top of page
madhivadhani Stories

மஞ்சக்காட்டு மயிலே 11

Updated: Jul 12, 2023

மஞ்சக்காட்டு மயிலே




தோகை 11



அன்று


மயூரியின் கல்லூரியில் ஏதோ கொண்டாட்டம். அது முடிய நேரமாகும் என்பதால், வேலையில் இருந்து நேரே வீட்டுக்கு வந்து விட்டார் சிவப்பாதம்.


கணவனுக்கு சூடாக தேநீர் பரிமாறி விட்டு அன்றைய கதைகளை வளவளத்த பூரணி, அப்போது ஆவலாக பகிர்ந்த தகவலை கேட்டு “என்ன சொல்ற பூ?” அதிர்வாக கேட்ட கணவனின் குரலின் மாறுதலை கவனியாமல்,


“சின்னைய்யா அழகனுக்கு தோப்பூர் சோமன் ஐயா மகளை நிச்சயம் செய்ய போறாங்களாம். கோயில் திருவிழா, பெரிய வீட்டு விசேஷம்னு ஊர் களை கட்ட போகுதுங்க. ‘முடிஞ்சா ஒரு நாலு நாள் முன்ன வர பாரு’ன்னு. இன்னைக்கு பேசினப்ப சரளா சொன்னா,” பூரணி தொடர்ந்து பேசி கொண்டிருக்க,


சிவபாதத்துக்கோ ‘அவர்கள் நினைத்து பார்க்க முடியாத பெரிய இடம் தான். இருந்தும் செல்ல மகள் விருப்பப்பட்டு விட்டாளே! அழகன் அத்தனை நம்பிக்கை ஊட்டும் விதம் பேசினானே! இப்போது மகளின் முதல் காதல் கருக போகிறதா? இதை அவள் தாங்குவாளா?’ இப்படி அந்த அன்பான தகப்பனுக்கு மனதில் எண்ணங்கள் பெருக்கெடுக்க,


“என்னங்க, என்ன ஆச்சு உங்களுக்கு? பதில் சொல்லாம அப்படி என்ன யோசனை?” கணவனின் தோளை பற்றினார் பூரணி.


மகள் விஷயத்தை மனைவியிடம் மறைத்திருந்தவராக, திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் சிக்குண்டவராக, “இல்ல… வெளிநாட்டு குழு வராங்கன்னு பேச்சு அடிபடுது. ஊருக்கு போக முடியுமான்னு தெரியலை பூ.” அவசரத்துக்கு ஒரு சாக்கை முன் வைத்தார்.


“அப்ப, நாங்க மட்டும் போயிட்டு வரவா?”


“அதெல்லாம் வேணாம்…” படக்கென கணவர் மறுத்து சொல்லவும், அவரை ஆராய்ச்சி பார்வை பார்த்தார் பூரணி.


“மயூவுக்கு காலேஜ் இருக்கு… போனா ஒரு வாரம் லீவ் ஆகிடும். தியரி கிளாஸ் மிஸ் பண்ணா கூட நான் சொல்லி தந்துடுவேன், பிரச்சனையே இல்ல. ஆனா, அனாடமி ப்ராக்டிகல் தவற விட்டா ரொம்ப கஷ்டம் பூ. அதுக்கு தான் பார்க்கறேன்.”


“நீங்க சொல்றது சரிங்க... முடிஞ்சா நீங்க போயிட்டு வர பாருங்க.”


“பெரிய லீவுக்கு போகலாம்… இனி அப்படி தான் போக முடியும்.” அப்போதைக்கு சமாதானப்படுத்த மனைவியிடம் அப்படி சொன்னவருக்கு ஊர் பக்கம் தலை வைக்கும் எண்ணமே இல்லை. இனி பல ஆண்டுகள் ஊருக்கு செல்லும் வாய்ப்பு அமைய போவதில்லை என்பதை பூரணியும் அப்போது அறியவில்லை.


“மயூவை அழைச்சுட்டு வர போகலியா நீங்க?” ஏதோ விலங்கியல் தொடர்பான மாதாந்திர பத்திரிக்கையில் மூழ்கி இருந்த கணவனை கேட்ட பூரணிக்கு தெரிந்திருக்கவில்லை கடந்த இரண்டு மணி நேரமாக அவர் ஒரு வார்த்தை கூட படிக்கவில்லையென!


மகளின் எதிர்காலம் குறித்து கலக்கம் கூட, லேசாக தலை சுற்றியதை ஒதுக்கியவர், அவளை அழைத்து வர கிளம்பினார். வழியில் ஒரு மருந்து கடையில் பைக்கை நிறுத்தி, அவ்வப்போது விட்டு விட்டு உண்ணும் உயர் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரை அட்டையை வாங்கினார்.


