மஞ்சக்காட்டு மயிலே
தோகை 5
நிலா பெண் வானில் மென் உலா துவக்கிய அந்த இரவு வேளையில், ஆத்தூர் பெரிய வீட்டில் இருந்த அலுவலக அறையில், இரு கட்டை விரல்கள் கன்னத்தில் பதிய, மற்ற விரல்களை ஒன்றாக வணங்குவது போல குவித்த நிலையில், நெற்றியில் லேசாக தட்டி கொண்டு, தலை குனிந்து கண் மூடி அமர்ந்திருந்தவனின் முன் வந்து நின்ற தன் வரவை கூட உணராது மோன நிலையில் அமிழ்ந்திருந்த அழகனிடம்,
மென் குரலில்… “கூப்பிட்டீங்களே அண்ணா,” என்று நடப்புக்கு இட்டு வந்தான் சௌந்தர்.
மெதுவே கண்களை திறந்தவன், தன் முன் இருந்த அச்சிடப்பட்ட காகிதத்தை எடுத்து நீட்டி, “காலையில நீயே ஃபேக்ஸ் அனுப்பிடு சௌந்தர்.” என்றான்.
“சரிங்கண்ணா,” என தலையை ஆட்டியவனின் கண்கள், அழகன் கையெப்பமிட்டிருந்த மயூரியின் வேலை மாற்று ஆர்டரை தாங்கிய அந்த பேப்பரை வேகமாய் படிக்க தவறவில்லை.
“இந்த விஷயத்துல நான் மட்டும் தான் முடிவெடுப்பேன். எனக்கு தெரியாம வேற யாரும் இந்த ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் மேல என் உத்தரவை மீறி ஆக்க்ஷன் எடுக்காம பார்த்துக்கோ. நான் சொன்னது புரிஞ்சுதா?”
“நீங்க கவலைப்படாதீங்க, அண்ணி நம்ம ஊருக்கு நிச்சயம் வராங்க, வர வெச்சுடலாம்.” அழகன் முகத்தில் கீற்றாக புன்னகை பூத்ததை காணவும் சௌந்தருக்கு கூட நிறைவாக இருந்தது.
அழகன் - மயூரி காதல் விஷயம் அறிந்த மூன்று ஜீவன்களில், இப்போது உயிரோடு இருப்பது சௌந்தர் மட்டுமே. கல்லூரியில் அழகனுக்கு ஜூனியர் மட்டுமல்ல சௌந்தர், அதே ஊர் பையனும், ஒரு வகையில் தூரத்து உறவும் ஆவான்.
அழகனை ரோல் மாடலாக கொண்ட விசுவாசி. மயூ விஷயம் எல்லாமே அறிந்த, அழகனின் முழு நம்பிக்கைக்கும் பாத்திரமான சௌந்தர் தான், அவனுக்கு தேவையான திரை மறைவு உதவிகளை செய்பவன். இப்போதும் அண்ணனின் ஆணைக்கு கட்டுப்பட்டு நிற்கிறான்.
**************************************************************
மறுநாள் ஆதவனின் ஆகர்ஷிக்கும் கிரணங்கள் உதித்த வேளையில்…
திருவண்ணாமலையில்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டி வரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா
சீர்காழி கோவிந்தராஜன், டி..எம் சௌந்தரராஜன், என்ற இரு இசை மேதைகளின் வெண்கல குரலில் தொலைக்காட்சி திரையில் பாடல் கணீரென ஒலிக்க, காலையில் கண் விழிக்கும் போதே செந்தூர் என்ற சொல் காதில் விழவும், பரவசம் எழுவதற்கு பதிலாக, மயூரிக்கு கோபம் பொங்கியது.
இரவுகளில் அவள் சரியாக தூங்கி ஒன்றரை மாதத்துக்கு மேலாகிறது. தினமுமே நேரம் சென்று அதுவும் பூரி அம்மா ஏதோ ஒரு பாடலின் வாயிலாக திருப்பள்ளியெழுச்சி கொள்ள செய்கிறார். அவ்வரிசையில் இன்று எழும் போதே முருகனின் பாடல்கள் செவியில் நுழைந்து மனதை துளைக்க, நித்திரையை களவாடும் அவள் அழகனின் நினைவுகளின் எதிரொலி போல, பகலிலும் தொடர்ந்து அப்பெயர் அவளை பைத்தியமாக்குவதை தடுக்கும் வழி புரியாது தவித்தவள், பல்லை கூட விளக்காமல் வேகமாக ஹாலுக்கு விரைந்தாள்.
