மஞ்சக்காட்டு மயிலே 3
- madhivadhani Stories
- May 22, 2023
- 12 min read

மஞ்சக்காட்டு மயிலே
தோகை 3
அமைச்சர் செந்தூர் அழகனின் விஜயத்துக்காக திருவண்ணாமலையில் மயூரி பணி செய்யும் இடத்தில் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தேற துவங்கின.
உடன் பணி செய்யும் சீனியர் பெண் கால்நடை மருத்துவரின் “அப்போ லேடீஸ் எல்லாரும் மெரூன் கலர் புடவை கட்டறோம்,” என்ற முடிவை மறுக்க முடியாதவளாக தலையை சரி என்று ஒப்புதலாக அசைத்தாள் மையூ.
இன்னும் ஏதோ ஆயத்தங்களை பற்றி விவாதம் தொடர, ‘இங்க பன்னெண்டு லேடீஸ் வேலை பண்றோம். எல்லாரும் ஒரே போல ட்ரெஸ் பண்ணினா, இந்த கூட்டத்துல என்னை சுலபத்துல கண்டுபிடிக்க முடியாது. இருக்கறதிலேயே நான் தான் ஜூனியர் வேற. ஆக, இவங்க எதிலும் என்னை முன் நிறுத்தப் போறதில்லைங்கறது உறுதி. ஓகே… அழகன் கண்ல சிக்காம இருக்க, இதுவும் நல்ல வழி தான்.’ தன்னை சமாதானம் செய்து கொண்ட மையூ, அதன் பின்னே தான் மற்றவர்கள் பேச்சில் கவனம் செலுத்தினாள்.
எந்த கூட்டத்திலும் அழகனின் கண்கள் அவளை கண்டுகொள்ளும் என்பதை அறியவில்லை மயூரி. எல்லாவற்றுக்கும் சூத்ரதாரியும் அவனே என்பதையும் அறியாதவளாக, தினசரி வேலைகளை கவனித்து வலம் வந்தாள்.
இரண்டு வார சென்னை வாசத்துக்கு பின் ஆத்தூருக்கு வந்திருந்தான் அழகன். வழமை போல மில், ஃபேக்டரி பயணத்துக்கு பின், இரவு நேரம் சென்று வீடு திரும்பியவனை, வீட்டு மாப்பிள்ளைகள் இருவருமே எதிர்கொண்டனர்.
அக்காக்களையும், அவர் தம் கணவனையும் நலன் விசாரித்த அழகன், ஒரு மாதத்துக்கு பிறகு மொத்த குடும்பமும் ஒன்று கூடி இருக்கவும், அவனின் கல்யாண விஷயமாக என்று புரிந்தவனாக ‘இன்னும் ஒரு வாரம்! அப்புறம் எல்லாத்துக்கும் முடிவு கட்டணும்,’ மனதில் நினைத்தவனாக மாப்பிள்ளைகளோடு சகஜமாக பேசினான்.
இரு சகோதரிகளும் பரிமாற, இரவு உணவு மேலோட்டமாக பேச்சும், சிரிப்புமாக சாதாரணமாக நடப்பது போல இருந்தாலும், அமுதா அக்காவுக்கு தன்னுடைய அம்மா ஜாடை செய்வதை பார்த்தவன், “என்னம்மா? சும்மா எதுக்கு அக்காவோட தோளை தட்டுறீங்க? என்ன வேணும் உங்களுக்கு?”
மகனின் திடீர் வினாவில் அதிர்ந்தவர், “ஹான்… அது… கதிர் மாப்பிள்ளை ஏதோ பேசணும்னு சொன்னாப்ல… அதான்,” மென்று விழுங்கினார் பரமேஸ்வரி.
“என்னத்தான்?” மூத்த மாப்பிள்ளையை கேள்வியாக பார்த்தான்.
தன் சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு உரையை எடுத்து நீட்டியவர், “நம்ம வல்லநாட்டு ராசு இருக்கரில்ல… அவர் சம்பந்தி வீட்டு பக்கம் ஓரமொறைல ஒரு படிச்ச பிள்ளையை உனக்காக பார்த்து சொல்லி விட்டுருக்கார். பிள்ளை பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சுருக்கு. ஜாதக தோஷத்தால கல்யாணம் தட்டி போயிட்டிருந்திருக்கு. நல்ல குடும்பம், ஒத்த வாரிசு…” அவசிய விவரங்களை கதிர் பகிர துவங்க,
இடைபுகுந்த அம்மு, “இங்க நம்ம பக்க ஆளுங்களா போயிட்டதால, செய்முறை எதுவும் நாம வாய் திறந்து கேக்க வேணாம் தம்பி. நம்ம மொறை நல்லா தெரிஞ்சவங்க. எல்லாமே இந்த பிள்ளைக்கு தான். குத்தாலம் பக்கம் எஸ்டேட், இங்க பழ தோட்டம், நெல்லையில ஆறேழு மேன்ஷனுங்கன்னு, நல்ல வருமானம் சம்மந்தாருக்கு. உனக்கு பொண்ணை பிடிச்சிருந்தா… கையோட கல்யாணம் வெச்சிபுடலாம்.” ஆர்வம் மேலிட மற்ற தகவல்களை சொல்லி முடித்தாள்.
“கூச்சபடாம போட்டோவை பாருங்க…” அதிகம் பேசாத இளைய மாப்பிள்ளை சங்கர் வாய் திறந்ததும், அழகனுக்கு புரிந்து விட்டது. வீட்டு பெருந்தலைகள் ஒன்று சேர்ந்து தன்னை நெருக்க துவங்கி விட்டனர். இனி தாலி கட்டாமல் வீட்டினர் விட போவதில்லை என்பது உறைத்தது.
இன்று, அதுவும் இப்போதே கல்யாணத்தை தவிர்த்தால் தான், தன் தனிப்பட்ட திட்டம் கை கூடும். வேறு வழி புலப்படாததில் சில நொடிகள் திகைத்திருந்தவன், அனைவர் பார்வையும் கூர்மையாக அவன் மீதே நிலைத்ததில், தப்பிக்க வழியற்றதால் ‘எப்படி சமாளிக்க?’ யோசனையோடு போட்டோவை எடுத்த அழகனின் மனம் க்ஷணத்தில் ஹப்பாடா என நிம்மதியானது.
அப்புகைப்படத்தில் இருந்த பெண்ணிடம் ‘அம்மா, தாயே சாரி கேட்டுக்கறேன். நான் மனசார உன்னை குத்தி பேசலை.’ என்று மனதுக்குள் வேண்டினான். அதற்கு காரணம்,
ரெட்ட மாட்டு வண்டி
வரும்போது நெட்ட குட்ட
என்றும் இணையாது
இந்த ஒட்டகந்தான்
கட்டிக்கிட குட்ட வாத்த
புடிச்சான் ….