மூன்று மாதமாக அடிக்கடி மயக்கம், படபடப்பு வருகிறது. “டாக்டர்கிட்ட போகணும்.” தனக்கே சொல்லி கொண்ட சிவபாதம், ஏற்கனவே நெல்லையில் இப்படி ஒரு முறை சுகவீனம் ஆனதை, “தெரிஞ்சா வீணா கவலைப்படுவா பூ…” என்று முடிவெடுத்து மனைவியிடம் மறைத்து விட்டிருந்தார்.


“போன வாட்டி போல டாக்டர்கிட்ட பிரஷர் செக் பண்ணனும்.” என்று சொல்லி கொண்டவர், இரு ஆண்டுகளுக்கு முன்பே ஈ.சி.ஜி எடுக்க சொன்னார் மருத்துவர் என்பதெல்லாம் மறந்து விட்டவராக, மகளை பேசியில் அழைத்து அவளுக்காக வளாகத்தில் காத்திருப்பதாக சொன்னார்.


அழகனை கண்ட போது நடந்த எதுவும் மயூவை பாதிக்கவில்லை. அவளுக்கு எதை பற்றியும் கவலை அந்த நொடி வரை பிறக்கவில்லை. தந்தையின் முகம் களையிழந்து இருப்பதை கண்டவள், “என்னாச்சுப்பா?”


“ஓ… ஒண்ணுமில்ல மயூ…” அவரின் தடுமாற்ற பதிலில், பைக்கில் அமர போனவள், ஏறாமல் அவர் முன் வந்து நின்றாள்.


“ப்பா… அன்னைக்கு கொஞ்சம் அப்செட்டா இருந்தீங்க. இப்ப ரெண்டு நாளா நல்லா இருந்தவர், இன்னைக்கு ஏன் என்னவோ போல இருக்கீங்க?”


ஒரு வேளை தான் சொல்வதை கேட்டு மகள் தன் மனதை ‘ச்சீ இந்த பழம் புளிக்கும்’ என்ற அடிப்படையில் மாற்றி கொள்வாளோ என்ற நப்பசையிலும், வீட்டில் பூரணியின் முன் பேச முடியாது என்பதாலும், “சின்னைய்யாவுக்கு கல்யாணம் முடிவாகி இருக்கு.”


“யாருக்கு?” புரியவில்லை மயூவுக்கு.


“அழகன் ஐயாவுக்கு…”


“என்ன? என்னப்பா கதை சொல்றீங்க?”


“இல்ல மயூம்மா, பக்கத்து வீட்டு சரளா, போன் செஞ்சு அம்மாட்ட சொன்னாங்களாம்.”


“இருக்காதுப்பா… இல்ல… அப்படியே இருந்தாலும் அழகன், எங்க லவ் பத்தி வீட்ல சொல்லி, கல்யாணத்தை நிறுத்திடுவான்.”


“மயூ…” இப்போது கோபம் துளிர்க்க… “ஒழுங்கா பேசுன்னு எத்தனை முறை சொல்றேன்.”


“ப்ச்… ப்பா... போனை குடுங்க… இப்போவே பேசிடறேன் அழகன்ட்ட.”


“மயூ… கிராமத்துல கல்யாண நிச்சயம் வரை வரதுங்கறது சாதாரண விஷயம் இல்ல. அழகன் ஐயா, உங்க விஷயத்தை நிச்சயம் வெளிய சொல்ல மாட்டார். அப்படி அவர் உளறி வைச்சா, பிரச்சனை நமக்கு… நம்மங்கறது விட, ஊர்ல இருக்கற நம்ம சாதி சனம், உறவு முறைக்கு தான் வீண் கஷ்டம். வெட்டு குத்துன்னு ஆகிடும்.”


தந்தையின் விளக்கம் முதல் முறை சரியான முறையில் மகளின் மூளையில் பதிய… “அப்போ… நான்?”


“மயூம்மா…” இளகி வந்த சிவபாதத்தின் குரலில், செல்ல மகளுக்கு இந்த வேதனை அவசியமா என்ற வருத்தம் மேலோங்கியிருந்தது.


“நான் அழகன்ட்ட பேசணும்ப்பா…” கலங்கலாக ஒலித்த மகளின் குரலில் மறுப்பு கூறாமல் கைப்பேசியை அவளிடம் நீட்டியவர், சற்று தள்ளி போய் நின்றார்.