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும்
புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்
அதற்குள் அடுத்த பாடல் துவங்கி விட, சமையல்கட்டில் இருந்த பூரணி வேறு, எப்போதும் போல சத்தமாக உடன் பாடி கொண்டே, சமையலை கவனிப்பதை கண்டு, எண்ணங்களுக்கு அணை இட முடியாத மயூ, மளமளவென டீ.வியை அணைத்தாள்.
பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன் ஆவேன் - பனிப்
மகள் பாடலை நிறுத்தியது கூட கவனிக்காமல் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்த பூரியின் நடவடிக்கை ஒன்றும் புதிதல்ல. இந்த சில வாரங்களாக பெரும்பாலும் இதை கண்டுகொள்ளாமலும் சில நாட்கள் எரிச்சலாக அன்னையிடம் மல்லுக்கட்டியும் தான் பெண் மயிலின் பொழுதே துவங்குகிறது.
பசலையில் வாடி கொண்டிருந்த மயூவுக்கு அன்று கிருத்திகை என்பதால் தான் பக்தி அலைவரிசையில் ஒலிபரப்பாகும் சிறப்பு முருகன் பாடல்களுக்கு தானும் குரல் கொடுக்கிறார் அன்னை என்பது கவனத்தில் பதியாது போனது.
தன் கடுப்பை மறையாமல், “ம்மா… அம்ம்ம்மா… போதும் நிறுத்துங்க. காலையில எதுக்கு இப்படி கத்துறீங்க?”
திடீரென கேட்ட மகளின் அதட்டலில், ஒரு நொடி அதிர்ந்த பூரணி, அப்போது தான் டி.வி உடன் பாடவில்லை என்பதை உணர்ந்தார். மகளின் கேள்வி உறுத்த, “இப்போ... என்னையவா கத்துறேன்ன மயூ?”
ஃபிளாஸ்கில் இருந்த காப்பியை டம்ப்ளரில் ஊற்றி கொண்டே “ஆமா… ம்மா சாட்சாத் உங்களைத் தான்!”
மகளின் திட்டவட்ட பதிலில், “நான் பாடுறது… கத்துறது போல இருக்கா உனக்கு? நோ சான்ஸ்… எங்கவூர் லோக்கல் மியூசிக் ட்ரூப் மெயின் சிங்கர் நான்! என் கல்யாணத்துக்கு முன்ன எத்தனை விஷேஷ வீட்டு கச்சேரியில பாடியிருக்கேன். உங்கப்பா, ’நீ பாடுறதை இன்னைக்கெல்லாம் கேட்டுட்டே இருந்துடலாம் பூம்மா! சாப்பாடு, தூக்கம் கூட எனக்கு தேவையில்லை’ன்னு அப்படி ரசிச்சு சிலாகிப்பார்.”
அவளின் இயலாமையால் ஒன்றை செய்ய போய், அமரராகிவிட்ட கணவர் புராணத்தை காலையிலேயே அன்னை துவக்கி விடவும், மயூவுக்கு அழலாம் போலாகி விட்டது. பூரணி இசை ஞானம் உள்ளவர். அதிலும் சுமாருக்கும் சற்று கூடுதலாகவே பாடுவார் என்பது உண்மை. ‘அப்படிப்பட்டவரை, தானா இப்படி வருத்தியது? எல்லாம் இந்த அழகானால் வந்தது!’ மனதில் நொந்து கொண்டவள்,
“சாரி பூரி…”
மகள் மன்னிப்பு வேண்டிய விதத்தில், மேலும் வெகுண்டவர், “கிண்டல் பண்றியா மயூ? லாலி பாட்டு பாடுங்கம்மான்னு எத்தனை வாட்டி என்கிட்டே நீயே கேட்டிருக்க? இப்போ என்னை கேலி பண்ற அளவுக்கு ஆயிடுச்சு. பார்த்தீங்களாங்க உங்க மகளை?” மீண்டும் மீண்டும் இல்லாத கணவரை துணைக்கு இழுத்தார்.
