top of page

மஞ்சக்காட்டு மயிலே 16

மஞ்சக்காட்டு மயிலே 16


தோகை 16


கலவையான உணர்வுகளின் தாக்கத்தில் நேரம் சென்றே கண் உறங்கிய அழகனை விடியும் முன்னமே அழைத்து விட்டாள் மயூரி.


“என்ன செல்ல மயிலுக்கு விடியறதுக்கு முன்ன என் ஞாபகம்?”


“ம்ம்… மறந்தா தான் புதுசா நினைப்பாங்க. இன்னும் என்ன தூக்கம் உனக்கு? இப்போவே கிளம்பி ஆத்தங்கரைக்கு வா.”


“இனி நாம சந்திக்க வேணாம் மயில். கட்சி மாநாடு நடக்க இருக்கறதால ஊரில ஆள் நடமாட்டம் கூடிடும். கல்யாணம் முடியற வரை யார் கண்ணுலயும் சிக்க வேணாம் மயிலம்மா.”


“ப்ச் அழகா… நான் இன்னமும் அம்மாட்ட எதையும் சொல்லலை. நீ என்னடான்னா பத்து நாள்ல கல்யாணம்னு ஏற்பாடுகளை தீவிரமா செஞ்சுட்டு இருக்கே! முதல்ல இன்னைக்கு நீ அம்மாவை மீட் பண்ணனும். அதுக்கப்புறம் இந்த கல்யாண ஏற்பாடு நடக்கணுமா வேணாமான்னு முடிவு பண்ணுவோம்.”


“ஹே என்ன புதுசா குண்டை போடுற?”


“உன் வீட்ல சம்மதிச்சா போதுமா? எனக்கு அம்மாவோட மாறனோட சம்மதம் முக்கியம்! என்னை கல்யாணம் செய்யணும்னா அவங்களை கன்வின்ஸ் பண்ணு நீ முதல்ல.”


“எங்க வீட்ல நான் தானே பேசினேன். அதே போல உன் அம்மா, அண்ணாகிட்ட நீயே எடுத்து சொல்லு மயில்.” வேண்டுமென்றே பேசினான் அழகன்.


“கட்சி கூட்டம், சட்டசபைன்னு வெறும் வாயில வடை சுடுறதுல இப்போ நீங்க ரொம்ப தேறிட்டீங்க மாண்புமிகு அமைச்சரே!”


“ஒய் மயிலு… நக்கல் கூடி போச்சு உனக்கு!”


“டாபிக் மாத்தாம ஒழுங்கா, நீயே நேரா அம்மாட்ட பேசினா தான், அவங்களுக்கு புரியும். எனக்கு ரொம்ப படபடப்பா இருக்கு. அம்மா ஒத்துக்கலைன்னா?”


“கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா” அழகன் விளையாட்டாய் பாட…


“நிச்சயமா இல்ல… அம்மாவும், அண்ணாவும் சம்மதிக்காம நமக்கு நோ டும் டும்…”


“ஹே இதெல்லாம் புதுசு புதுசா கிளப்பி விடுற?” அழகனுக்கு பூரி அம்மா பற்றி கலக்கம் இல்லை. மாறனை அத்தனையாக தெரியாது. அவன் மறுப்பானோ என தோன்ற,


“சரி, வரேன். அம்மாவை அழைச்சுட்டு வா. நல்லா கண்ணு தெறந்து சுத்திலும் பார்த்து செக் செஞ்சுட்டு நட. அப்புறம் இன்னைக்கு கல்யாண புடவை எடுக்கணும். இங்க வீட்டுக்கு கொண்டு வராங்க… விடியோ கால் போடறேன். பிடிச்சதை செலக்ட் பண்ணனும்.”


“நீ மொதல்ல அம்மாட்ட பேசு… பிறகு இதெல்லாம். பை அழுக்கு பையா.”


அதன் பின் உறக்கம் சுத்தமாக கலைந்து விட்டது இருவருக்கும். எழுந்து கிளம்பிய மயூ, அம்மாவை எப்படி அழைத்து செல்ல என திட்டமிடலானாள்.


அழகன் முதல் வேலையாக தன் கூட்டாளியான பூரணிக்கு மெசேஜ் தட்டி விட்டே படுக்கையை விட்டு எழுந்தான். சௌந்தருக்கு ஒரு குறுஞ்செய்தி, அன்றைய மற்ற வேலைகள் தொய்வில்லாமல் அதே நேரம் இவன் நேரடியாக செல்லாமல் நடப்பதற்கான கட்டளைகளை வாய்ஸ் மெசேஜ்களாக பதிந்து உரியவருக்கு அனுப்பி விட்டு, கிளம்பி தோப்பு செல்ல தயாரானான்.