மனதில் ஆழ பதிந்து போன எண்ணை அவசரமாக அழுத்த தொடங்கியவளிடம் இருந்து சட்டென்று கைப்பேசியை பறித்த சிவபாதம்… “நம்பர் வித் ஹெல்ட் பண்ணி கூப்பிடு மயூம்மா” என்றார்.


“ம்ம்…” அப்பா சொல்படி அழைக்கும் நபரின் எண்ணை மறைத்து அழைத்தவளின் கால் ஏற்கபடாமல் நேரே வாய்ஸ் மெசேஜுக்கு செல்ல, அதில் அவளின் குமுறலை பதிவிட விருப்பமில்லாமல், கால்லை கட் செய்தவள், “போலாம் ப்பா” எனவும், வருத்தம் சுமந்த மனதுடன் அமைதியாக வீடு வந்து சேர்ந்தனர்.


இது இப்படி இருக்க, கெட்டதில் நன்மை போல மயூ கைப்பேசியில் இந்த மூன்று மாதமாக அழகனை தொடர்பு கொள்ளாமல் இருந்தது அவளுக்கு நன்மையாகவே முடிந்ததை அந்த பதினெட்டு வயது சிட்டு அறிந்திருக்கவில்லை.


ஆம்… மகனுக்கு மாட்டு வைத்தியர் மகள் மேல் ஈர்ப்பு எந்த அளவில் என்பதை அறுதியிட்டு அளவிட முடியாத மலையனார் செயலில் இறங்கினார். முதல் காரியமாக அவரே தடுத்து நிறுத்தி வைத்திருந்த சிவபாதத்தின் ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரை முடுக்கி விட்டு, புது மாற்றல் ஆர்டர் வரும் படி செய்து சிவபாதத்தை கூப்பிட்டனுப்பினார்.


பெரியவர் மாற்றலுக்கு ஒப்புதல் அளித்த செய்தியறிந்த சிவம் மகிழ்ச்சியானார். அவரே வரும் படி அழைத்ததும், பார்க்கும் போது நன்றி சொல்லி, மகளுக்கு கல்லூரி அட்மிஷன் கிடைத்ததும் தெரிவித்து ஆசி வாங்க போனவருக்கு பேரதிர்ச்சி அளித்தார் மலையனார்.


“உன் பொண்ணை தோப்பு பக்கம் அழகனோடு பார்த்தேன்.” மலையனார் கூர் பார்வையோடு வார்த்தைகளை அழுத்தமாக உரைத்த விதத்திலேயே சர்வமும் நடுங்கி விதிர் விதிர்த்து போன சிவபாதத்துக்கு “ஐய்…யா…” நா உலர்ந்து வார்த்தை வெளி வரவில்லை.


“ரெண்டு நாளுல மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு ஊரு விட்டு கிளம்பற. இனி இந்த பக்கம் உன் தலையை நான் பார்க்க கூடாது. பழைய மலையனா இருந்திருந்தா, இந்நேரம் உன் வீட்ல எழவு விழுந்துருக்கும். உன் நல்ல நேரம், கூப்பிட்டு நல்லத்தனமா பேசுறேன். பொட்ட புள்ளையை பார்த்துக்க… ஏதானும் எக்குதப்பா ஆச்சு, நடக்கற எதுக்கும் நான் பொறுப்பில்ல.” அமைதியாக பேசிய மலையனின் வார்த்தையில் இருந்த காரம் முகத்தில் கிஞ்சித்தும் வெளிப்படவில்லை.


அழகன் தொடர்பான விவகாரம் என்பதால் இல்லாத பொறுமையை மனிதர் இழுத்து பிடித்திருந்தார். அதற்கே அச்சம் மேலிட தொப்பலாக வியர்வையில் குளித்து, தொய்ந்து நின்ற சிவபாதம்… “ஐயா,” நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து சரண் அடைந்து விட்டார்.


“நீங்க பெரியவங்க… எம்புள்ள அறியா புள்ள! அது என்ன தப்பு செஞ்சுருந்தாலும் பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுடுங்க. உங்க சொல்படி ரெண்டு நாள்ல கிளம்பிடுவேன்.” பணிந்து கெஞ்சியவர், அதன் படியே நடந்தும் விட்டார்.


காதல் மனைவியிடம் எதையும் மறைக்காதவர், இதை மறைத்தார். மகள் காதலிப்பாள், அதுவும் அழகனை என்றெல்லாம் அவர் அந்த நிமிடம் நினைத்திருக்கவில்லை. காதலிக்கும் வயதும் இல்லையே!