அவரின் அடுத்த தாக்குதலில்… தலையில் கை வைத்த மயூ, “ஐயோ மை டியர் லவ்லி அம்மா! என் பட்டு சூப்பரா பாடுவாங்க. டீ.வி., தான் சத்தமா, கேட்கவே சகிக்கலை. என்னோட ஃபேவரிட் சூப்பர் சிங்கர் நீங்க தான். எனக்கு தலைவலி பூரி செல்லம். அதான் அப்படி பேசிட்டேன். சாரிம்மா!” கெஞ்சுதலாக மன்னித்து விடுங்கள் என்ற பாவனையோடு அன்னையை பார்த்தாள்.
“என்ன தலைவலியா?” ஈர கையை புடவையில் துடைத்தவர், மகளின் நெற்றி, கழுத்தில் கை வைத்து சோதித்தார்.
அன்னையின் கரிசனையில் நெகிழ்ந்தவள், ‘தனக்கு ஒன்றென்றால் பதறி துடிக்கும் அன்பு அம்மா, தன் மேல் உயிரையே வைத்திருந்த ஆருயிர் அப்பா! இவர்களின் முன் அழகன் முக்கியமா?’ நேரம் தெரியாமல் மனதில் கேள்வி எழ… அதை ஒதுக்கி தள்ளியவள்,
“இல்ல… ஐ ஆம் ஓகேம்மா… உன் காஃபி இஸ் தி சீக்ரட் ஆஃப் மை எனெர்ஜி.” எழுந்த நொடி முதல் சொதப்பியதை ஈடு செய்ய அம்மாவுக்கு ஐஸ் வைத்தாள்.
“உடம்புக்கு முடியலைன்னா லீவ் போடு மயூம்மா, இன்னும் கொஞ்ச நேரம் தூங்குடா. அம்மா உனக்கு தலை பிடிச்சு விடறேன். வீணா ஸ்ட்ரெயின் செஞ்சுக்காதே.”
“இல்லம்மா லீவ் போட முடியாது. நேத்து பேப்பர் சப்மிட் செஞ்சேன்ல, அந்த அலுப்பு தான் வேறொண்ணுமில்லை. இன்னைக்கு நான் அவசியம் போயாகணும்.”
இனி தான் நிஜ தலைவலி வர போவது அறியாத மயூ குளித்து கிளம்பி வரும் போதே தன்னை ஆசுவாசப்படுத்தி, “இனி அம்மாகிட்ட இது போல யோசிக்காம பேசி வைக்காத, பாவம் பூ ம்ம்மா… இப்போ தான் இந்த ஒரு மாசமா கவனம் பிசகி வேலையில செஞ்சுட்டு இருந்த சொதப்பலை நிறுத்தின! அதுக்குள்ள, வீட்ல ஆரம்பிச்சுட்ட… கேர்ஃபுல் மயூ,” தன்னையே எச்சரித்து கொண்டவள், அம்மா பாசத்தோடு ஊட்டி விட்ட காலை பலகாரத்தை திவ்யமாக உண்ட பின், தன் ஸ்கூட்டியில் வேலைக்கு பறந்தாள்.
***************************************************
அன்று காலை முதல், கோசாலையில் ஓய்வின்றி வேலை பார்த்து கொண்டிருந்த மயூரியிடம் வந்த பியூன், டைரக்டர் பார்க்க அழைப்பதாக தகவல் தரவும், தான் அதுவரை சேகரித்த இரத்த சாம்பிள்களை பதப்படுத்தி ஆய்வை துவக்கும் படி லேப் உதவியாளர் கலாவுக்கு பணித்தவள், மெயின் ஆஃபீஸ் நோக்கி விரைந்தாள்.
“வாம்மா மயூரி!”