என்ற பாடல் வரிகள் சமய சந்தர்ப்பம் இல்லாது நினைவுக்கு வந்து தொலைக்க, அதில் வருவது போல தான் இருந்தது அப்பெண்ணின் உயரமும் கூட. வித்தியாசம், கண்கூடாக தெரியும் அளவில் அவனின் ஆறடிக்கு சற்றே கூடுதலான உயரத்துக்கு, நிச்சயம் அஞ்சடி கூட அந்த பெண் இருக்க மாட்டாள் என்பதை ஒற்றை பார்வையில் புரிந்து கொண்டான்.
யாரையும் உருவம் கொண்டு குறை சொல்வது தவறு என்ற நல்ல கொள்கை கொண்ட அழகன், அவனின் குணயியல்புக்கு மாறாக, அதே நேரம் சொல்லும் செயலும் வேறான அக்மார்க் அரசியல்வாதியாக நொடியில் அவதாரம் ஏற்று, அவனுக்கு விவரம் சொன்ன பெரிய அத்தானை விடுத்து,
“பொண்ணு போட்டோவை பார்த்து, பிடிச்சு தானே என்கிட்டே பேசுறீங்கம்மா?” அன்னையை கேள்வியாக பார்த்தான்.
பரமேஸ்வரி பதில் தரவில்லை எனவும், இப்போது அமுதா அக்காவின் பக்கம் தலையை திருப்பி, “ஏன் க்கா உனக்கே இது நல்லாருக்கா? அந்த பிள்ளை ஹைட் என்ன? ஆளும் பச்ச பிள்ளை போல இருக்கு… கொஞ்சமாவது பொருத்தம் இருக்க வேணாம்?” குறைபட்டவனிடம்,
“பாரு அழகா… இத்தனை நாள் வயசு பொருத்தம் தானே சொன்னே! இந்த பிள்ளைக்கு இருவத்தினாலு ஆகிடுச்சு. ஆள் கொஞ்சம் உசரம் கம்மி தான். அதுவும் கல்யாணம் தட்டி போக ஒரு முக்கிய காரணம். அதான் ஸ்டூல் போல செருப்பு கிடைக்குதே, அதை போட்டுக்குவா. மத்தபடி பார்க்க லட்சணமா இருக்கா… உசரத்துக்கு தக்க உடம்பா மெலிவா இருக்கா. எல்லாம் கல்யாணம், குழந்தைன்னு ஆகிட்டா கொஞ்சம் உடம்பு பிடிச்சுடும்.” ஸ்ருதி குறைந்து போனாலும் உறுதியாகவே தம்பிக்கு பதில் தந்தாள் மூத்தவள்.
அத்தான்களின் முகத்துக்கு பார்த்து, எழுந்த எரிச்சலை சிரமப்பட்டு அடக்கி கொண்டு “படிப்பு, அழகு, அந்தஸ்து, தொழில்… எதுல உன் தம்பி கொறைஞ்சுட்டான்னு இப்படி குட்டையா பொண்ணு பார்த்து வெச்சுருக்க க்கா?”
பதில் தர வந்த உடன்பிறந்தவளை, கை காட்டி பொறு என்று சைகை செய்தவன், “என் முன்ன, பேசுறதுக்கு வாய் திறக்க யோசிக்கறவன் கூட, இந்த பிள்ளையை கட்டினா, என் முதுகுக்கு பின்ன, கேலியா ‘அமைச்சருக்கு என்ன குறைன்னு தெரியலை. இவருக்கு இப்படி ஒரு குள்ளச்சியை கட்டி வெச்சுருக்காங்க’ன்னு பரிகாசம் பண்ணுவாங்க!” வெளிப்படையாக பொறுமியவன்,
அதே நொடி அவசரமாக, ‘சாரிங்க… என்னை மன்னிச்சுடுங்க. என் லவ்வை காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியலை,’ மானசீகமாக மன்னிப்பை அந்த போட்டோ பெண்ணிடம் மீண்டும் யாசித்தான்.
அமுதாவுக்கு திக்கென்றது எனில், “ஐயா என் குலசாமி… உனக்கு ஒரு கொறையும் இல்ல எஞ்சாமி.” மகனை குளிர்விக்க குறுக்கிட்ட பரமு, கூடவே… “என்ன ஒரு இருபத்தியஞ்சுல நீ கல்யாணம் கட்டி இருந்தின்னா, இந்த பிரச்சனையே இல்ல. உனக்கும் வயசு ஏறி போயிடுச்சுல்ல ராசா!” அவரின் மனவாதங்கத்தை குட்டாகவும் வைத்தார்.
“அதுக்கு?” எரிச்சலை மறையாமல் கேட்ட மகனிடம்,
“அதான் உனக்கு பொருத்தமான பொண்ணை கண்டுபிடிக்க சிரமமா இருக்கு ராசா!” பரமு அம்மாள் சமாதானத்தில் இறங்குவதாக எண்ணி பேசியது அழகனை இன்னும் கடுப்பேற்றினாலும், அத்தான்களின் முன், மேலே அனாவசிய வாக்குவாதம் எழுவதை தவிர்க்கும் பொருட்டு, பொறுமையை இழுத்து பிடித்தவனாக,
“ம்மா, ஓரெட்டு சென்னைக்கு வந்து பாருங்க! அதெல்லாம் காலம் மாறிட்டுது. என் வயசு பெண் பிள்ளைங்களே இன்னும் கல்யாணம் ஆகாம படிப்பு, வேலைன்னு சிங்கிளா இருக்காங்க! இதுல எனக்கு வயசு ஏறிடுச்சா?” கேள்வியாக முடித்தான்.
“நான் சொல்லலை அம்மு, சென்னை பட்டனத்துல இருக்க எந்த சிறுக்கி மவளோ, இவன் மனசுல உக்காந்து, நம்மளை நல்லா ஆட்டுறா.”
பெரும்பான்மை பொருத்தங்கள் நிறைந்த பெண்ணை தேடி பிடித்து காண்பிக்க, மகன் அந்த வரனை மறுதலித்ததில், அங்கே மாப்பிள்ளைகள் இருப்பதையும் மறந்தவராக, தம்பியை பற்றி அவதூறாக புலம்ப ஆரம்பித்திருந்த அம்மாவை, “சும்மா இருங்கம்மா,” அமுதா அதட்ட துவங்க,
சரியாக அந்நேரம் பார்த்து அவனின் பி.ஏ., சௌந்தர் கைப்பேசியில் அழைக்க, முக்கிய விஷயம் அல்லாமல் அந்நேரத்தில் சௌந்தர் அழைப்பு விடுக்க மாட்டான்.