கால்நடை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க அவள் எத்தனை பிரயத்தனப்பட்டால் என்பதை கண் கூடாக கண்டவராக, துடுக்காக பேசுகிறவள், பொழுது போக சைக்கிளில் ஊரை சுற்றி வருகிறவள், வழியில் பார்த்தவனிடம் ஏதானும் பேசி இருக்க கூடும் என்று தான் நம்பினார். மகள் காதலிக்க, அதுவும் பத்தாம் வகுப்பு முடித்த கையோடு அழகனை நேசிப்பால் என்பதெல்லாம் சிவபாதம் முதலில் கனவிலும் எண்ணியிராதது.

அழகன் என்ன நினைப்பில் பேசினான் என அறியாதவராக, மகனின் நடத்தையில் எதையோ கண்டதால் தான் மலையனார் தனக்கு மிரட்டல் விடுத்தார் என்று தானே ஒரு முடிவுக்கு வந்தார் சிவபாதம். மகளிடம் இது குறித்து பேச தயக்கம்.


தானே பெற்ற மகளை நம்பாவிட்டால் எப்படி என யோசித்த சிவபாதம், benefit of doubtயை மகளுக்கு கொடுத்து, ஒரு வேளை சின்னைய்யா அழகன் காதல் வயப்பட்டிருந்தாள்? அப்போதும் பிரச்சனை தங்களுக்கே என்று புரிய, அப்படிப்பட்ட பட்சத்தில் சின்னய்யா ஒரு வேளை மகளை தொடர்பு கொள்ள முயன்றால் என்று தீவிர யோசனைக்கு பின், ‘எதற்கு வம்பு, இப்போதைக்கு அவளுக்கு கைப்பேசி வேண்டாம்’ என்று முடிவெடுத்து, அதன்படி பிடிவாதமாக மறுப்பை சொல்லி, அந்த முடிவில் நின்று விட்டார்.


சென்னைக்கு இடம் பெயரும் முன் நடந்த இதையெல்லாம் மயூ, அழகன் அறியாதது போலவே, சிவபாதம் உஷாராகி விட்டார் என்பதை உணரவில்லை மலையனார். அவரின் முதல் சறுக்கல் அங்கே துவங்கியது. அப்போதும் நம்பகமான துப்பறியும் நிறுவனத்தில் சொல்லி புனேயில் வசிக்கும் மகனை ஒரு ஒன்றரை மாதம் விடாமல் கண்காணித்தார்.


அழகனின் கைப்பேசியில் இருந்து இதுவரை யார் யாருக்கு அழைப்புகள் போனது, வந்தது என அலசியிருந்தார். அதில் அவருக்கு உபயோகமான எந்த தகவலோ, ஆதாரமோ சிக்கவில்லை. அதன் பின் தான் மருதமலையானுக்கு நிம்மதி பிறந்தது.


காதலோடு கள்ளத்தனமும் பிறந்திருக்க, மயூ தங்கியிருந்த பள்ளி விடுதிக்கு எப்போதும் வெளி தொலைபேசி பூத்தில் இருந்து அழகன் அழைப்பதன் காரணமாக தான் வீட்டினர் மற்றும் அவர் அறிந்த அவனின் நட்பு வட்டம் தவிர்த்து, மகனுக்கு வேறு வெளி அழைப்புகள் வரவில்லை. இவனும் புதிதாக யாரையும் அழைக்கவில்லை என்பதை உணராமல், வயது கோளாறில் குலம் பாராமல் தடம் பிறழ இருந்த மகனை தக்க தருணத்தில் சறுக்காமல் தடுத்து, பட்ட மேற்படிப்பில் திசை திருப்பி விட்டதாக எண்ணி பெருமிதப்பட்டு கொண்ட மலையனார், துப்பறியும் ஆட்கள் மகனை பின் தொடர்வதை நிறுத்தி விட்டார்.


சிவபாதமும், அவர் குடும்பமும் குறிப்பாக மயூரி எந்த மாறுதலும் இல்லாமல் எப்போதும் போலவே இருப்பதாக அந்த நிறுவனம் கொடுத்த ஆய்வறிக்கையை நம்பி, மொட்டு விடும் முன்பாகவே மகனின் காதலை தான் கருக்கி விட்டதாக தப்பு கணக்கு போட்டார்.