“நான் வாக்கிங் போயிட்டு வரேன் ம்மா,” உம்மென்று ஹாலில் அமர்ந்திருந்த பரமு அம்மாவிடம் தகவலாக சொன்னவன், நொடியும் நில்லாமல் பறந்து விட்டான். பேசியில் இருக்கும் பாதுகாப்பு கேமராக்களை பார்வை இட்டவன், தோப்பின் மறு பக்கம் ஈ காக்கை நடமாட்டம் கூட இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, ஆத்தோர சரிவில் இறங்கினான்.


எழும்பி வந்த பூரணி அம்மா, நடை பயிற்சிக்கு தயாராகி ஹாலில் அமர்ந்திருந்த மகளை கண்டார்.


“ம்மா, நீயும் என்னோட வாக்கிங் வாயேன்.”


“அதெல்லாம் வாசலுக்கும், உள்ளுக்கும் நூறு வாட்டிக்கு மேல தினமும் நான் நடக்கறதே போதும் மயூ.”


“ம்மா, அதெல்லாம் எக்ஸர்சைஸ் ஆகாது.”


“யாருடி இவ… பாரு என்னோட ஆப் சொல்லுது ஒரு நாளைக்கு ஆறாயிரம் ஸ்டெப்ஸ் மேல எடுத்து வைக்கறேனாம். அதெல்லாம் வாக்கிங்க்ல சேர்த்தி தான்.”


டெக்னலாஜியை துணைக்கழைத்த அம்மாவின் பேச்சில் டென்ஷன் கூடி விட, “காலங்கார்த்தால ஆத்தோரம் சிலு சிலு காத்து, அதை சுவாசிக்கறது போல வராது. இன்னைக்கு ஒரு நாள் வா… அப்புறம் உனக்கு பிடிக்கலைன்னா நான் வற்புறுத்த மாட்டேன். வாம்மா… நான் வந்து வேலைக்கு போகணும்.”


மேலும் பிகு செய்யாமல் மகளோடு வந்தவர், அவள் சென்ற பாதையின் பாதியை ஏற்கனவே ஆராய்ந்து வைத்திருக்க, “முள்ளு செடியா இருக்கு மையூ…”


“அதெல்லாம் ஒண்ணும் செய்யாது… வாங்க.”


“இந்த செடி கொடி மேல உரசிக்கிட்டு அப்படி என்ன வாக்கிங் உனக்கு? வேணாம், வீட்டுக்கு போலாம் மயூ…” வேண்டுமென்றே அன்னை வீம்பு செய்வதறியாதவளாக,


“அட, ஒரு நாள் இயற்கையோட ஒன்றி பாரேன் பூம்மா! அங்க பறவையெல்லாம் நான் வரலைன்னு சோக கீதம் வாசிக்கும். வாங்க வந்து அந்த இசை வெள்ளத்துல நனைவீங்களாம்!” வாய்க்கு வந்த சமாதானம் சொல்லி, இப்படியாக தோப்பின் பக்கம் இருந்த சாலையை எட்டி விட்டனர்.


“இது மினிஸ்டர் வீட்டு தோப்பில்ல?”


“அப்படியாம்மா? எனக்கு தெரியாது!” முழு பூசணியை சோற்றில் மறைத்த மகளை கண்டு சிரிப்பு வர, அதை பாடுபட்டு அடக்கி, அவள் பின்னே நடந்தார்.


சாலையை கடந்து, மயூ சரிவில் இறங்க துவங்கவும், “இங்க என்ன வழுக்குது? வாக் போலாம்னு சொல்லிட்டு, இதென்ன சறுக்கு பாதையில போற? வா நாம ரோட்டோரமா போலாம் மயூ.”


“இப்படி போனா தான் ஓடுற ஆத்தை பார்க்க முடியும்மா.”


“நாம நடக்க தானே போறோம்… நீந்த போகலைல்ல? நமக்கு ரோடு போதும் மயூ.”


படுத்தி எடுத்த அம்மாவின் பேச்சில் சற்று கடுப்பானவள், “ம்மா… சும்மா இன்னைக்கு ஒரு நாள் வாங்க…” விறுவிறுவென அழகன் காத்திருக்கும் பகுதிக்கு போனாள்.


தூரத்திலேயே அழகனை கண்டு விட்ட பூரணி வேண்டுமென்றே, “மயூ அங்க யாரோ நிக்கிற மாதிரி இருக்கு.”


“எல்லாம் தெரியும் வாங்கம்மா…”


“நாம இந்த பக்கம் வரக் கூடாதோ?” விளையாட்டாய் தான் சொன்னார் பூரணி. அப்பேச்சில் சட்டென நின்று விட்டாள் மயூ.


“என்ன மயூ, நின்னுட்டே த்யானம் பண்றியா?” என்றவர் மகளின் முகம் வாடி இருப்பதை கண்டு, “என்ன மயூ?” என்றார்.


வெறுமே தலையை அசைத்தவள் அழகனை நோக்கி நடக்க, “மயூ அது மினிஸ்டர்… அவர் இங்க இருக்கப்ப…”


“ம்மா… வாங்க,” இப்போது அம்மாவின் கரம் பற்றி வேகமாக அழகனை நெருங்கினாள்.