“சார், இன்னைக்கு சாம்பிள்ஸ் எடுத்தாச்சு. இதோட இந்த சைக்கில் கம்ப்ளீட் ஆயிடுச்சு. இனி டெஸ்ட் செஞ்சு, ரிசல்ட்ஸ் வந்தப்புறம் டேட்டா அனலைஸ் பண்ணனும்.” வேலை தொடர்பான அப்டேட்டை சின்சியராக ஒப்பித்தாள்.
“குட் மயூரி… இந்த ரிசர்ச் ப்ராஜெக்ட்டை எடுக்க அத்தனையா யாரும் முன் வரலை. நீங்க உங்க பி.ஜி தீசிஸா எடுத்த டாபிக் என்றதால இன்வால்வாகி இங்க போஸ்ட்டானீங்க. இப்போ உங்க பேப்பர் சப்மிஷன் பார்த்து இதே தலைப்புல இன்னும் சிலருக்கு ஆர்வம் வந்திருக்கறது என் கவனத்துக்கு வந்திருக்கு. கேட்கவே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.”
“அப்படியா சார்! ரொம்ப நல்ல விஷயம் இது.” மயூவும் பூரிக்க…
“உங்களை கூப்பிட்ட காரணம், இதே ஆய்வை இன்னொரு சென்டர்ல பண்ற நல்ல வாய்ப்பு வந்திருக்கு. தமிழக அளவில் ஒரு பெரிய மெகா ப்ராஜெக்டா இது உருவெடுக்கற சாத்தியம் ஜாஸ்தியாகிட்டு வருது. அதன் முதல் கட்டமா, உங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் வந்திருக்கு மயூரி.”
“சார்… என்ன சொல்றீங்க? ட்ரான்ஸ்ஃபரா… எனக்கா?” அப்பட்டமான அதிர்வு பெண் மயிலுக்கு.
“ஆமா மயூரி…”
“ஆனா, இப்போ தான் நம்ம ஆராய்ச்சி விரிவாக போகுதுன்னு சந்தோஷப்பட்டீங்க! அதுக்குள்ள எனக்கு பணி மாற்றம் கொடுத்தா எப்படி?”
மயூவை முடிக்க விடாமல்… “அதுவும் தான் மயூரி! நம்ம டாக்டர். சீதாராமன், ரிட்டையராக இன்னும் பதினஞ்சு நாள் தான் இருக்கு. அவரோட ப்ரெயின் சைல்ட் இந்த ப்ராஜக்ட்! அவரோட ஆறு மாசமா வேலை செஞ்ச அனுபவம் உனக்கு மட்டும் தானேம்மா இருக்கு. சோ இதே ரிசர்ச் தொடர்ந்து சரியாய் நடக்கணும்னா, நீ தான் பொறுப்பெடுக்கணும். அதுக்கு தான் இந்த ட்ரான்ஸ்ஃபர்.”
டைரக்டரின் கூற்று புரியாதவளாக, தெளிந்து கொள்ளும் பொருட்டு, “பட் சார்… இங்க, நான் ஆரம்பிச்ச வேலை பாதியில நிக்குதே!”
“டாக்டர். சீதாராமன், இன்னும் மூணு மாசம் ஹானரரியா தொடர்ந்து வந்து ப்ராஜெக்டை மேற்பார்வை செஞ்சுக்க ஒத்துகிட்டார். அப்படியே, அந்த சமயத்துல, அடுத்த ரிசர்ச் ஸ்டூடன்டையும் தயார் செஞ்சுடுவார். இப்போ, இங்கே எப்படி சீதாராமன் ஆராய்ச்சியை இந்த நிலைக்கு கொண்டு வந்து இருக்காரோ, அதே போல நீ உன் திறமையை அடுத்து காண்பிக்க வேண்டிய இடம்… ஆத்தூர்!
“வாட்… எங்க? எங்கன்னு சொன்னீங்க சார்?”
“ஆத்தூர்ல மயூரி! திருநெல்வேலி பக்கம் இருக்கு அந்த ஊரு. ரெண்டு வருஷம் முன்ன, அங்க ஊரக வளர்ச்சி மானியத்தின் கீழ், இதே போலான நடுத்தர அளவு பால் வள துறை மையம் ஒண்ணு, நம்ம அமைச்சர் செந்தூர் அழகானால், அவரோட சட்டசபை தொகுதி முன்னேற்றத்துக்காக துவக்கப்பட்டது.”