எல்லாம் சரி, அவர் மலையனார் ஆயிற்றே… அப்போது பார்த்து அரசியலில் ஒரு சிக்கல் முளைக்க, எல்லாவற்றையும் இணைத்து புது வியுகம் ஒன்றை வகுத்தார். அவரின் அரசியல் பிரச்சனைக்கு முற்றும், மகனுக்கு ஒரு மூக்கனாங்கயிறு போட்டு தன் கட்டுபாட்டில் வைக்கவும் அமைந்த சரியான சந்தர்ப்பம் என திட்டம் தீட்டி, சுற்று வட்டாரத்தில் அவருக்கு ஈடான செல்வாக்கு கொண்ட தோப்பூர் சோமனின் மகளை மகனுக்கு பேசினார்.


*****************************************

ஆத்தூர்…


புனேயில் இருந்து வந்த மகனை சீராட்டி கொண்டிருந்தார் பரமு. இரு அக்காக்களும் வந்திருக்க, வீடு கலகலவென இருக்க, வீட்டினரின் கவனிப்பில் அழகன் குளிர் காய்ந்து கொண்டிருக்க, மூத்த மாப்பிள்ளை கதிர் தான் விஷயத்தை அனைவரிடமும் பகிர்ந்தான்.


“நிஜமாவாங்க…” அம்மு கணவனை ஆர்வமாக பார்க்க… இனியா, யாழினி எல்லாம், “ஹை மாமாக்கு கல்யாணம்” என சந்தோஷ மிகுதியில் குதிக்க, முகம் சட்டென மாறி விட, ஊஞ்சலில் இருந்து எழுந்து சென்று விட்டான் அழகன்.


“இனி மாமாவை யாரும் அசைக்க முடியாது. அந்த தாமோதரன் நல்லா மூக்கறுப்பட்டான். சோமனைய்யா ஆதரவு நமக்கு இருக்கப்ப, அவனால எதையும் கிழிக்க முடியாது.”


“மாப்பிள்ளை என்ன சொல்றார்? எனக்கு புரியலை, கேளு அம்மு…” அக்காவை அம்மா முடுக்குவது காதில் விழ, அழகன் இன்னமும் செவியை தீட்டி நின்றான் மாடி வளைவில்.


“பஞ்சாயத்து எலக்ஷன்ல நம்ம நிறுத்த போற வேட்பாளருக்கு எதிரா வேற ஆளை கொண்டு வரான் தாமோதரன். ‘நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க’ன்னு கட்சி மேலிடம், கழண்டுக்கிட்டாங்க. சோமனைய்யாவுக்கு மேற்கால சுத்திலும் ஏழு கிராமத்துல பெரும் செல்வாக்கு உண்டு இல்ல. அதான், அவரோட சம்பந்தம் வெச்சுக்கிட்டா, அந்த பக்க ஆதரவு எல்லாம் நமக்கு தன்னால வந்துடும்.”


“நம்ம தோப்பூர் சிங்காரம் இந்த ஐடியாவை சில மாசம் முன்னவே சொன்னப்ப, ‘அழகனுக்கு வயசு கம்மி, இப்போதைக்கு கல்யாணம் வேணாம்’னு மாமா மறுத்துட்டார். இப்போ எலக்ஷன் அறிவிச்சுட்டாங்க… இனி தாமதிக்க முடியாது. அந்த தாமோதரன் எறங்கி வர மாட்டேங்கறான். அதான், நல்ல சம்மந்தமும் ஆச்சு. நம்ம பவரும் வெளிய விட்டு போகாதுன்னு மாமா இந்த முடிவுக்கு ஒத்துக்கிட்டார்.”


கடந்த சில நிமிடங்களாக படபடத்து விட்ட அழகனின் இதயம் இப்போது சமன்பட, ‘நல்ல வேளை அப்பாவுக்கு என் காதல் தெரியாது. இது லோக்கல் எலக்ஷனுக்காக வேண்டி நடக்கற பேச்சு.’ காரணம் பிடிப்படவும், நிம்மதி பிறக்க, நொடியும் தாமதிக்காமல், நேரே அப்பாவின் முன் போய் நின்றான்.


“ப்பா, எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்.”


இப்படி மகன் வந்து நின்றாலும் நிற்பான் என சிறு சந்தேகம் மலையனாருக்கு மனதின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது. அது போலவே நடக்க மகனை கூர்ந்து நோக்கியவர்,


“என்ன அழகா? ஏன் கல்யாணம் வேணாம்?”


“ப்பா… எனக்கு இருபத்தி ரெண்டு தான் ஆரம்பிச்சு இருக்கு. இதெல்லாம் கல்யாணம் செய்யற வயசா?”