மயூவின் முகத்தில் மட்டுமே டன் கணக்கில் டென்ஷன். அவள் முன் நின்றிருந்த அழகனும், பின் நின்று விட்ட பூரணியும் மலர்ந்த முகமாகவே இருந்ததை கவனிக்கும் நிலையில் பெண் மயில் இல்லை.


“ம்மா… ம்மா… இவர்…”


“மினிஸ்டர் சார்… வணக்கம் சார்” பூரணி விடுவதாய் இல்லை, கை கூப்பி பெரிய வணக்கத்தை வைத்தார்.


“ப்ச்… இல்ல… நான்…” தயங்கியவள், உதவேன் என அழகனை கெஞ்சுதலாக பார்த்தாள்.


இப்போது மயூவின் பக்கம் இடைவெளி விடாமல் நெருங்கி வந்த அழகன், அவள் புஜத்தை பற்றி, சட்டென பூரணியின் காலில் விழுந்ததும், மயூவுக்கு மட்டுமல்ல பூரணிக்கும் இது அதிர்ச்சியே.


“ஐயோ… என்ன தம்பி இது?”


“எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க அத்தை.”


“என் ஆசீர்வாதம் உங்க ரெண்டு பேருக்கும் எப்போவும் உண்டு. எழுந்தரிங்க தம்பி.” அம்மா மற்றும் அழகனின் சகஜ பேச்சு அப்போது தான் உரைக்க, வேகமாக எழுந்த மயூ, இருவரையும் மாற்றி மாற்றி கண்களை உருட்டி குழப்பமாக பார்க்க,


“ஒரு வழியா உங்ககிட்ட சொல்ல உங்க பொண்ணுக்கு தைரியம் வந்துடுச்சு போல அத்தை.”


“இப்போவும் அவளா ஒண்ணும் சொல்லலை. நீங்க கை கொடுத்து பொசுக்குன்னு கால்ல விழுந்ததால எனக்கு எல்லாம் புரியும்னு மௌனமா நிக்கறா.” பூரணியின் மனத்தாங்கள் குரலில் தெறித்தது.


“ம்மா…” பெற்றவளை பார்க்க சங்கடப்பட்டு மயூ தலை கவிழ, “நான் தான் அவ, அவ தான் நான்… நான் சொன்னா என்ன அவ சொன்னா என்ன அத்தை?” ஏற்கனவே அழகனை பற்றி அறிவார். இப்போதைய அழகனின் பேச்சில் பூரணிக்கு இன்னமும் மன நிம்மதி கூடினாலும் மகள் பல வருடம் ஒரு விஷயத்தை மறைத்த அந்த வலி மேலோங்க, பேச துவங்கினார்.


“செல்லமா, அத்தனை பாசத்தை கொட்டி, சீராட்டி வளர்த்த பிள்ளை, எப்போவும் என்னை ஒரு தோழியா நினைச்சு, எல்லாத்தையும் வெளிப்படையா பேசுற சுதந்திரம் கொடுத்து நான் வளர்த்ததா பெருமையா நினைச்ச மக, அவளோட லவ் விஷயத்தை தைரியமா பெத்தவகிட்ட சொல்ல தயங்கினா, ஒரு அம்மாவா நான் தோத்து போயிட்டேன் தம்பி.”


ஏற்கனவே குழப்பத்தில், பதைபதைப்பில் இருந்த மயூ, பூரணியின் குற்றசாட்டில் மேலும் கலங்கி, “ம்மா… சாரிம்மா… சொல்ல கூடாதுன்னு இல்ல…” அம்மாவின் கைகளை பற்றியவளின் கண்களில் கண்ணீர் வழிய துவங்கியது.


ஏற்கனவே படப்படப்பாக இருப்பதை மயூ வெளிப்படுத்தி இருக்க, இப்போது பூரணியின் பேச்சில் காயப்பட்டு மேலும் கலங்கி விட்டவளை காண சகியாதவன், “என்ன அத்தை, அவளே டென்ஷன்ல இருக்கப்ப, அவளை மேல அழ விடுறீங்க? முதல்ல சந்தோஷமா பேசுங்க.”


“ஒண்ணுமில்ல மயில், அம்மாவா அவங்க ஆதங்கத்தை மனம் திறந்து கொட்டறாங்க. மத்தபடி அத்தைக்கு நம்ம கல்யாணத்துல பரிபூரண சம்மதம். சொல்லுங்களேன் அத்தை,” உள்ளத்தை கொள்ளை கொண்டவளை சமாதானம் செய்து, அவளை பெற்றவளை ஆதரவுக்கு பார்த்தான் அந்த அன்பு காதலன்.