இதை அங்கிருந்த அனைவருமே அறிந்திருந்தபடியால், “போன் எடு தம்பி,” அம்மு முடுக்கவும், ‘நல்ல டைமிங்டா சாமி… மீ எஸ்கேப். இதுக்காகவே உனக்கு கோயில் கட்டணும் சௌந்தர்,’ மனதில் நினைத்த அழகன், மாப்பிள்ளைகளின் புறம் ஒரு தலையசைப்போடு, “சொல்லு சௌந்தர்” பேச எழுந்து சென்று விட்டான்.
“ம்மா, தம்பியை பத்தி நமக்கு தெரியாதா? இன்னைய வரை அவன் மனசுல யாரும் இல்ல. எந்நேரமும் நீ புலம்பியே, அவனை காதலிக்க வெச்சுடுவ போல.”
“யாருமில்லன்னா, ஏன் நம்ம அரசி நாத்தனாரை வேணாம்னு சொன்னான்? அந்த பிள்ளையை கட்டியிருந்தா, இந்நேரம் இவனும் குழந்தை குடும்பம்னு அமோகமா இருந்திருப்பானே.” இளையவள் அரசியின் நாத்தனார் ஸ்ரீதேவியை திருமணம் செய்ய அழகன் மறுத்ததில், இன்று வரை இரு வீட்டுக்கும் சிறு மனவருத்தம் தொடர்கிறது.
“அம்மா…” இரு மகள்களும் கூப்பிட்ட அதே நொடி, “என்ன பேசுறீங்க அத்த? தங்கச்சி இப்ப வேற ஒருத்தருக்கு பொண்டாட்டி! பிள்ளையும் ஆச்சு... இன்னும் நீங்க இப்படி பேசுறது நல்லா இல்ல…” பெரியவளின் பேச்சு பிடித்தமில்லை என்ற எரிச்சலை மாப்பிள்ளை சங்கர் வெளிப்படையாக காட்ட,
“தப்பு தான் மாப்பிள்ளை! அவரு இருக்கும் போதே, ஆசையாசையா நம்ம தோப்பூர் முத்தையாவோட பொண்ணை சம்பந்தம் பேசினாரு. ‘இருபத்திரண்டு வயசுல எனக்கு கல்யாணமா’ன்னு ஒரேடியா முடியாதுன்னு பிடிவாதம் பிடிச்சுட்டான் அழகன். ஒத்த ஆண் பிள்ளையோட பேச்சுக்கும், ஆசைக்கும் என்னைக்கும் மறுத்து சொன்னதில்ல உங்க மாமா.”
“அப்புறம் அவரும் போய், இதோ இந்த கட்சி… எலெக்க்ஷன்… சட்டசபை… இப்ப மினிஸ்டர் பதவின்னு சொந்த வாழ்க்கையை கவனிக்க நேரமில்லாம வருஷம் ஏழு ஓடி, வயசும் ஏறிடுச்சு. இன்னும் இந்த பய ஒரு கல்யாணத்துக்கு ஒத்து வர மாட்டேங்கறான்.”
“அழகனை தப்பு சொல்ல முடியாது அத்த… மாமாவுக்கு ஹார்ட் அட்டாக் வரும்னு நாம யாராவது கனவு கண்டோமா? அப்ப, நடந்த பை எலெக்ஷன்ல நிக்க வேணாம்னு விட்டு விலகி இருந்திருந்தா, அப்புறம் நம்ம மொத்த குடும்பமும் அரசியலை மறந்து இருக்க வேண்டியது தான். அப்போதைக்கு நம்ம செல்வாக்கை கட்டி காக்க வேண்டிய கட்டாயம் இருந்துச்சு. தானா பதவி, மரியாதை தேடி வரப்ப அதை ஏத்துகிட்டாகணும்ல?”
“போன ஆட்சி நடுவுல கலைஞ்சு, இத்தனை சீக்கிரம் இன்னொரு தேர்தல் வந்ததும் நாம எதிர்பாராதது தான். கொஞ்சம் பிடியை விட்டாலும், நம்ம இடத்தை பிடிச்சுக்க அலையறானுங்க. நம்ம கௌரவம் சம்மந்தபட்டப்ப, எப்படி விட்டு கொடுக்க? அதான் விடாது ஜெயிக்கணும்னு முழு மூச்சா இறங்க வேண்டிய நிர்பந்தம்."
"இந்த குறுகிய காலத்துல மூணு எலெக்ஷனை அழகன் சமாளிச்சதே பெரிய விஷயம். எத்தனை உழைப்பு? எவ்வளோ பிரச்சாரம் செஞ்சான். அது மட்டுமா, இவன் தானே எல்லா தொழிலும் பார்க்கணும்? இதுல எங்க குடும்பத்தை பத்தி நினைக்க? இப்போ என்ன வயசாகிடுச்சு அழகனுக்கு? எல்லாம் கூடிய சீக்கிரமே நல்ல பிள்ளையை பார்த்து ஜாம்ஜாம்னு கட்டி வெச்சுடலாம்.” மச்சானுக்கு துணை நின்று, ஆதரவாக பேசினான் கதிர்.
மகனின் கல்யாணம் தட்டியதற்கு நியாயமான காரணங்கள் இருந்தாலும் பெற்றவளுக்கு ஆறவில்லை… மனம் சமாதானம் ஆக மறுத்தது.
மாமியார் முக சுணக்கம் குறையாததை கவனித்து, “நீங்க வீண் கவலையை விடுங்கத்தை, நாங்க பொறுப்பெடுத்து முன்ன நின்னு முடிக்கறோம்.”
இரு மாப்பிள்ளைகளும் ஒன்றாக உறுதி கொடுக்கவும், “சந்தோஷம் மாப்பிள்ளை” என்று பரமு கண்கலங்கினார்.
***********************************************
“மேல என்னாச்சுன்னு சொல்லு இனி குட்டி?”
“அப்புறமென்ன மாம்ஸ்? அம்மாச்சி ஒரே எமோஷனல் தான். வழக்கம் போல கண் கலங்கிட்டு, தாத்தா படத்து முன்ன நின்னு, ஒரு வார்த்தை விடாம அவர்கிட்ட புலம்பி, பாவம் அவர் காதுல இருக்க ஓட்டையை பெருசாக்கிட்டங்க உங்க அருமை அம்மா,” சௌந்தரின் அழைப்பை ஏற்று எஸ்ஸான பின், கீழே நடந்ததை இனியா ஒன்று விடாமல் கேலியாக ஒப்பிக்க, அவளை கண்டிக்க தான் நினைத்தான். அப்புறம் இது போல வீட்டு விஷயங்கள் அவன் செவியை வந்தடையாதே, என்ற கலக்கத்தில், அவள் ஏற்கனவே கேட்டிருந்த கொலுசை தன் சட்டை பாக்கெட்டில் இருந்து எடுத்து நீட்டியவன், இளையவள் முகம் அதிருப்தியில் வாடி போனதை கண்டு,
“சாரி இனி குட்டி, இந்த வாட்டி மாமா ரொம்ப பிசி. உனக்கு பிடிச்சது போல பார்த்து எடுக்க முடியலை செல்லம். அடுத்த முறை சென்னை ட்ரிப்பப்ப நிச்சயம் உன்னையும் கூட்டிட்டு போறேன். நீயே வேண்டியதை வாங்கிப்பியாம்”
“நிஜமா மாம்ஸ்?”
