலும், தனது மதிப்பிற்கும், அதனை விட மேலான அன்பிற்கும் பாத்திரமான அவனுடைய இளைய அரசனுக்கு அவனால் எந்த ஒரு உதவியும் செய்ய இயலாது என்ற நிலைமையில் இருப்பதற்கு தனக்கு தானே வெட்கிப்போனான் முத்தழகன்.


ஆற்றின் கரையை நெருங்கியதும் புரவிகளை அதன் போக்கில் இருவரும் விட்டுவிட, தண்ணீரை நோக்கி ஓடின இரண்டும்.


"பார்த்தாயா அழகா! இந்த சித்திரை கோடையிலும் ஆற்று நீரின் வேகத்தை!" என வியந்தவாறு, அந்த நதி தேவதையை வணங்கி, சிரம பரிகாரம் செய்து கொண்டு, அங்கே இருந்த புற்களின் மேல் கால்களை நீட்டிப் படுத்தான் ஆதித்தன்.


அரணாக அருகிலேயே நின்றான் முத்தழகன்.


அன்று காலையிலோ, முந்தைய தினத்திலோ மழை அங்கே ஆசி நல்கியிருக்கக்கூடும்! அது விட்டுச்சென்ற குளுமையுடன், மாலை காற்று இதமாகத் தழுவிச்செல்ல, தாழம்பூக்களின் நறுமணம் சுகமாக வந்து நாசியைத் தீண்டியது.


ஆங்காங்கே குட்டை போல் தேங்கி இருந்த தண்ணீரில், செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து, கண்களுக்கு விருந்தளிக்க, தன்னை மறந்து கண்களை மூடினான் ஆதித்தன்.


அந்த நொடிப் பொழுதிற்குள், அவனது இதயத்தில் சிறைபிடிக்கப்பட்டிருந்த சுநந்தினி தேவியின்யின் முகம் கண்களுக்குள் மேலெழும்பி வர, தாழையின் நுனியில் உள்ள கூர் பகுதி கண்ணுக்குள் தைத்ததைப்போன்று கண்களை வேகமாகத் திறந்தான் ஆதித்தன்.


உள்ளே சென்றவள் வெளியேற அவன் வாய்ப்பு கொடுத்தும் கூட வெளியேறாமல் அங்கேயே நிலைத்திருந்தாள் அந்த பிடிவாதக்காரி!


மூன்று வருடங்களுக்கு முன் வனத்தில் வேட்டைக்குச் சென்றிருந்த பொழுது, அவன் ஒரு வேங்கையைத் துரத்திச்செல்ல, அங்கே காணப்பட்ட புள்ளிமான் கூட்டத்தில் தானும் ஒரு பொன் மானாக நின்றிருந்தவளை பார்த்த முதல் பார்வையிலேயே அவள் மேல் காதல் கொண்டானே அதுதான் அவனது தவறோ!


தன் எதிரி நாடான சிங்கபுர நாட்டின் மன்னன் சிங்கமுகனின் மகள்தான் அவள் என்பதை அறியாமலேயே அவளிடம் தன காதலைச் சொல்லி அவளது கண்களெனும் கண்ணியில் மீள முடியாமல் சிக்கிக்கொண்டானே அதுதான் தவறோ.


அவளது தந்தை என்பதை அறிந்தும் சூழ்நிலை கைதியாக போரில் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு அதுவும் அவளது கண்ணெதிரிலேயே அந்த சிங்கமுகனின் சிரத்தை கொய்து, பன்மொழிகளை பேசும் அவளுடைய கயல் விழிகளுக்கு மிகப்பெரிய தண்டனை மட்டும் விதித்துவிட்டு, அவளது அருகிலிருந்து, அவள் சினத்தைத் தனித்து ஆறுதல் கூறி அவளை அமைதிப்படுத்த விழையாமல் இதோ வெற்றியைக் கொண்டாடச் சென்றுகொண்டிருக்கிறானே இதுவும்தான் தவறோ..


சுநந்தினியை எண்ணினாலே அன்று போர்களத்தில் தோல்வியைத் தழுவிய நிலையில் அவனை நோக்கி அவளுடைய கண்கள் பாய்ச்சிய நஞ்சு அவன் மனதை அறுக்கிறதே.


அந்த நினைவிலிருந்து வெளியேற எண்ணியவனாக, செங்காந்தள் மலர்களை நோக்கியவன், "அழகா! இந்த பகுதியின் பெயர் அறிவாயா நீ?" எனக் கேட்க,


"செங்கழுநீர் பட்டினம்! இளவலே!" என்றான் முத்தழகன் பணிவு மாறாமல்.


அங்கே மலர்ந்திருந்த மலர்களைச் சுட்டிக்காட்டிய ஆதித்தன், "இந்த செங்கழுநீர் மலர்கள் மிகுந்த காரணத்தினால்தான் அந்த பெயர் வழக்கில் உள்ளது தெரியுமா?" என வினவியவன், நினைவு வந்தவனாக, "மாமன்னர் எங்கே இருக்கக்கூடும் என அறிவாயா நீ?" எனக் கேள்வி எழுப்ப,


"மான் ஆடும் பதி அருகில் உள்ள தேர் துறையில் மன்னர் முகாமிட்டிருக்கிறார் இளவரசே! இளைப்பாறிவிட்டு நாளை அதிகாலை திரு முக்கூடல் எழுந்தருளுவார்!" என்றான் முத்தழகன்.