அழகனை பார்க்க பூரணிக்கு மனம் நிறைந்தது. ‘என் பெண்ணிடம் என் மனக்குமுறலை நான் கொட்ட கூடாதா? நீ யார் எங்கள் நடுவே?’ என்றெல்லாம் குதர்க்கமாக தோன்றவில்லை பூரி அம்மாவுக்கு. அவர் கண்களில் பட்டு கருத்தை கவர்ந்ததெல்லாம் தன் மகளின் சுணங்கிய முகம் காண பொறுக்காத அன்பு மணாளனே.


“தம்பி, இது போலவே எப்போவும் மயூவுக்கு துணை நிக்கணும் நீங்க. பொண்ணை பெத்த அம்மாவா எனக்கு வேற என்ன வேணும்?”


சில நொடி அமைதிக்கு பின் நிலைமையை கையில் எடுத்த அழகன் முன்னிரவு அம்மு மற்றும் கதிரோடு பேசியதை விளக்கி அன்று காலை புடவை எடுப்பது வரை கடகடவென சொல்லி முடித்தான்.


அதன் பின் பூரணியும், அழகனுமே பேசி கொண்டனர். மயூவுக்கு பெரிய குழப்பம் தீராமல் அவள் கவனம் அப்பேச்சில் இல்லை.


“மாறன் ஒத்துப்பான் தானே அத்தை?”


“அவன் கவலை உங்களுக்கு வேணாம் தம்பி.”


“அண்ணா சம்மதிக்கணும்னு என் வீட்டம்மா ஆர்டர் போட்டுட்டாங்களே அத்தை. நான் அதை மீற முடியாதே! இப்ப என்ன பண்ணலாம்?”


“ஹ ஹ ஹா,” சிரித்த பூரணி, “இப்போவே ரொம்ப இடம் கொடுக்காதீங்க. தலையில ஏறிப்பா… சூதனமா இருங்க தம்பி.”


“அம்…ம்மா…” மயூ சிணுங்க… “சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு? அது போல பொண்டாட்டிக்கு ஆமாம் போடாத புருஷன் எங்க இருக்கான்? இதெல்லாம் சாதாரணமப்பா,” அழகன் சிரிக்க… மற்ற இருவரும் உடன் சேர, லேசான மனநிலையோடு மூவரும் சாலை அருகே வந்தனர்.


போனில் கேமராவை செக் செய்த பின்னே தான் அவர்களை சாலை மேட்டுக்கு அனுப்பிய அழகன் மேலும் சிறிது நேரம் அங்கேயே உலாத்தி கொண்டு, சில பல விஷயங்களை யோசித்து மனதில் திட்டங்கள் வரிசை படுத்தி, மீண்டும் யாரும் இல்லை அங்கே என ஊர்ஜிதப்படுத்திய பின் தோப்புக்கு போனான்.

வீட்டுக்கு போன பூரணி அம்மா தன் அறைக்குள் நுழைய, என்ன தான் அழகன் முன் சிரித்து பேசினாலும், அவரின் மனவருத்தம் புரிய, ஏன் மறைத்தோம் அம்மாவிடம் என்ற கேள்விக்கு அவளிடம் விடை இல்லை.


ஏனோ, அன்றைய நிலையில் அப்பாவின் செல்ல பிள்ளையாக அவருக்கு விஷயம் தெரிய வந்ததில், அவரின் மறுப்பில் ஏற்பட்ட அதிர்வில் குழப்பம் பிறக்க, என்ன தான் ‘அம்மாகிட்டே சொல்ல வேணாம்’ என்று சிவபாதம் மகளுக்கு உத்தரவு போட்டிருந்தாலும், ஈருடல் ஓர் உயிரான பெற்றோரிடம் ஒளிவு மறைவில்லை என்பதினால் அப்பாவே எப்படியும் சொல்லிடுவார் அம்மாவிடம் என்ற எண்ணத்தில் ஆரம்ப நாட்களில் தந்தை மேல கொண்ட கோபத்தில் மயூ முறுக்கி கொண்டு திரிந்தது உண்மை.


அம்மா ஏதும் இவளை கேட்காத போது ‘உண்மையாகவே அப்பா சொல்லவில்லையா? அம்மாவிடம் விஷயங்களை மறைக்க கூட செய்வாரா அப்பா?’ என யோசித்தவள், மனைவி மீது கொண்ட கரை காணா காதலில் அவளுக்கு வீண் கவலை வேண்டாம் என்ற அக்கறையில் சிவபாதம் இந்த விஷயத்தை பூரணியிடம் மூச்சு விடவில்லை என்பது அந்த இளம் சிட்டுக்கு புரியவில்லை.


அப்பாவின் மறைவுக்கு தான் ஒரு விதத்தில் காரணம் என்ற குற்ற உணர்வு, பல மாதங்களாக அவளிடம் அம்மா ஏதும் விசாரிக்காதது எல்லாம் சேர்ந்து, பின் இனி அழகன் வேண்டாம் என்ற முடிவோடு இருந்தவளுக்கு இது குறித்து பேசும் சந்தர்ப்பம் என்ன அவசியமும் அதன் பின் அமையவில்லை. இந்த சில மாதங்களாக அவளே சொல்லி இருக்கலாம். ஆனால் ஏதோ தயக்கம் அவளை தடுக்க, இப்போது கல்யாணம் வரை வந்து விட்டது.