“ம்ம்…”
“என் செல்ல மாமா, ஆனா அமுதாவை சமாளிக்கணுமே?”
“கழுத, அக்காவை பேர் சொல்லி கூப்பிடாதே. அம்மாச்சி காதுல விழுந்தா நீ காலி. அக்கா, அத்தான்கிட்ட நான் சொல்லிக்கறேன். நீ ஷாப்பிங் லிஸ்ட் போடு, அதுக்கு முன்ன கொஞ்சம் ஒழுங்கா படி. அப்ப தான் என்னால அத்தனை ஒத்துக்க வைக்க முடியும். போ… ஓடு…”
“மை லவ்லி மாம்ஸ்… என் மாமாவுக்கு பிடிச்ச மாதிரி ஒரு சூப்பர் மாமி கூடிய சீக்கிரம் இந்த வீட்டுக்கு வந்துடணும் பிள்ளையாரப்பா…” அந்த கொலுசை அசைத்துக் கொண்டு குதித்து ஓடினாள் இனியா.
அவள் பேச்சில் சிரிப்பு வர, ‘என் மனசுல மயிலாட்டம் ஆடுறவ கூடிய சீக்கிரம் இங்க வர போறா…’ தனக்குள் சொல்லிக் கொண்டவன் கண்களை மூட, மெல்லிய பூங்காற்றாய் வருடிய நினைவுகள் மேலெழும்பின.
*************************************************
ஒன்பதரை ஆண்டுகளுக்கு முன்
இதே ஆத்தூரில்….
“ஏய்… ஏய்… பார்த்து… விழ…” அவன் முடிக்கும் முன்பாக பொடீர் சத்தம் அழகனின் காதை நிறைத்தது.
“ஏய் பொண்ணு…” சாலையின் ஏற்றத்தில் நின்று, சரிவை நோக்கி உரக்க கத்தினான் இருபது வயது இளம் சிங்கம் செந்தூர் அழகன். செடிகள் விலகியதில் சைக்கில் சரிந்து விழுந்த பாதை கண்ணுக்கு தெரிந்தாலும், அந்த சைக்கிளில் பயணம் செய்த பைங்கிளியை காணவில்லை.
அழகனின் குடும்பத்துக்கு சொந்தமான, மாந்தோப்பின் பின் புறம் சுழித்தோடும் ஆற்று பாதையை ஒட்டிய, சற்றே வளைந்து நெளிந்து செல்லும் குறுகலான மண் பாதை அது.
மாந்தோப்பின் அந்த வாசலுக்கு எப்போதாவது வரும் நான்கு சக்கர வாகனங்களினால் பாதை ஏற்பட்டிருந்தாலும், இன்னமும் அங்கங்கே மேடும், பள்ளமுமாக சமனில்லாமலும், சில இடங்களில் சாலை கூட உயர்ந்தும்… தாழ்ந்தும் சீரில்லாமல் இருக்கும்.
அதிலும் மழை பொழிந்த பின், சேறும் சகதியுமாக, சில இடங்களில் அபாயகரமாக சறுக்கு மரத்தை போல வழுக்கி விடும் அளவுக்கு குண்டும் குழியுமான ரோட்.
தாழ்வான ஆற்று படுகைக்கும், மேட்டில் இருந்த சாலைக்கும் இடைப்பட்ட அந்த கரையோர சரிவை நிறைத்த செடி கொடிகளை விலக்கி, முட்புதர்களை லாவகமாக தவிர்த்த அதே நேரம், பிடிமானம் இல்லாததால் தானும் விழுந்து விட கூடாதென ஜாக்கிரதையாக மெதுவே இறங்கியவன், பாதி தொலைவில் ஒரு புதரின் மறைவில் நின்றிருந்தவளை பார்த்து விட்டான்.
“ஏய்… கூப்பிட்டது காதுல விழலை? அடி பட்டிருக்கா?”
“இங்க வராத… தீங்க ப்ளீஸ்” கெஞ்சலான அவள் குரல் இவன் செவிகளில் இன்னிசையாக ஒலித்தது.
பதுமையின் பேச்சை காதில் வாங்காமல் தொடர்ந்து அவள் இருந்த பக்கமாக அழகன் முன்னேற, “வராதேன்னு சொல்றேன்ல” மரியாதை பறந்து விட்ட அதிகார குரலில் அதிர்வுற்ற அழகன் எடுத்த அடுத்த அடியை விடுத்து, அங்கேயே நின்று விட்டான்.
“என்னாச்சு புள்ள?” கரிசனமாக ஒலித்த குரலில் ஈர்க்கப்பட்டவள்…
“நீ… இல்ல… நீங்க மேல ஏறி போங்க. ஒண்ணுமில்ல… நான் இப்படியே கரையோரமா நடந்து போயிடுவேன்.”
அவளின் தயக்கம் கலந்த தடுமாற்றமான பதிலை கேட்டவனுக்கு இப்போது நிச்சயம் வேறு ஏதோ விஷயம் என்று புரிந்தது. “என்னன்னு சொல்லாம, புதருக்குள்ள எந்த புதையலை தேடுற நீ? ஆமா, யார் நீ? உன்னை இதுவரைக்கும் ஊருக்குள்ள நான் பார்த்ததில்லையே?” விழும் முன், சற்று தொலைவில் இருந்தான் என்றாலும் மின்னலாக முகத்தை பார்த்திருந்தான்.
பேசி கொண்டே மீண்டும் அடி எடுத்து வைக்க துவங்கி விட்டான். சருகுகள் மிதிபட்ட ஒலியில் அவன் நோக்கம் புரிய, “ப்ளீஸ்… ப்ளீஸ்… இங்க வராதீங்க…” குரல் நலிந்து கெஞ்சலாக வரவும்…
“அடிகிடி பட்டுருக்கா புள்ள…”
“ஆ...மா… இல்ல…”
“ஆமாவா… இல்லையா?” பதில் வராமல் அமைதி நிலவ, “தயங்காம என்னன்னு சொல்லு புள்ள… “அழகனும் விடுவதாக இல்லை.