“இது தான் காரணமா தம்பி? இல்ல…”


“ப்பா… என்ன ஆச்சு உங்களுக்கு? இங்க இருந்து தோப்பு, சுகர் மில்னு வேலை கத்துக்கலாம்னு பார்த்தா, வற்புறுத்தி படிக்க புனே அனுப்புனீங்க. சரி, நம்ம பிசினெசை வேற லெவலுக்கு மேல கொண்டு வர உதவும்னு நானும் அவ்வளவு தொலைவுல காலேஜ்ல சேர்ந்துட்டேன். இப்போ ஏதோ லோக்கல் சப்ப மேட்டரோட என்னோட கல்யாணத்தை முடிச்சு போட்டு, என்னப்பா இதெல்லாம்? கல்யாணம் என்னோட வாழ் நாள் முழுசும் சம்பந்தப்பட்ட முக்கியமான நிகழ்வுப்பா.”


“எப்போத்துல இருந்து அரசியலோட சொந்த வாழ்க்கையை கலக்க ஆரம்பிச்சீங்க? அந்த பொண்ணு ஏற்கனவே லவ் வேற பண்ணுது. நானே நெல்லையில சில முறை பார்த்து இருக்கேன். என் ஃபிரெண்ட்ஸ் கூட சேர்ந்து அந்த பொண்ணையும், அவ சுத்திட்டு இருந்த பையனையும் பத்தி வம்பு பேசி இருக்கேன். இப்போ அவளை கட்டினா என் ஃபிரெண்ட்ஸ் என்னை பத்தி என்ன நினைப்பாங்க?”


அதுவரை மகனை பேச விட்டு வலை விரித்து காத்திருந்த தகப்பன், திடுக்கிட்டு… “என்ன? என்ன சொல்ற அழகா?” பதட்டமானார். மகனுக்கு செக் வைக்க காய்களை சாதுரியமாக நகர்த்தி விட்டதாக இறுமாந்திருந்த மலையனாருக்கு இது புது சேதி.


“அந்த பையன் அவங்க மினரல் வாட்டர் ஃபேக்டரியில வேலை பண்றான். சோமன் ஐயா மக இப்படி அவங்ககிட்ட கை கட்டி கூலி வாங்குற ஒருத்தனோட பழகலாமா? யார் யார் கூட சுத்தறதுன்னு தராதரம் இல்லாம போச்சுன்னு நாங்க எவ்ளோ பேசி இருப்போம். ஐயா லெவல் என்ன? அந்த பிள்ளைக்கு புத்தி ஏன் இப்படி போச்சுதுன்னு சோமன் ஐயாவுக்காக வருத்தப்பட்டிருக்கேன்” மனதார அந்த பெண்ணிடம் மன்னிப்பு வேண்டி கொண்டு, அவளை பற்றி தன் தந்தைக்கு எப்படி சொன்னால் புரியுமோ அந்த விதமாக கரைத்தான் அழகன்.


மகள் அந்தஸ்து குறைந்தவனோடு சுற்றுவது அறிந்து தான் இந்த கல்யாண பேச்சுக்கு ஆர்வம் காட்டினார் சோமன். இந்த உள்குத்தை மலையனார் தான் உணர்ந்திருக்கவில்லை.


லெவல், தராதரம் போன்ற சொற்களை அழகன் உச்சரிக்க கேட்டவர், மகன் தப்பிதமாக ஏதும் செய்யவில்லை என்ற நிம்மதி ஊற்றெடுக்க, தனக்கு பிறந்த சந்தேகத்தினால், மகனின் வாழ்க்கையில் பெரும் குழப்பம் நேர்ந்து இருக்குமே என சங்கடம் எழ, இருந்தும் முற்றிலும் கல்யாண பேச்சை கை விடவும் மனமில்லாமல், “சரி அழகா, நான் வேற இடம் பார்க்கறேன்.”


“அப்பா… மொதல்ல இந்த எம்.பி.ஏ.வை நல்லபடியா முடிக்கறேன். இப்போதைக்கு, உங்க பையன்னு மட்டுமே பேரெடுத்த இந்த செந்தூர் அழகனுக்கு ஒரு தனி அடையாளம் என் முயற்சியால வரட்டும். அதுக்கு, தொழில்ல ஏதானும் பெருசா நான் செய்யணும். அப்புறம் என்ன? கெட்டி மேளம் தான். நீங்க முன்ன இருந்து ஆசீர்வாதம் பண்ணுங்க.”


மகனின் பேச்சில் குளிர்ந்தவர், “சரி ராசா உன் இஷ்டம் போல செஞ்சுடலாம்” என அந்த பேச்சுக்கு முற்று வைத்தார்.