குளித்து கிளம்பி வந்த பூரணி, விட்டத்தை பார்த்து யோசனையில் ஆழ்ந்து கிடந்த மகளை கண்டார்.


இதுவே சாதாரண கல்யாண ஏற்பாடு எனில் மகள் முகம் பூரிப்பில் ஜொலித்திருக்குமே! இப்போது கவலையில் கசங்கி இருக்கும் செல்ல மகளின் மதி முகத்தை காண சகியாமல், வேண்டுமென்றே,


அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.


அவர் போக்கில் பாடலை சத்தமாக பாட துவங்க, அதில் நடப்புக்கு வந்த மயூ, “ம்மா…” சிணுங்கி கொண்டு, “ம்ம்மா… நெஜமா சாரி, உன்கிட்ட மறைக்கணும்னு இல்ல. வேணாம்னு முடிவு செஞ்சதை பத்தி பேச பிடிக்காம விட்டுட்டேன்.”


“இப்போ இதெல்லாம் பேசறதுக்கு நேரமில்லை மயூ.”


அவர் நா இதை உதிர்த்தாலும், உள்ளம் கொண்ட வலி முகத்தில் அப்பட்டமாய் தெரிய, “அப்பா வேணாம்னு சொன்னார். அவர் பேச்சை புரிஞ்சுக்கற பக்குவம் அப்போ இல்லாம, அப்பாவோட சண்டை போட்டிருக்கேன். அவர் போன பின்னே, அவரோட இழப்பு ஈடு செய்ய முடியாததுன்னு தினமும் நான் பட்ட வேதனையும், அழகனோடான உறவை முறிச்சுக்கறதா அவரோட கடைசி நிமிஷங்கள்ள அப்பாவுக்கு கொடுத்த வாக்கால, எல்லாம் முடிஞ்சுதுனு என்னை நானே ஏமாத்திகிட்டதால நான் அனுபவிச்ச வேதனை எனக்கு மட்டும் தான் தெரியும்மா! குற்ற உணர்வில் உன்கிட்ட பேச நா கூசி போச்சு. அப்புறம் கால போக்கில் எட்டா கனின்னு நானே மனசை தேத்திக்கிட்டேன். அதுக்கப்புறம் இதெல்லாம் சொல்லி அனாவசியமா உன்னை கஷ்டபடுத்த விரும்பலை.”


மகளை தோள் சாய்த்தவர், “தம்பி வந்து என்கிட்டே விஷயத்தை சொன்னப்ப எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா மயூ? பொறுப்பில்லாத அம்மாவா இருந்து இருக்கேன்னு…”.


“ம்மா… ப்ளீஸ்… அப்படி சொல்லாதீங்க, தப்பு என்னோடது. அதை யாரும் கண்டுபிடிக்காம மறைச்சுட்டேன்னு இருந்துட்டேன்.”


“ப்ச்… மயூ அதென்ன தப்புன்னு சொல்றே? காதலிக்கறது தப்பே இல்ல.”


“இப்படி எந்த விதத்துலயும் பொருத்தமே இல்லாத ரெண்டு பேர் இடையே வர காதல் சரியாம்மா?”


“எல்லா பொருத்தமும் பார்த்து, சரி தப்பு யோசிச்சு பண்ணா அதுக்கு பேர் காதல் இல்ல மயூ. லவ் ஒரு உணர்வு… ஏன்னு கேட்டா பதில் தெரியாது! அந்த ஷணம் பச்சக்குன்னு மனசுக்குள்ள யார் அனுமதியும் இல்லாம வந்து உக்காந்துப்பாங்க.”


“காதலுக்கு நிறம், மொழி, அந்தஸ்து, ஜாதி, மதம் எல்லாம் புரியாது. காதலுல மனசுக்கு மட்டுமே வேலை… மூளை ஒதுங்கிடறதால தான் கூடவே ஒட்டிட்டிருக்க பிரச்சனைங்க புரியறதில்ல. அனுபவிச்சால் ஒழிய இது அத்தனை சீக்கிரம் அடுத்தவருக்கு புரியாது மயூ.”


“காதல் மேல நம்பிக்கை இல்லாதவங்களுக்கு இதெல்லாம் கேட்குறதுக்கு பைத்தியக்காரத்தனமா தான் தோணும். எதை பத்தியும் யாரை பத்தியும் யோசிக்காம நம்ம மனசுக்குள்ள சிம்மாசனம் போட்டு உட்காருற இந்த காதல் எப்படி பட்டவனையும் பித்தாக்கற சக்தி வாய்ந்தது. அது தான் நிஜம்.”