அதன் பின்பு அவர்களுடைய பயணம் தொடர்ந்தது.


காஞ்சிபுரத்தில்... பாலாறு, வேகவதி ஆறு மற்றும் செய்யாறு மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரு முக்கூடல் எனும் நதிகளின் துறையில் இன்னும் சில தினங்களில் நடைபெறவிருக்கும் சித்திரைத் திருவிழாவில், அதுவும் இவர்களது வெற்றியைக் கொண்டாடும் விழாவாகவும் அது அமைந்திருக்கவே, அதில் பங்குகொள்ளவென விரைந்து கொண்டிருந்தனர் இருவரும்.


***


அடுத்த நாள், அவனது அன்னையான வீரமாதேவியுடன் அவனது தந்தை பேரரசர் சுந்தரவர்மன் அங்கே, சீவரத்தில் உள்ள மாளிகையில் தங்கி இருக்க, மக்கள் அனைவரும் அங்கே கூட தொடங்கினர்.


சிறப்புறத் தொடங்கியது சித்திரைத் திருவிழா.


எங்கும் கொண்டாட்டங்கள், கோலாகலங்கள்.


இளைஞர் கூட்டம் வண்ண மலர்களை வாரி இறைத்துக்கொண்டும், தண்ணீரை ஒருவர் மேல் ஒருவர் பீய்ச்சி அடித்துக்கொண்டும், ஆடல் பாடல்களுடன் திளைத்திருந்தனர்.


சித்திரா பௌர்ணமி தினத்தன்று இரவில், கன்னிப்பெண்கள் ஆற்றில், விளக்குகளை மிதக்கவிட்டு, தங்கள் மனம் கவர்ந்த மணாளனைப் பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்வர்.


விண்ணில் ஒரு முழுமதி மட்டும் பிரகாசித்திருக்க, அத்துடன் போட்டியிட்டு ஆயிரம் விளக்குகள் சுடர் விடும் அழகைக் காணப் பல நகரங்களிலிருந்தும் அங்கே மக்கள் கூடுவது வழக்கம்.


அதைக் கண்டு களிக்க, அரச குடும்பத்தினர் அனைவரும் படித்துறையில் கூடியிருக்க, கரங்களில் விளக்கை ஏந்தி, தண்ணீர் நோக்கிச் சென்றாள் ஆதித்தனின் தங்கை வேல்விழி தேவி.


அவள் விளக்கைத் தண்ணீரில் மிதக்கவிட, அவளுக்கு அருகில் வந்து நின்ற சுநந்தினி, தானும் ஒரு விளக்கைத் தண்ணீரில் மிதக்க விட்டாள்.


பார்த்துப் பார்த்து வடிவமைத்து, முத்துக்களும் பவளங்களும் பதித்த சிற்பக்கூடத்துடன் கலை அழகு கொண்ட மாளிகையை எழுப்பி, அதில் யாருடன் கூடிக் குலவி இருக்க வேட்கை கொண்டானோ, அந்த பொன்மேனியாளை அங்கே கண்டதும், ஆதித்தன் ஒரு நொடி அதிர, இன்முகமாக அவளிடம் அளவலாவத் தொடங்கி இருந்தாள் வேல்விழி.


திருவிழா களியாட்டங்கள் முடிந்து, சிறிது சிறிதாகச் சூழல் மாறத்தொடங்கி இருந்தது அங்கே.


மாலை மங்கியதும் கூடுகளை நோக்கி விரையும் பறவை கூட்டம் போல, அவரவர் ஊர்களை நோக்கிப் பயணப்படத் தொடங்கினர் மக்கள்.


மன்னரும், மகாராணியாரும் இளைய பிராட்டியுடன் தலை நகரம் நோக்கிச் சென்றுவிட, நண்பனுடன் புரவியில் ஏறிப் பயணப்பட்டான் ஆதித்தன்.


சுநந்தினியின் நினைவு மனதைக் கொல்ல, நதிக்கரை எங்கும் அலைந்து திரிந்த ஆதித்தன், களைப்பு கூட, அங்கே பாய் விரித்திருந்த புற்களில் கண் மூடி சயனிக்க, ஜல் ஜல் என்று ஒலித்த தண்டை சிலம்பின் ஒலியில் கண் விழித்துப் பார்க்க, அவனை நோக்கி வந்த சுநந்தினி, அவனுக்கு அருகில் அமர்ந்தாள்.