அதற்குள் ஊரில் சேதி கசிந்திருக்க, ‘சமாளிப்போம் சோமனை’ என களம் இறங்கினார் மலையனார். மகன் மீது மலையளவு அவருக்கு நம்பிக்கை. பிசிறில்லா அவனின் பேச்சில் அவரும் விழுந்து விட்டார். கூடவே எதுக்கும் அந்த டிடெக்டிவ் பயலுகளை ஒரு பார்வை வெக்க சொல்லணும் என நினைத்து கொண்டார்.


இப்படி பல விஷயங்கள் ஆத்தூரில் நடக்க, அங்கோ, மயூ பெருங்கோபத்தில் இருந்தாள். அழகன் சிக்கி இருந்தால் குதறி இருப்பாள். அவனோ, மேலும் இரு முறை மயூ முயன்ற போதும் பேசியை எடுக்கவில்லை. சிவபாதத்தின் எண்ணை அழகன் நன்றாகவே அறிவான். ஒரு வேளை நேரடியாக எண் டிஸ்ப்ளே ஆகி இருந்தால் அழைப்பை ஏற்று இருப்பானோ என்னவோ! எண் இல்லாமல் வந்த அழைப்பை, விளம்பர அழைப்பாக ஏற்காமல் விட்டு விட்டான்.


சோமனை நேரடியாக எதிர்கொண்டார் மலையனார். மகன் தனக்கு சொன்னதை மறைக்காமல் தெரிவித்து, “வேணாம் சோமா… அவனுக்கு இஷ்டம் இல்ல… விட்டுடலாம்.”


“பாவி மக குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வெச்சுடுவா போல… அவனை தூக்கிட்டோம். இவ எப்ப என்ன பண்ணுவான்னு இருக்கு…”


“அழகனுக்கு விஷயம் தெரியலன்னா வேற… அவனுக்கு தெரிஞ்ச பின்ன, நாளை பின்ன கல்யாண வாழ்க்கையில சிக்கல் வந்துட்டா கஷ்டம். அதுக்கு பாக்கறேன்… இல்லைன்னா, நான் உதவாம இருப்பேனா?”


“விடு மலையா, எல்லாம் அவ விதிப்படி தான் நடக்கும். மதுரையில ஒரு வரன் இருக்கான். அதை முடிக்க பாக்கறேன்.”


யார் எவர் என விசாரித்து சோமனுக்கு ஆறுதல் சொல்லி விடைபெற்ற போது அவரின் அரசியல் ஆதரவும் பெற்று விட்டே கிளம்பி இருந்தார் மலையனார்.


*******************************


ஒரு வாரம் ஊரில் தங்கி விட்டு புனே வந்த அழகன் முதல் வேலையாக ரயில் நிலையத்தில் இருந்தே சிவபாதத்தின் எண்ணுக்கு அழைத்தான். மயூ வீட்டில் இருக்கும் நேரம் என அறிந்தே அழைத்தான்.


பூரணி, அக்கம் பக்கம் பெண்களோடு கீழே வாக் சென்றிருக்க, மாறனும் வேலையில் இருக்க, மகளிடம் பேசியை நீட்டினார்.


மௌனமாக இருந்த மயூவிடம், “மயூ… ப்ளீஸ் பேசு… பாரு எனக்கு கல்யாணம் பேசினாங்கன்னு உனக்கு நிச்சயம் தெரிஞ்சுருக்கும். அது நின்னதும் சொல்லி இருப்பாங்க.” மளமளவென நடந்ததை சொன்னவன், “நீ அப்செட்டா இருப்பேன்னு தெரியும். அங்க வெச்சு ஏதும் பேச எனக்கு இஷ்டமில்ல. அதான் புனே வந்து இறங்கின கையோட உனக்கு கூப்பிடறேன்.”


“ஏன் உன் அப்பாகிட்ட நாம லவ் பண்றதை துணிச்சலா சொல்லல நீ?”


“என்ன உளறுற மயூ?”


“நாம… நீ என்னை காதலிக்கற தானே? என் அப்பாகிட்ட நமக்காக நான் பேசலை? நீ ஏன் மறைக்க பார்க்கற? தைரியமா சொல்லி இருக்கணும் நீ.”


“மயூ… புரியாம பேசாதே! நான் புனேல, நீ சென்னையில… இதுக்கு நடுவுல ஊர்ல இருக்கற உன் ரிலேடிவ்ஸ் எதுக்கு நம்ம லவ்வால அவஸ்தைப்படணும்?”


“அப்போ உன் அப்பா பிரச்சனை பண்ணுவார்? அப்படி தானே?”