பூரணியின் வார்த்தைகள் உண்மை. அதிலும் அவள் விஷயத்தில் இப்படி தானே நடந்தது. அம்மாவின் புரிதலை எண்ணி ஆவென வாய் பிளந்தவள், “நான் உன்னை என்னவோன்னு நெனச்சேன். ஆனா, இவ்வளோ தீவிர லவ் சப்போர்டர்னு இன்னைய வரை எனக்கு புரியாம போச்சு.”


“குழந்தைங்களுக்கு நல்லது கெட்டது சொல்லி தரணும். அவங்க முடிவுகளை அவங்களே எடுக்கற தெளிவோட வளர்க்கணும். அப்படி வளர்ற குழந்தை ஒருத்தனை பார்த்து பிடிச்சு இருக்குன்னு சொல்லும் போது நம்ம குழந்தை, அதை நாம வளர்த்த விதம் எல்லாத்து மேலயும் நம்பிக்கை வெச்சு வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு அந்த குழந்தை போக வழி விடணும் மயூ.”


“உன் முடிவு உன் வாழ்க்கை அப்படின்னு சொல்லறது அக்கறை இல்லாததாலோ, பொறுப்பு இல்லாததாலோ இல்லை. பெத்தவங்களா எங்க கடமையை சரி வர செஞ்சுருக்கோம் என்ற எண்ணம் தர்ற தைரியம்.”


“நம்ம பிள்ளை நல்ல எதிர்காலத்தை அமைச்சுக்கும் என்ற நம்பிக்கை தான். எவ்வளவு பெரிய புத்திசாலிக்கும் சறுக்கலாம், அப்படி இருக்க அதுக்கும் மேல காதல், கல்யாணம் இதுல எதிர்பாராம பிரச்சனை வந்தா… என்னைக்கும் உனக்கு துணையா, பக்க பலமா நாங்க இருப்போம்னு பிள்ளைக்கு பெத்தவங்க மேல ஒரு நம்பிக்கை இருக்கணும்ல? நான் உனக்கு எப்போவும் துணை இருப்பேன் மயூ. கூடவே இருக்கேனோ இல்லை இந்த உலகத்துலேயே…”


“ம்மா…” அலறினாள் மயூ.


“இரு மயூ, சும்மா எமோஷனல் ஆகாதே. இப்போவும் அப்பா இங்க நம்ம கூட இருக்கார். எது ஆரம்பிக்கறதுக்கு முன்னையும், எந்த முடிவு எடுக்கறதுக்கு முன்னவும், அப்பா எப்படி இதை கையாண்டு இருப்பார்னு நாம யோசிக்கறோம் தானே? அதான் என்னைக்கும் நமக்கு துணையா இருக்கறது. “


“நான் சொல்ல வந்ததும் இதைத் தான். உங்களை சரியாய் வழி நடத்தி வளர்த்து இருந்தா, நல்லது கெட்டதை பகுத்தறிந்து புரிஞ்சுக்கற பக்குவத்தோட உங்களுக்கு வாழ்க்கையை நாங்க புகட்டி இருந்தா, எந்த சந்தர்பத்துலயும், கஷ்டமோ நஷ்டமோ நிச்சயம் உன்னாலயும் மாறனாலயும் அதை தைரியமா எதிர் கொள்ள முடியும்.”


“நீ புத்திசாலி… நல்லா படிச்சு இருக்க. ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாதுங்கறது நிஜம். நாலு பேரோட பழகி, யார்கிட்ட எப்படி நடக்கணும்னு அனுபவம் இருக்கு. அழகன் தம்பி ரொம்ப நல்ல மாதிரி. ஆனா, அவர் வீட்டு ஆளுங்க அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்ல. மனுஷங்க பல விதம் ஒவ்வொருத்தரும் ஒரு குணத்தோட இருப்பாங்க. சிலதை கண்டுக்க கூடாது… மத்த நேரங்களில் அனாவசியமா வளைஞ்சும் போக கூடாது. நீ நீயாவே இரு. அதே நேரம் எங்க வளையனும், எங்க நிமிர்ந்து நிக்கணுங்கற தெளிவு உனக்கு ஓரளவுக்கு புரியும் விதமா தான் நாங்க வளர்த்திருக்கோம். தம்பி துணை இருக்கார். அதே நேரம் சின்ன சின்ன விஷயத்தை ஊதி அனாவசியமா அவருக்கும் சங்கடம் தந்துடாத மயூ.”


“லவ்வுக்கு எதிரி இல்லாத எனக்கே என் பிள்ளை இந்த விஷயத்தை சொல்லலைன்னு மனசுல சுருக்குன்னு தைக்கறப்ப, லவ் என்ற வார்த்தையே குத்தமா பாக்குறவங்களால இந்த கல்யாணத்தை சுலபமா கடந்து வர முடியாது. இதை மனசுல ஏத்து முதல்ல.”