“போன மாசம் அமைச்சர் இங்க வந்த போது, நம்ம செயல்பாடுகளை ஆர்வமா கேட்டு தெரிஞ்சுக்கிட்டார். இந்த அளவில் இல்லைன்னாலும் சவுத்ல ஓரளவுக்கு இதே ப்ராஜக்ட் கொண்டு வந்தா நல்லா இருக்கும்னு அமைச்சரைய்யா அபிப்பிராயப்பட்டார். அதன் முதல் கட்டமா, தான் இப்போ நடவடிக்கை எடுத்து இருக்கார்.”
டைரக்டரின் விளக்கத்தை கேட்டு கொண்டிருந்த மயூரிக்கு, அதிர்ச்சியில் கால்கள் தள்ளாடின. நல்ல வேளையாக நாற்காலியை பிடித்து கொண்டு நின்றிருந்ததால் சமாளித்து கொண்டாள்.
அன்று மேடையில் டாக்டர். சீதாராமனின் அறிமுகத்தில் பேசியதை அழகன் கவனமாக கேட்டது போல தெரியவில்லையே! ‘சில நொடி அளவளாவலில் தெரிவிக்கபட்ட தகவல் கொண்டு, இத்தனை பெரிய ஏற்பாடா?’ குழம்பியவள்…
“சார்… நான் போகணும்னு என்ன அவசியம்? இது யார் போட்ட உத்தரவு? மினிஸ்டர் ஏதும் அப்படி சொன்னாரா?” தடுமாற்றத்தில், அவளையும் மீறி கேள்விகள் வெளிப்பட்டன.
மையூவின் குரல் பேதத்தை கவனியாதவராக, “ச்சே ச்சே… இல்லம்மா, திடீர்னு நம்ம டாக்டர்.சீதாராமன்கிட்ட தான், கொஞ்ச நாள் முன்ன, அமைச்சர் இது பத்தி ரொம்ப விரிவா பேசினாரு. அவரைத் தான் அங்க வந்து இதே ஆய்வை தொடங்கி, தொடர கேட்டார். ரிடையர்மென்ட் டைம்ல ஊர் மாறி போக விருப்பமில்லாதது மட்டுமில்ல, ஏற்கனவே மகனோட குடும்பத்தோட பெங்களூரு போய் செட்டிலாக, நம்ம எஸ்.ஆர் ஏற்பாடெல்லாம் செஞ்சுட்டாரே.”
“அதான், தன் திட்டமும் பாழாகாம, அதே நேரம் அடுத்த தலைமுறையான உனக்கு, அதுவும் இந்த குறிப்பிட்ட சப்ஜெக்ட்ல ஆர்வமா இருக்கற உனக்கு, இது உதவியா இருக்கும்னு, தனக்கு பதிலா உன் பேரை நம்ம எஸ்.ஆர் தான் முன்மொழிஞ்சார்.” பொறுமையாகவே எடுத்து சொன்னவர், கூடுதலாக…
“ஆக்சுவலி… சீனியாரிட்டி படி தான் நாங்க போஸ்டிங் போட்டிருக்கணும். ஆனா, சீதாராமன் மேல இங்க எல்லாருக்கும் எவ்வளோ மரியாதைன்னு நான் சொல்லி தெரிய வேணாம். அதான், ‘இந்த பைலட் ப்ராஜெக்ட் முழு வீச்சில் செயல்பட நீ தான் பொருத்தமானவ’ன்னு எஸ்.ஆர் அபிப்பிராயப்படவும், அவர் ஆலோசனையை ஏற்று, எல்லாரும் ஒருமித்த முடிவுக்கு வந்து, தகுதி அடிப்படையில உன்னை ப்ரொமோட் செய்ய ஒத்துக்கிட்டாங்க.”