“அது… என்…” தெரியாத ஆண் மகனிடம் அவள் இருந்த நிலையை விளக்க சங்கடப்பட்டு அவள் மேலே பேசாமல் இருக்க,
“என்ன முள்ளு செடியில உன் கால் குத்தி பலமா கிழிச்சு விட்டுடுச்சா? இரு, நான் வந்து எடுத்து விடறேன்.”
எங்கே அவன் வந்து விடுவானோ என்ற பயத்தில்… “ஐயோ… வராதீங்க, என்னோட சுரிதார் அங்க முள்ளுள சிக்கி… சிக்கி… கிழிஞ்சுடுச்சு. துப்பட்டாவும் அங்க எங்கேயோ செடியில சிக்கி கிடக்கு.” திக்கி திணறி அவள் சொன்னதை கேட்ட பின் தான், அழகன் சுற்றிலும் பார்வையை சுழல விட, விஷயம் புரிந்தது.
“நீங்க போங்க… நான் சமாளிச்சுப்பேன்.” அவனை விரட்டுவதில் குறியாய் இருந்தாள்.
“சரி நான் அங்க வரலை… யார் வீட்டு பிள்ளை நீ? உங்க வீட்ல இருந்து ஆள் கூட்டிட்டு வரேன்.”
“ஐயோ வேணாம்… அம்மா திட்டுவாங்க…”
கல்லூரி விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தவன், இரவு தோப்பு வீட்டில் தங்கி விட்டிருந்தான். அப்போது தான் விடிய துவங்கி இருக்க, விழிப்பு தட்டி விட, காலாற நடப்போம் என்று நடை பயின்று கொண்டிருக்கும் போது தான் சைக்கிளில் அதி வேகத்தில் திருப்பத்தின் அருகே வந்து கொண்டிருந்தவளை கண்டது.
குறுகலான திருப்பத்தில் இருந்த மணல் மேட்டில் இடித்து சைக்கிள் நிலை தடுமாறியதில் மணல் சரிந்து சரிவில் வண்டி இறங்கியது கண்ட அழகன், ஓடி வந்து குரல் கொடுத்து, உதவ வந்தது.
“டிரஸ் கிழிஞ்சுடுச்சுங்கற, அப்புறம் கரையோரமா வீட்டுக்கு எப்படி போவ? இந்த பக்கம் வீடுங்க இல்லையே?”
“இல்ல… சைக்கிள்ல மாட்டி இருந்த என் பேக்பேக், இங்க எங்கேயோ தான் விழுந்திருக்கு. அதுல வேற செட்டு மாத்து ட்ரெஸ் இருக்கு. நீங்க போங்க… நான் கண்டு பிடிச்சு, மாத்திட்டு வீட்டுக்கு போறேன்.”
“சரி… உன் பையை கண்டுபிடிச்சு கொடுத்துட்டு, நான் அப்புறம் மேல ஏறுறேன்”
“இல்ல வேணாம்…”
அவள் பேச்சை காதில் வாங்காதவனாக, சற்றே தள்ளி சரிவில் சரசரவென லாவகமாக இறங்கியவன், அலங்கோலமாக விழுந்து கிடந்த சைக்கிள் மற்றும் அதன் ஹேண்டில் பாரில் சிக்கியதில் முழுதும் விலகாமல் மாட்டி இருந்த பையை கண்டான்.
பையை எடுத்து கொண்டு, புதரின் அருகே வந்தவன், “இந்தா உன் பேக்… எடுத்துக்கோ. உன் சைக்கில் இனி காயலான் கடைக்கு தான் ஆகும். ட்ரெஸ் மாத்திட்டு, அப்படி கரையோரமா வா. அங்க ஒரு படிக்கட்டு வரும். உன் சைக்கிளை உருட்டிட்டு போய், நான் அங்க நிக்கறேன்.”
காலடிகள் விலகி போவது மீண்டும் சருகுகள் மிதிபடும் ஓசையில் காதில் விழ, நிம்மதியடைந்தவள், தயக்கமாக நகர்ந்து, தன் பையை துழாவி எடுத்து, அதில் இருந்த மாற்று சுரிதாரை எடுத்து கிழிந்த ஆடை மீதே அவசரமாக அணிந்து கொண்டாள்.
கைகளில் ஆங்காங்கே சிராய்த்திருந்ததில், அக்காயம் வேறு எரிந்தது. காலில் சற்று வலி இருக்க… காலை உதறியவள், மெல்ல அடி எடுத்து வைக்க, வலி தாள முடியவில்லை. கிழிந்த ஆடையினால் ஏற்பட்ட பதற்றத்தில் அதுவரை பெரிதாக உணராத கால் வலி, இப்போது நன்றாக தெரிந்தது.
கண்களை இறுக்க மூடி, திறந்து… பல்லை கடித்து, ஒன்று இரண்டு என்று எண்ணி, பின் மூச்சை ஆழ எடுத்து மெல்ல வெளியேற்றியவள், மற்ற காலில் தாங்கி, செடிகளை பிடித்து கொண்டு மெதுவே அழகன் சொன்ன அந்த படிக்கட்டின் அருகே வந்து சேர்வதற்குள் பாடு பட்டு விட்டாள்.
இந்த இடம் சற்றே மேட்டில் இருக்க, தனக்கு முதுகு காட்டி, சைக்கிளின் முன் மண்டியிட்டு, ஏதோ செய்து கொண்டிருந்தவனை கண்டவள், ‘இவன் நல்லவன், உதவிக்கு வந்திருக்கிறான். தப்பானவன் இல்லை… தான் இருந்த நிலைக்கு வேறொருவன் நிச்சயம் தவறாக எதையும் செய்ய துணிந்திருப்பான்’ கண்ணிய நடத்தையினால், பதினாறு வயது சிட்டின் இள மனதில், அந்த ஓர் நொடியில் பச்சக்கென இடம் பிடித்து விட்டான் செந்தூர் அழகன்.
சறுகுகளின் மிதிபடும் சத்தத்தில் மெல்ல தலையை திருப்பிய அழகன், உதிக்கும் சூரிய கிரணங்கள் மேலே பட்டதில், தங்கமாக ஜொலித்து, தன் முன் தேவதையாக வருபவளை கண்ட அந்த க்ஷணம்… அவனின் இதயம் இடம் மாறி, இதோ இன்று வரை மையூவிடம் சிறைப்பட்டிருக்கிறது.
“உஸ் உஸ்” சத்தத்தோடு மெது மெதுவே அடி வைத்து வந்தவள், வானத்து தேவதையாக தெரிய, ஒரு நொடி மலைத்து பார்த்தவன், அதன் பின் தான் வலியில் சுருங்கிய மதி முகத்தின் கண்ணோரம் நின்ற கண்ணீரையும் கண்டான்.