“அம்மா இருக்கேன்… எது பத்தியும் நீ மனசு விட்டு பேசலாம். அதே நேரம் தம்பியோட உன் பந்தம் இறுகணும். உங்களுக்கு இடையே இருக்கற பரஸ்பர அன்பும், நம்பிக்கையும், காதலும் இன்னைக்கி விட இன்னமும் கூடணும். அது தான் அஸ்திவாரம்… அதுல எந்த குழப்பமும் வர கூடாது.”


“எல்லாத்துக்கும் மனசு தான் காரணம் மயூ. தம்பி மேல உள்ள பாசத்துல தான் நேத்து அந்த அமுதாம்மா உன்கிட்ட சகஜமா பேச முயற்சி செஞ்சாங்க. இது பெரிய விஷயமான்னு தோணலாம், அவங்க நிலையில இருந்து பார்த்தா தான் அது அவங்க அளவில் எத்தனை கஷ்டமான ஒரு முதல் அடின்னு நமக்கு புரியும்.”


“உறவு வேணும்னு நினைச்சா நாம கொஞ்சம் மெனக்கெடணும். புருஷனை பெத்தவ, கூட பிறந்தவங்க எல்லாம் உனக்கும் நெருக்கமானாளே பாதி தடையை உடைச்சுடுவ. எப்படி மாறனும், அழகன் தம்பியும் உறவாடணும்னு நீ ஆசைப்படுறியோ, அது போல அவரோட குடும்பத்து ஆளுங்களை நீ அனுசரிச்சு போகணும்னு அழகன் தம்பி ஆசைப்படுவார் தானே.”


“எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் செஞ்சு போ மயூன்னு கண்மூடித்தனமான சொல்லலை நான். அவசியமானதுக்கு உன் நிலையை விட்டு தராதே. உன் சுயமரியாதையை இழக்காதே, அதே நேரம் தொட்டதுக்கு எல்லாம் முறுக்கிக்காதே. நாணலா இருக்க தெரியணும், அன்ன பறவையோட குணமும் வேணும். அதே நேரம் இத்தனை வருஷம் காதலிச்சியே, அதை வெற்றிகரமான கல்யாணமா, குடும்ப வாழ்க்கையா அமைச்சுக்க பாரு.”


மகளிடம் பலதையும் பேசினார் அந்த அன்பான அன்னை. முன்னமே ஏன் அம்மாவிடம் சொல்லவில்லை என்ற குற்ற உணர்வு பெருகியது மயூவுக்கு.


“விடு மயூ… இப்படி நடக்கணும்னு இருந்து இருக்கு.” இவர்கள் பேசி கொண்டே நேரம் போனதை கவனிக்கவில்லை.


அழகன் அழைத்தே விட்டான். அப்போது தான் “ஐயோ வேலைக்கு லேட்!” மயூ குதிக்க… அவசரகதியில் வேலைக்கு லீவ் சொல்லி, பின் குளித்து மயூ கிளம்பி வர அவளுக்கு பிரியமான முறுகல் தோசையை பொடியில் முக்கி வாயில் ஊட்டினார் பூரணி.


அதன் பின் விடியோ காலில் புடவை தெரிவு நடந்தது. இங்கே அழகன், மயூவுக்கு காண்பிக்க, அங்கே அம்மு, அரசிக்கு காண்பிக்க… பரமு ஒதுங்கி அமர்ந்து இருந்தார்.


அழகிய முஹுர்த்த பட்டை தேர்ந்தெடுத்தனர். போன் வழியாக அம்முவை கண்டவள் அசட்டு சிரிப்பை உதிர்க்க, அம்முவும் கலகலத்து புன்னகைத்தாள். இதை கவனித்த பூரணிக்கு திருப்தி.


அனைவருக்கும் உடைகளை எடுத்து, பிற சம்பிரதாயங்களுக்கும் தேவையான புடவைகளை தெரிவு செய்து முடித்தனர்.


மதிய உணவு வேளையில் மகன் மாறனை அழைத்தவர், “மாறா ஒரு பத்து நாள் லீவ் சொல்லி, இல்ல வேணாம்… வர்க் ஃப்ரம் ஹோம் போட்டுட்டு இன்னைக்கு நைட்டே ஊருக்கு கிளம்பி வா.”


“ம்மா, என்ன விளையாடுறீங்களா?”


“ஆமாடா உன்னோட விளையாட காத்துட்டு கிடக்கேன். மயூவுக்கு வரன் ஒண்ணு தகையும் போல இருக்கு.”


“ம்மா… திரும்ப ஆரம்பிச்சுட்டீங்களா?”


“சொல்றதை கேளு மாறா… மயூவுக்கும் பிடிச்சு இருக்கு!”


“என்ன?” அதிர்ந்தவன், “எதுக்கு அவசரப்பட்டு மயூகிட்ட சொன்னீங்க பூம்மா? மாப்பிள்ளை விவரங்களை முதல்ல என்கிட்டே சொல்லி நான் நல்லா விசாரிச்சிருக்கணும்ல? எனக்கும் திருப்தி ஆகணும்.”