“அவங்க அப்படி தான். நீ படிச்சு முடி, நானும் பிசினஸ்ல செட்டில் ஆகிடறேன். அப்போ தான் என்னால அப்பாகிட்ட நம்ம விஷயத்தை சொல்ல முடியும்.”


“இப்போ இல்லாத தைரியம் அப்ப எங்க இருந்து வரும் உனக்கு?”


“மயூ… எனக்கு தைரியம் இல்லைன்னு சொல்லாதே. இதுல அவசரத்தை விட நிதானமா விவேகமாக நடக்கணும்.”


“நல்லா சப்பைக்கட்டு கட்டு. இந்த பொண்ணை புடிச்சு இருக்குன்னு சொல்ல உனக்கு இத்தனை தயக்கம் அவசியமா? இதை உன்கிட்ட நான் எதிர்பார்க்கல!”


“இன்னைக்கு அந்த சரண்யா… அடுத்து இன்னொருத்தியை நிறுத்துவாங்க. அப்பாவுக்கு பயந்த நீயும், ஆயிரம் பொய் சொல்லி வர பொண்ணுங்களை தட்டிகிட்டே இருப்ப அப்படி தானே?” பின்னாளில்… தானே இதை தான், செய்ய போகிறோம் என்று அறியாமல் ஆவேசமாக வாதிட்டு கொண்டிருந்த மயூவிடம், எத்தனையோ தன்மையாக பேசி புரிய வைக்க அழகன் பார்த்தான்.


குறுக்கே பேச எத்தனித்த அப்பாவை பார்வையாலே அடக்கியவள், “எப்போ பயமில்லாம உன் அப்பாகிட்ட சொல்லறியோ அன்னைக்கு என்கிட்டே பேசு. அதுவரை உன்கிட்ட பேச நான் விருப்பப்படலை. உன்னை பிடிக்கும், லவ் பண்றேன். எல்லாம் சரி… எனக்கு இருக்கற திடம் உன்கிட்ட இருக்கான்னு தெரியலை. பை அழகா…” இப்படி அழகனிடம் கத்தரித்தவள் எப்படியும் அவளை சமாதானம் செய்யவேனும் தன் அப்பாவிடம் வாய் திறப்பான் அழகன் என்று நம்பினாள்.


அவளின் அப்பாவின் சூழ்நிலையை எடுத்துரைக்கும் விதமான பேச்சாகட்டும், அழகனின் தன்னிலை விளக்கமாகட்டும் சற்றே புரிந்தாலும், மனமுதிர்ச்சியும் அனுபவமும் இல்லாத மயூவுக்கு அவளின் காதலின் முன் மற்ற காரணங்கள் பெரிதாக தோன்றவில்லை.


செல்லமாக வளர்த்த மகளின் பிடிவாதத்தை அறிந்தவராக, இப்போது அவள் மனம் படும் வேதனை வேறு அந்த அன்பான தந்தையை வாட்ட, எப்படி பேசினால், மயூவுக்கு விளங்கும் என்று புரியாமல்… தவித்து தான் போனார் சிவபாதம்.


தந்தையை தான் மிகவும் அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறோம் என்ற பிரஞை இல்லாத மயூரி, அவளின் பிடிவாதத்தை கை விட மறுத்தவளாக, அழகன் மீது கொண்ட கோபத்தை கை விடாமல் இருந்தாள்.


அவளின் இத்தனை வயதில் போன் வாங்கி தர அப்பா மறுத்த விஷயம் தான் முதல் முறை அவள் விருப்பத்துக்கு மாறாக நடந்த ஒன்று. அதன் பிறகு மலையனாரிடம் மனம் திறக்க அழகன் மறுத்தது. இது போல ஏமாற்றங்களை அது வரைக்கும் சந்தித்திராதவள், அதிலும் இவள் இழுப்புக்கு வீட்டினர் வளைந்தே பழகியதில், பேசா மடந்தையாக அழகனிடம் காரியம் சாதிக்க பெண் மயில் முடிவெடுக்க, அடுத்த ஒரு மாதம் நாட்கள் கரைய, நேரில் சென்று பேசி தீர்க்கலாம் என்று முடிவு செய்திருந்த அழகனும் அதன் பின், மயூவை சமாதானம் செய்ய முயலவில்லை.


காதலனின் மௌனம், நிச்சயம் மயூ எதிர்பாராதது. பக்குவம் இல்லா மனம் மேலும் முறுக்கி கொள்ள, காலம் அவர்களுக்கு வகுத்திருந்த திட்டங்களை அறியாத இளையவர்களுக்காக நில்லாமல் அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறின.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page