ஒவ்வொரு வார்த்தையையும் கேட்ட மயூவுக்கு அடுத்து என்ன பேச என்றே தெரியவில்லை. தான் பெரிதும் மதிக்கும் எஸ். ஆர் தன்னை முன்னிறுத்தியது தன் அறிவுக்கும், வேலை திறனுக்கும் கிடைத்த வெகுமதியா இல்லை இதில் அழகனின் தலையீடு உள்ளதா? உண்மை புரியாத குழப்பம் மூளையை ஆக்கிரமிக்க, அவர் பேசியதை அமைதியாக கேட்டவள்…
“சார், எனக்கு அந்த ஊருக்கு போக விருப்பம் இல்ல.” தயங்கினாலும், சொல்ல நினைத்ததை அங்கேயே அப்போதே பெண்ணவள் பட்டென தெரிவித்து விட,
“வாட்? என்ன சொல்றீங்க மயூரி?” இப்போது அதிர்வது டைரக்டரின் முறையானது.
“இல்ல சார்… இப்போ ட்ரான்ஸ்ஃபர் சரியா வரும்னு எனக்கு தோணலை.”
மென்குரலில் பதிலுரைத்தவளை பார்த்து, தன் அதிருப்தியை வெளிப்படையாக முகத்தில் படரவிட்டவர், “இந்த சின்ன வயசுல உங்க ஆராய்ச்சிக்கு கிடைச்ச பெரிய அங்கீகாரம் இது. அனுபவம் இல்லைன்னு, உங்க மறுப்பே காமிக்குது. உங்க கரியருக்கு இது நல்ல திருப்பமா இருக்கும். யோசிச்சு செய்ங்க.”
“எனக்கு விருப்பமில்லைன்னு நீங்களே அமைச்சர்கிட்ட சொல்லிடுங்க சார்.” பிடிவாத த்வனியில் மயூரி அழுத்தமாக உரைக்க,
“என்னம்மா கொஞ்சமும் புரிஞ்சுக்காம பேசுற? உனக்கு மேல இருக்கற சீனியர்களை ஓரம் கட்டி, உன் அறிவுக்கும், ஆற்றலுக்கும் கொடுக்கப்படுற இந்த அங்கீகாரத்தை துச்சமா தூக்கி போடுறியே. இப்படி கொஞ்சமும் பொறுப்பில்லாம நடப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை.”
எரிச்சலாக மொழிந்தவரிடம், மையூ மேல பேசும் முன், “இந்தாங்க உங்க ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர். உங்களை உடனே ரிலீவ் செய்ய சொல்லி கூட உத்தரவு வந்திருக்கு எனக்கு. சோ, என்கிட்டே மறுத்து பிரயோஜனமில்லை. அப்படி போக விருப்பப்படலைன்னா, லீவ்ல போங்க. தானா தேடி வர்ற உயர்வுக்கு இவ்வளோ தான் இந்த காலத்துல மதிப்பு.”
“நாங்க எல்லாம் பல வருஷம் உழைச்சு, நடுத்தர வயசுல உத்தியோக உயர்வு வாங்கி, புள்ள குட்டிங்களோட படிப்பு அது இதுன்னு பார்த்து மேல முன்னேறி போக வழி இல்லாம ஒரே இடத்துல தேங்கி நின்னோம். போட்டியும், எதிர்ப்பும் இல்லாம சுளுவா கிடைச்சுட்டதால உனக்கு இந்த ப்ரமோஷனோட அருமை புரியலை,” கடுகடுவென வார்த்தைகளை கொட்டினார் டைரக்டர் டாக்டர். சிங்காரவேல்.
பொருமியவரின் கூற்றை அமைதியாக வெறுமே தலையை உருட்டி உள்வாங்கியவள், அப்போதைக்கு வேறு மார்க்கமில்லை என்பதால், அந்த அரசு உத்தரவை வாங்கி கொண்டாலும், அதை பிரித்து கூட பார்க்கவில்லை.
****************************************
அதன் பின் வேலையில் கவனம் தப்பி, தடுமாறியவளிடம் வந்தார் டாக்டர். சீதாராமன். “என்ன மயூரி? போக விருப்பமில்லைன்னு நீ சொன்னதா சிங்காரவேல் சார் குண்டை போடுறார்?”