“அதுக்கு தான் நீ இங்க புறப்பட்டு வரணும் மாறா. அவ ஓகே சொல்லும் போதே முடிச்சா தான், உனக்கு காலாகாலத்துல டும் டும் டும்…”


“பூரி மேடம், ஓவர் ஆர்வத்துல ஜெட் வேகத்துல போறீங்க, கொஞ்சம் தரையில லேண்ட் ஆகுங்க. நான் வேலையில பேசி பார்த்துட்டு உடனே கிளம்ப பார்க்கறேன். அதுக்குள்ள நீங்களா கெட்டி மேளம் வரை போகாம அடக்கி வாசிங்க. நான் பையனை பத்தி தீர விசாரிச்சுட்டு அப்புறம் முடிவெடுப்போம். பையன், பேரு விவரம் மெயில் பண்ணுங்கம்மா…”


“நீ நேர்ல வாடா…”


“ம்மா… விவரம் அனுப்புங்க… ஆமா, என்ன வேலை செய்யறார்?”


“மாறா, மொதல்ல சொன்னதை செய். இங்க வந்தா தான் விஷயத்தை சொல்லுவேன்.” பூரணி அம்மாவின் பிடிவாதம் அறிந்தவனாக, இனி அவர் வாயில் இருந்து விவரம் வராதென்று ஊர்ஜிதமாக, “நல்லா நாட்டு கோழி அடிச்சு கொழம்பு வைங்க… நான் கிளம்பி வரேன்.”


******************************************************


பூரணிக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியே என்றாலும், அதே நேரம் அன்று பேசி வாயிலாக உர் முகமாக பட்டுக் கொள்ளாமல் ஒதுங்கி இருந்த பரமு அம்மாவை எண்ணி மெல்ல கலக்கம் பிறந்தது. லொடலொட பேர்விழியான பூரிக்கு மனதில் மறைத்து வைக்கும் பழக்கம் இல்லை. வெளிப்படையாக எதுவாகிலும் கொட்டி தீர்ப்பார். இப்போது எல்லாம் ரகசியமாக நடக்க, மனம் திறந்து பேச பேச்சு துணை இல்லாமல் தவித்தவர், மகன் மாறனின் வருகையை பேராவலோடு எதிர்பார்த்தார்.


அம்மாவுக்கு விஷயம் தெரிந்ததில் மனம் லேசாக, புடவை எடுத்த களிப்பும் சேர, இரவில் அழகனை அழைத்தாள் மயூ.


“அழுக்கு பையா, உன்கிட்ட கேர்புல்லா இருக்கணும் நான். பொசுக்குன்னு அம்மா காலுல விழுந்து கோல் போட்டுட்ட…”


“யாரு?” அழகன் இல்லாத காலரை தூக்கி விட்டு கொள்ள…


“ஹலோ, நாளைக்கு மாறன் வரான். அவன் ஒத்துக்கலன்னா என்ன பண்ணுவ? இப்படி தான் காலுல விழுவியா?”


“நக்கல் நயன்தாராவா மாறிட்டு வர நீ. மச்சானுக்கு ஒரு பார்ட்டி கொடுத்து கரெக்ட் பண்ணிடுவேன்.”


“எங்க மாறன் நல்ல பிள்ளை…”


“ஹ ஹா ஹா… பச்சபிள்ளையா இருக்கியே மயில் நீ. அதெல்லாம் மச்சான் ஆளு விவரம் தான். ஆனா, நீ இப்படி இருந்தா எனக்கு நல்லதா கெட்டதா…”


“அடக்கி வாசி அழுக்கு பையா… இந்த மயூ விஸ்வரூபம் எடுத்தா தாங்க மாட்டே நீ…”


“அடிப்பாவி… நீ மலை இறங்கு. மாறன் கவலை உனக்கு வேணாம். மை ஸ்வீட் அத்தை பார்த்துப்பாங்க.” அதன் பின் என்ன பேசினார்கள் என்றே தெரியாத அளவுக்கு போன் சூடாகும் வரை கடலை வருத்தவர்கள் இன்ப கனாக்களோடு கண் துஞ்சினர்.


மெல்ல மெல்ல அவர்களின் காத்திருப்பு இன்பமாக நிறைவடையும் அந்த நன்னாளை எண்ணி காதல் மயில்கள் ஆவல் கொண்டனர்.


Recent Posts

See All
மஞ்சக்காட்டு மயிலே 19

மஞ்சக்காட்டு மயிலே தோகை 19 அன்றைய களைப்பு மொத்தத்தையும் நீராடி களைந்த அழகன், மயூவின் வருகைக்காக அவனின் அறையில் ஆவலே உருவாக கால்கள்...

 
 
 
மஞ்சக்காட்டு மயிலே 18

மஞ்சக்காட்டு மயிலே தோகை 18 கால சக்கரம் வேகமெடுத்து சுழல, இதோ இன்று ஆத்தூரில் ஊரின் கோடியில் இருக்கும் திடலில் ஜனத்திரள் கூடியிருந்தனர்....

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page