“ஹே புள்ள, என்ன ஆச்சு… கால்ல அடியா? அப்போவே கேட்டேன்ல!”
அக்கேள்வியில் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ம்ம்…” மெதுவே தலையை அசைத்த போது, முகத்தை சுருக்கவும், அவளின் வேதனை புரிய மளமளவென அவளை நோக்கி போனவன், தன் கையை கொடுத்தான்.
தயக்கமாக பெண்ணவள் நிற்க… அவன் கண்களோ அவள் கால் பாதத்தில் நிலைத்திருந்தது. “லேசா வீங்கி இருக்கு… பிசகி இருக்குன்னு நினைக்கறேன். வெயிட் போடாம… என் மேல சாஞ்சு, கையை பிடிச்சு நட… இல்ல தூக்கிக்கணுமா?”
“ஹான்… ஐயோ இல்ல… வேணாம்… நான் நடந்துக்குவேன்.” படபடத்தாள்.
இப்போது அவளை முறைத்தவன், “ஆமா… யார் வீட்டு பிள்ளைன்னு சொன்னே?” ஆராய்ச்சி பார்வை பார்த்தவனிடம்,
“எங்கப்பாவோட செல்ல பிள்ளை!” வலியையும் மீறி துடுக்காக பதில் கொடுத்தாள்.
“ஆங்… ஒ அப்படியா? உங்க அப்பாரு பேரு சொன்னா தெரிஞ்சுக்குவேன்.”
விடை தெரியாமல் அவன் விட போவதில்லை என்பது விளங்க சிறு தயக்கத்துக்கு பின் “டாக்டர். சிவபாதத்தோட மக…” குரல் மெலிந்து வந்தது.
“யாரு?” சில நொடிகள் புருவங்கள் நெருங்க யோசித்தவன், “ஓ… அட நம்ம மாட்டு வைத்தியர் மகளா நீ?” சற்று கேலியாகவே ஒலித்தது அவனின் குரல்.
உடன் மெல்ல நடந்து கொண்டிருந்தவள் அப்படியே நின்று விட, அவளை விட சில அடிகள் முன்னே எடுத்து வைத்து விட்டவன், அவள் அருகே இல்லாததை உணர்ந்து திரும்ப, அவனை உர்ரென முறைத்து நின்றவளை கண்டான்.
“அவர் மாட்டு வைத்தியர் இல்ல… வெட்டினரி டாக்டர்,” பல்லை கடித்து வந்து விழுந்த வார்த்தைகளில் இப்போது உஷ்ணம் தெறித்தது.
“ஆஆ… நல்லா வெட்டி முறிக்கற டாக்டரு தான் உன் அப்பா, வா போலாம்” அவனின் கிண்டலில் வெகுண்டவள்,
“ஏய்… என் பையை குடு. போ… நீ ஒண்ணும் எனக்கு ஹெல்ப் பண்ண வேணாம். எனக்கே போக தெரியும்…” சுறுசுறுவென வார்த்தைகள் வெடித்து கொண்டு வர…
“ஹ ஹ ஹா…” சிரித்தவன், “அப்பா பிள்ளையா நீ… என்னா கோபம் வருது உனக்கு!”
“இல்லையா பின்ன? உன் அப்பாவை கிண்டல் பண்ணா உனக்கு வேணா இனிக்கலாம்.”
அவள் முடிக்கும் முன், “செஞ்சு தான் பாரேன்… அப்புறம் தெரியும் சேதி…” கணத்தில் உடல்மொழியில் வேகமும், வார்த்தையில் காட்டமும் ஏகத்துக்கும் கூடிவிட்டது.
அவன் பேசிய போது என்ன, அப்போதும் கூட அவனுக்கு அவனின் தவறு உறைக்கவில்லை. மாறாக, அந்த மண்ணுக்கே உரிய முன் கோபம் முணுக்கென எட்டி பார்த்தது.
அந்நியன் முன் கெஞ்சி பரிதவித்து நின்ற அவல நிலை ஒரு பக்கம் எனில் கால் வலி கொடுத்த வேதனை போதாதற்கு, அவனின் மரியாதை குறைவான பேச்சு கிளப்பிய எரிச்சலில் அதுவரை கட்டி காத்த மரியாதை அருகே ஓடும் ஆற்றோடு ஓடி விட, “மனுஷிக்கு இங்க நிக்க முடியாம வலி உயிர் போகுது. இதுல, உங்கப்பாவை கிண்டல் பண்றது தான் எனக்கு முக்கியம். ச்சீ போடா அந்த பக்கம். வந்துட்டான் உதவி பண்ண, ஆளையும் முகத்தையும் பாரு! பெரியவங்களை மரியாதை குறைவா பேசுவான். கேட்டா, எகிறிட்டு வரான் காட்டான்!” பொங்கி விட்டாள் மாது.
பதினாறு வயது பயம் அறியா பிள்ளை வயது! அனுபவமற்ற துடுக்கு பருவமல்லவா? அவளின் செல்ல அப்பாவை குறைத்து பேசியவனின் மேல் எழுந்த கோபத்தில் மனதில் தோன்றியதை படபடவென கொட்டி விட்டாள் விடலை பெண்ணவள்.
அவளின் ச்சீ போடாவில் சுணங்கியவனின் முகம், கோப அரிதாரத்தை பூசும் முன், அவளின் நலுங்கிய தோற்றம், வலியில் சுளித்த முகம், கண்களை இறுக்க மூடி, உதட்டை கடித்து, அடுத்த அடியை எடுக்கும் அவளின் உடல்மொழியை பார்த்து, அவள் பேச்சை உடனே ஒதுக்கியவன், “ஆமா, டாக்டருக்கு இப்படி ஒரு பெண் பிள்ளை இருக்கறது ஊர்ல அவ்வளவா தெரியாது போல.” எதற்கு தன்மையாக பேச்சை மாற்றினான் என்று அவனுக்குமே தெரியாது.
சில நொடிக்கு முன் அவனை ஏசியது மறந்தவளாக, “ஆமா, நான் நெல்லையில ஹாஸ்டல்ல தங்கி ஸ்கூல் படிக்கேன். லீவுக்கு மட்டும் தான் இங்க வருவேன்.” பேசிக் கொண்டு நடப்பது அவளுக்கு சற்றே வலியின் வீரியத்தை குறைப்பது போன்ற ப்ரம்மை. ஆகவே வாய் பூட்டு அவிழ்ந்தது.