“ஹாங்… ஆமா சார்… எனக்கு… அங்க போக இஷ்டமில்ல.”
“நீ இப்படி சொல்வேன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை மயூரி. இருந்திருந்து இப்போ தான் ஒரு படிச்சவர், நம்ம துறைக்கு பொறுப்பெடுத்து இருக்கார். நாட்டு பசுக்கள் தொடர்பான ஆராய்ச்சியின் அவசியத்தை அவர் சரியா புரிஞ்சுகிட்டதால தான், சிறு அளவுல இருக்கற, அவரோட தொகுதி பால் வள மைய கோசாலையை தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அவசர கால அடிப்படையில் எல்லா வசதிகளும் கொண்ட ஒரு ஆய்வு கூடமா மாத்த எல்லா ஏற்பாடும் முனைப்பா செஞ்சுருக்கார்.”
“அமைச்சர் அழகன், ‘இந்த மொத்த ப்ராஜெக்டுக்கும் நீங்க தலைமை பொறுப்பெடுத்து வழி நடத்துங்க சார்’ன்னு என்கிட்டே ரொம்ப வேண்டி கேட்டுகிட்டார். ப்ச்… குடும்ப சூழ்நிலைகளால, முடியாதுன்னு நான் மறுக்க வேண்டிய துர்பாக்கிய நிலை என்னோடது. பால் உற்பத்தி பெருக்கறதுக்கான அத்தியாவசியமான ஒரு ப்ராஜக்ட் இது. அதனால தான்… வயசும், உழைக்க விருப்பமும், ஆர்வமும் உள்ள உன்னை என் சார்பா முன்னிறுத்தி விட்டேன். இப்போ நீ போகலைன்னு சொன்னா எப்படி மயூரி?” ஆதங்கத்தோடு கேட்டார் அந்த பெரியவர்.
வெட்டினரி சயின்ஸ் படித்து கால்நடை மருத்துவராகி இருந்தாலும், மயூவுக்கு சாதாரண விலங்கியல் மருத்துவத்தை விட, பால் வளம் தொடர்பான துறையில் தான் ஆர்வம் அதிகம். அவளின் கரியருக்கு கிடைத்த சரியான தீனி இந்த வாய்ப்பு!
ஆனால், ஆத்தூரில்… அதுவும் அழகன் இதில் சம்பந்தபட்டிருக்க, மனதுக்கு சஞ்சலமாக தோன்றவும், “யோசிக்கறேன் சார்… அம்மாட்ட கலந்து பேசணும்.” தன் மீது இத்தனை நம்பிக்கை கொண்டு பொறுப்பை ஏற்றியிருக்கும் பெரியவரை வருந்துவதும் வேதனையளிக்க, ஆரம்ப எதிர்ப்பை குறைத்து இப்படி பதிலளித்தாள்.
“இது பெரிய வாய்ப்பு மயூரி. இப்போதைக்கு அரசியல் நிலவரம் நிலையா இருக்கறதால, இன்னும் நாலு வருஷம் இந்த கட்சி, தொடர்ந்து ஆட்சியில இருக்க அதிக சாத்தியம் இருக்கு. அது மட்டுமில்ல, அவரோட தொகுதிக்கு ரொம்பவுமே பயன்படும் என்றதால, அழகன் சார் பதவியில இருக்காரோ இல்லையோ இந்த ப்ராஜக்டை தனி பொறுப்பெடுத்து துணை நிக்கறதா எனக்கு உத்தரவாதம் கொடுத்து இருக்கார். இப்படி அரசியல் குறுக்கீடு இல்லாம, அரசாங்கமே நமக்கு துணை நின்னு ஒரு ஆய்வுக்கு உறுதுணையா அமையறது அபூர்வம். இது போல இன்னொரு சான்ஸ் நமக்கு தானா அமையறது கஷ்டம். நல்ல முடிவா எடும்மா.”
வெறுமே தலையை அசைத்தவள், மற்ற வேலையில் தன்னை தொலைக்க முயன்று, தோற்றாள்.