விழி எடுக்காமல், 'அவளே தொடங்கட்டும்' என்ற ரீதியில் அவன் அவளைப் பார்க்க... என்ன பேசுவது, எப்படி தொடங்குவது எனப் புரியாமல், செங்கழுநீர் மலர்களெனச் சிவந்த இதழ்கள் துடி துடிக்க, அவளது கண்கள் அவனைச் சுற்றிச் சுழன்று, பெருக்கல் குறி போன்ற வேல் தழும்பைத் தாங்கி இருந்த அவனது மார்பில் வந்து நிலைத்தது.


அவளது மெல்லிய விறல், அந்த தழும்பை வருடவும், "சுநந்தினி என்றால் மகிழ்ச்சி, களிப்பு என்றெல்லாம் பொருள் தெரியுமா உனக்கு? என் வாழ்வில் மட்டும் நீ ஏன் பொய்யாகிப்போனாய் தேவி?" எனக் கேட்டான் ஆதித்தன் வேதனை மிக.


தன் விறல் கொண்டு அவன் இதழ் மூட விழைந்தவள், நொடி தாமதித்து, தன் செங்கழுநீர் இதழ் கொண்டு அவன் இதழ் பூட்டினாள்!


அவன் நிலை உணரும் முன்னமே அவனை விட்டு விலகியவள், "மன்னிக்க வேண்டும் இளவலே! நடந்து முடிந்த துயரங்கள் அப்படி!


உண்மை நிலை உணர்ந்து, தங்களுக்கு மாலை இடும் பேறு கிட்டவேண்டுமென வேண்டித்தான், தீபத்தைத் தண்ணீரில் மிதக்கவிட்டேன் நான்!


போர்க்களத்தில் நேருக்குநேர் நின்று போராடும் சுத்த வீரனைக் காதலை முன்னிறுத்தி புற முதுகிட்டு போகச் சொல்வது கொஞ்சமும் நியாயமில்லை என்றே உங்களைப் போர்க்களத்தில் எதிர்த்து நின்றேன்.


கண் முன்னே என் தந்தையின் சிரம் கொய்த உங்கள் வீரத்தை உணர்ந்தாலும் தங்கள் மேல் குரோதத்தை வளர்த்துக்கொண்டேன்.



போரில் வென்றாலும் எங்கள் தேசத்தை எங்களிடமே திருப்பி கொடுத்த உங்கள் உள்ளத்துக் காதல் புரிந்ததாலேயே, நீரின்றி அமையாது என்னுலகு என்பதை உணரப்பெற்றேன்.


உண்மை தெளிந்து உம்மை நாடி விரைந்து வந்திருக்கிறேன்!


உம் உயிர் அளித்து, என் உயிர் சுமப்பீரா?" அவளது கண்களிலிருந்து உருண்ட நீர் முத்துக்களை விட வேகமாக உதிர்ந்தன அவளது வார்த்தைகள்.


வினாடியும் பொறுக்காமல், அவளை அணைத்திருந்தான் ஆதித்தன்.


******


அரசியர்க்கே உரித்தான ஆடம்பர அலங்காரம். பொன்னும் மணியும் ஜொலிக்க ஆதித்தனின் அருகில் வீற்றிருந்தாள் சுநந்தினி.


காதலும்... தாபமும் உடலெங்கும் பொங்கிப் பிரவாகிக்க, ஆன்றோரும் சான்றோரும் வாழ்த்த க்ஷத்ரிய முறைப்படி திருமணம் நடந்தது. அந்த வானமே வசப்பட்ட மகிழ்ச்சி இருவருக்கும்.


மணமகளுக்கே உரித்தான நாணம் மேலோங்க... கடைக்கண் பார்வையால் சுநந்தினி ஆதித்தனைப் பார்க்க... மயக்கும் புன்னகையுடன் அவனும் இவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.


அவன் பார்த்துப் பார்த்து வடிவமைத்த மாளிகையின், அந்தப்புரத்தில்...


மனம் மயக்கும் மலர்கள் என்னென்ன உண்டோ அனைத்தும் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது அவர்களுக்கான மஞ்சம்


மஞ்சமென்று சொன்னால் தகுமோ?


அது மன்மத வாசல் திறக்கும் மாய திறவுகோல் அன்றோ!!


அதைத் திறவாமல் போனால் அவர்கள் காவிய காதல்களும் இல்லை அன்றோ?!


மலர் மஞ்சத்தை மேனி தழுவ, தன்னை தழுவி இருந்த மலரினும் மெல்லியலாளின் மென்மையில் மன்னவன் தன்னை தொலைக்க, அவளது கயலாடும் கண்களில் இதழ் பதித்தான் இளைய வேந்தன்.


மன்னவனின் திண்ணிய மார்பின், அவன் வீரத்தைத் தாங்கி நிற்கும் தழும்புகளில் இதழ் பதித்த நங்கை நல்லாளின் ஏக்கங்கள் தீர அவளை வாரி அணைத்தான் ஆதித்தன்.


காற்று அவர்களுடைய காதலைக் காலத்தில் கரைத்து, காதலை வெல்லும் சக்தி உனக்கும் கிடையாது பார்!' என அதை பார் முழுதும் உணர்த்தும் விதமாக மெல்லிய சுகந்தத்தைப் பரப்பியது.


¬முற்றும்¬

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page