“அப்படியா” என்றவன், மெல்ல பேச்சு வளர்த்தான். பட்டாம்பூச்சி அவள். ஒரு பக்கமாக அடிபட்ட பாதத்தில் பளு ஏற்றாமல், வலியை கிளப்பாது, அதே நேரம் பாதையில் ஜாக்கிரதையாக காலடி எடுத்து வைப்பதில் முழு கவனம் செலுத்தியவளுக்கு இவன் அந்நியன் என்பது சிந்தனையில் இருந்து சற்றைக்கு மறந்து போய் விட்டது.
கிடைத்த சந்தர்ப்பத்தில் எந்த பள்ளி, எத்தனாம் வகுப்பு, எங்கே வாசம் முதலிய தகவல்களை எல்லாம் சில நொடிகளில் கறந்து விட்டான் அந்த மாயவன். அணை போட்ட அவளின் ஆரம்ப தயக்கம், இப்போது சுத்தமாக மாயமாகி இருந்தது.
“ஆமா… நீங்க யாரு?” ஐந்து நிமிடமாக தன் சுயபுராணத்தை யோசிக்காமல் ஒப்பித்தவள் சட்டென்று கேட்கவும், சத்தமாக சிரித்தான்.
“இப்போவாவது நான் யாருன்னு கேக்க தோணுச்சே! ஒரு மனுஷன் தெரியாம ஒரு கேள்வி கேட்டுபுட கூடாது. நிறுத்தாம குத்தால அருவியா வாழ்க்கை வரலாறை கொட்டி தீரத்துடணும்.” கேலி இழையோட சற்றே சிணுங்கலாக அங்கலாய்த்தவனின் குரலின் பாவம், வாளை குமாரிக்கு புரிந்து இருக்கவில்லை.
ஆனால், அவளின் மற்ற தவறு புரிய, அப்போதும் அவனை கண்டு பயம் இல்லை. மாறாக தன் சைக்கிளை கெட்டியாக பிடித்தவள்… “நீ போ… என்னை நக்கல் பண்ற நீ!” சிறு பிள்ளையாக சிணுங்கி, முகத்தை சுருக்கினாள்.
அவளின் அறியா குழந்தை பாவனையில் இடம் மாறி விட்ட இதயம் மேலும் தடுமாற, தன்னை அவள் கண்டு கொண்டு விடும் முன், ஒரு ஆழ் மூச்சில் தன்னை நிலைப்படுத்தி, பேச்சை வளர்த்தான். “என் பேரு செந்தூர் அழகன்… மெக்கானிகல் இன்ஜினீயரிங் படிக்கறேன். நானும் லீவுக்கு தான் ஊருக்கு வந்திருக்கேன்.”
“மெக்கானிகலா? எங்க மாறன் ஐ.டி எடுத்திருக்கான்.”
“யாரு மாறன்?”
“என் கூட பொறந்த குரங்கு…”
“ஹ ஹ ஹா… ஒரு குரங்கே தன்னை குரங்கென்றது…”
சட்டென்று சைக்கிளை அவன் புறமாக அவள் தள்ளி விட, அவளை தானே கவனித்து கொண்டிருக்கிறான். ஆகவே சுதாரித்து அழகனும் தன் மேல் அடிபடாமல் வண்டியை பிடித்து விட, இயலாமை மேலோங்க கோபமாக ஒரு அடியை தங்கென எடுத்து வைத்தவளுக்கு கால் வலி உயிரே போய் விட்டது. “உஸ்.. ஐயோ அம்மா…” அப்படியே நின்று விட்டாள். கண்ணில் இருந்து கண்ணீர் பொங்கி விட்டது.
“லூசு… அதான் கால்ல அடி பட்டிருக்குள்ள, பார்த்து நடக்கறதுக்கு என்ன?” என்றவனுக்கு பதில் கூட தர முடியாத அளவுக்கு நோவு எடுத்ததில், பல்லை அழுந்த கடித்து, இன்னும் முகத்தை சுருக்கி, சைக்கிளும் பிடிமானத்துக்கு இல்லாததில் லேசாக தடுமாறிட… “ஹே பட்டர்ஃபிளை” என்றவன் பிடிக்க நெருங்கும் முன், அவளாகவே, ஒரு செடியை பற்றி, தன்னை நிலைப்படுத்தி கொண்டாள்.
அவளின் முகபாவங்களை கூர்ந்து அவதானித்து கொண்டிருந்தவன், “ரொம்ப வலிக்குதா பட்டர்ஃபிளை?” அவன் விளித்த விதம் பிடிக்காதவளாக, “அப்படி கூப்பிடாதே” எனவும்,
“அப்ப பேரை சொல்றது. இல்லைன்னா, இப்படி தான் வாய்க்கு வந்த பேரை வெச்சுடுவேன்.”
“முன்ன பின்ன தெரியதவங்ககிட்ட எல்லாம் என் பேரை சொல்ல முடியாது.” உர்ரென்று பதில் வர…
“ஹ ஹ ஹா… ஜோக்கு… முடியலையே,” உரக்க சிரித்தவன்… “முழு ஜாதகத்தையும் ஒப்பிச்சுட்டு, பேரை சொல்ல மாட்டேங்கறா, கிறுக்கு பய மக...” கிண்டலடித்தான்.
தான் செய்த முட்டாள்தனம் புரிய, அந்த கடுப்பும் சேர்ந்து, “இங்க பாரு… சும்மா சும்மா என் அப்பாவை கேலி பண்ண, நடக்கறதே வேற. அந்த சைக்கிளை அங்க சாய்ச்சு நிறுத்து. பூரி என்னை பூரி கட்டையால அடிச்சாலும் பரவாயில்ல, வாங்கிக்கறேன். நீ மொதல்ல நடையை கட்டு, போ… போங்கறேன்ல…” விரலை நீட்டி மிரட்டலாக மையூ கத்தினாள்.
அதை பொருட்படுத்தாது “யாரு பூரி?” ஆர்வமாக கேட்டான்.
“அஸ்கு புஸ்கு சொல்ல மாட்டேனே… நீ செஞ்ச உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ்… இடத்தை காலி பண்ணு.”
“இங்க பார்ரா… இந்த மண்ணுல பொறந்து வளர்ந்த என்னை பார்த்து என்ன சொல்லிட்டா…” அழகன் ராகமாக இழுக்க…
அவன் நகருவதாக தெரியவில்லை எனவும், “சரி… நீ இங்கேயே என் சைக்கிளுக்கு காவலா இரு… நான் கிளம்பறேன்.”
“ஏ புள்ள… வீடு வரை உன்னால நடக்க முடியுமா? இல்ல இங்க சாஞ்சு நில்லு… தோப்புக்குள்ள என் கார் நிக்கிது. அதுல உன்னை டிராப் செஞ்சுடறேன்.”
“தோப்பா…” என்றவள், அவன் கண் அசைந்த திசையில் ஸ்கந்தவேல் என பெரிய கேட்டில் பொரிக்க பட்ட பேரை பார்த்து அதிர்ந்து,
“ஐயோ…” நொடியில் கண்களில் அச்சம் குடியேற, “அப்போ… நீ… நீங்க… மலையர் ஐ… ஐயா பிள்ளையா?” திக்கி திணறி கேட்டாள்.
அகல விரிந்த அவள் விழிகளில் கவரப்பட்டவன், “ம்ம்…” தலை முடியை ஸ்டைலாக கலைத்து விட்டான்.
இன்னார் அவன் என்ற அதிர்வில் திருதிருவென விழித்தவளை கண்டு சிரித்தவன், “இப்போ சொல்லு பேர் என்ன?”
மலையர்… மருதமலையான்… அழகனின் தந்தையின் பேரைக் கேட்டால், சிம்ம சொப்பனம் ஊராருக்கு! அவர் மகன் எனவும், அதுகாறும் இருந்த சகஜத்தன்மை மறைந்ததில், நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டி கொள்ள, மிரண்டு முழித்தவளை… பார்த்தவனுக்கு, அவர்களின் பேரை கேட்டாலே போதும், இந்த மிரட்சி பார்வை ஊராரிடம் சகஜம் என்று தெரியுமாதலால், அதை சாதகமாக்கி கொண்டு “பேர் சொல்லுங்கறேன்ல?” சற்று அதட்டினான்.
“ம… மயூரி…” வார்த்தை தந்தி அடித்தது.
“ஆஹான்… கேட்கலை… சத்தமா சொல்லு…”
மிரண்டிருந்தவள், இப்போது “மயூரி சிவபாதம்” வேகமாக சொன்னாள்.
‘அழகான மயிலுக்கு பொருத்தமான பேர்…’ மனதில் எண்ணி கொண்டவன், “உங்கப்பாவுக்கு போனை போடுறேன்…”
“இல்ல… இல்ல வேணாம்… நான் போயிடுவேன்.”
“உன் கால்ல நல்ல அடி. காரும் எடுக்க வேணாம், அப்பாவுக்கும் சொல்ல கூடாதுன்னா எப்படி புள்ள?”
“இல்ல… வீட்ல யாரும் இல்ல. அது அம்மாவும், அப்பாவும் ஒரு கல்யாணத்துக்கு கருக்கல்ல மொத பஸ் பிடிச்சாங்களா, எனக்கு தூக்கம் கலைஞ்சுடுச்சு. சரி, இங்க ஆத்துல நீந்துவோம்னு கிளம்பி வந்தேன். நான் வெளிய வந்தது அம்மாவுக்கு தெரியாது…” மளமளவென உளறி கொட்டினாள்.
“வாலு… ஆத்துல நீந்த கிளம்பினியாக்கும். அந்த வேகத்துக்கு உன்னால சமாளிக்க முடியுமா?”
“ஏன் முடியாது? அப்பா, சொல்லி தந்து இருக்காங்க. இந்த அம்மா தான், வயசு பிள்ள… இதெல்லாம் கூடாதுன்னு எல்லாத்துக்கும் தடை போடுறது.”
“ஓ… ஒரு சான்ஸ் கிடைக்கவும், இப்படி தனியா வந்து சிக்கிட்ட…” பேசிக் கொண்டே அவளை முந்தி கொண்டு மேலே ஏறியவன், சாலையின் இரு புறமும் பார்வையை சுழற்றினான். ஒரு ஈ… காக்கா அங்கே இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தி கொண்டு மையூவின் புறம் திரும்பியவன், “எங்க தோப்பு வழியா, உங்க வீட்டுக்கு பின்ன முடியற குறுக்கு வழி ஒண்ணு இருக்கு. அதுல போயிடு…”
“அதான், அந்த வாசலை நல்லா பெரிய கேட்டை போட்டு, இத்தனை பெரிய கனமான பூட்டையும் போட்டு பூட்டி வெச்சு இருக்கீங்களே. இந்த காலை வெச்சுக்கிட்டு, கேட் ஏறி எல்லாம் இன்னைக்கு என்னால குதிக்க முடியாது.”
அவள் முன் ஒரு சாவி கொத்தை ஆட்டியவன்… “கேட் சாவி என்கிட்டே இருக்கு. நீ சீக்கிரம் வா… ஆளுங்க யாரும் வரதுக்கு முன்ன, வீடு போய் சேருவ…”
சைக்கிளை உருட்டி கொண்டே சாலையை கடக்க உதவியவன், அந்த கேட்டை திறந்து உள்ளே சென்ற பின், அதை பூட்டி, தோப்பின் எல்லை ஓரமாக மையூவின் வேகத்துக்கு நடந்து, மறுபுறம் இருந்த தாளையும் திறந்து… அவள் வெளியே சென்ற பின்,
“மயிலு… நல்லா சுடு தண்ணியில குளிச்சுட்டு, ஏதானும் சாப்பிட்டுட்டு, ஒரு வலி மாத்திரை போடு. நாளான்னிக்கு இந்நேரத்துக்கு இந்த கேட் பக்கம் வந்து கால் எப்படி இருக்குன்னு சொல்லு.”
“என்னன்னு என்னை கூப்பிட்ட நீ?” மீண்டும் பயமும், மரியாதையும் மறைந்து போனது.
அதை அவனும் கவனித்தாலும், அவளை பிடித்த காரணத்தினால் கண்டு கொள்ளாமல் விட்டவன், வேண்டுமென்றே, வம்பு வளர்த்தான்.
“ம்ம்… மயிலு… அதானே உன் பேரு…”
“இல்ல மயூரி…”
“எல்லாம் எனக்கு நீ மயிலு தான். பார்த்து போ…”
கால் வலியில் இருந்தவள், இவனிடம் வாதிட்டு பயனில்லை என்பதால், அந்த பாதையில் மெல்ல நடக்க துவங்க, பாதையின் திருப்பத்தில் அவளின் தலை மறையும் வரை விழி அகற்றாது பார்த்திருந்தவன்,
மயிலு...மயிலு மயிலம்மா
மல்லுக்கட்டலாமா...
குயிலு...குயிலு குயிலம்மா
கொஞ்சிட நீ வாமா…
விசிலடித்துக் கொண்டே தோட்டத்து வீட்டை நோக்கி நடந்தான் செந்தூர் அழகன்.
எதிர்பாராத அந்த சந்திப்பில் கண்டதும் காதல் என அவனின் இள நெஞ்சில் ஓர் விதை விழுந்திட… இதோ ஒன்பது ஆண்டுக்கும் மேலாக தன் காதலை நெஞ்சில் உரமிட்டு வளர்த்து வருகிற அழகனும், மயிலும் ஒன்று சேர்வார்களா?
Comments