************************************************
மாலை வீட்டுக்கு வந்ததும் வராததுமாக மகள் மடி சாயவும், “மையூ… போ… போய் குளிச்சுட்டு வா… உன் மேல கப்படிகுது,” வழமையான கிண்டலில் இறங்கினார் பூரணி.
மகள் பதில் தரவில்லை எனவும், காலையில் தலைவலி என்றாளே, என்று எண்ணியவராக, “என்ன ஆச்சு, உடம்புக்கு முடியலையா? டாக்டரை பார்ப்போமா?”
“வேணாம் பூ…” என்றவள், கையில் கசக்கி பிடித்திருந்த காகிதத்தை அம்மாவிடம் நீட்டினாள்.
“என்ன மயூ?” அதை வாங்கி பிரித்து படித்தவரின் கண்கள், ஆத்தூர் என்ற பேரில்… நிலைத்து நின்றது.
“என்னம்மா, அமைதியாகிட்ட?” தலையை உயர்த்தி அம்மாவை பார்த்தாள்.
காகிதத்தை தாழ்த்தியவர், “ரிட்டையரானதுக்கு பிறகு, அங்க ஆத்தூர்ல தான் செட்டிலாகணும்னு அப்பாவுக்கு அவ்வளோ ஆசை தெரியுமா! உனக்கு சென்னையில் வெட்டினரி காலேஜ்ல அட்மிஷன் கிடைச்சப்ப, நம்மளை மட்டும் இங்க சென்னையில் தங்கிக்கோங்கன்னு தான் சொன்னார். நான் தான் பிடிவாதமா அப்பாவும், சென்னை வந்துடணும்னு சண்டை பிடிச்சேன். அந்த மலையர் இருக்காரே… அவருக்கு கூட அப்பா ஊரு மாறி போறதுல இஷ்டம் இல்ல. அப்பா ட்ரான்ஸ்ஃபர் வாங்க ரொம்ப தடை போட்டார்.”
“ஒரு வழியா மாற்றல் கிடைச்சப்ப கூட, அப்பாவோட முகமே சரியில்ல. ‘ரிடையரானதுக்கு அப்புறம், அங்கேயே ஒரு கொட்டகை போட்டு நாலு ஆடு, கோழி, ரெண்டு மாடு எல்லாம் வெச்சு நீங்களே மேயுங்க, உங்களை யாரு தடுக்க போறா’ன்னு நான் கூட கிண்டலடிச்சேன்.” தன் பாட்டில் மறைந்த கணவர் தொடர்பான சம்பவங்களை பேசினார் பூரணி.
மகள் அமைதியாக இருக்கவும், “என்ன மயூ? உனக்கு போக விருப்பமில்லையா? உங்க அப்பா பொறந்த ஊரு தான்னாலும்… நமக்கும் அந்த ஊருக்கும் எப்பவும் ஒரு இடைவெளி இருந்துட்டே தான் இருக்கு. உனக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கலாம்னு நான் நினைக்கறப்ப இப்படி மாற்றல் வந்துடுச்சே!”
ஏற்கனவே டென்ஷனில் இருந்தவளுக்கு, பூரியின் பேச்சு காதில் ஈயத்தை ஊற்றிய அவஸ்தையை தர, “அம்மாஆஆஆஆஆ… இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்?”
“அது சரி, நீ ஏன் இப்படி கேட்க மாட்டே? மாறன் என்னடான்னா… ‘வயசு பொண்ணை வீட்ல வெச்சுட்டு, நான் கல்யாணம் பண்ண மாட்டேன். முதல்ல உன் கல்யாணத்தை முடிக்கலாம்’னு என் காதை கடிக்கறான். நீ என்னடான்னா இப்படி கேட்கற. உங்க ரெண்டு பேர்கிட்டயும் சிக்க வெச்சுட்டு, என்னை தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டார் உங்கப்பா.”
“ம்மா…”
“பாரு மயூ, ஏற்கனவே அப்பாவோட அங்காளி, பங்காளிங்க உங்க ரெண்டு பேருக்கும் நான் ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சுருக்கேன்னு ஏதானும் விசேஷ வீட்ல பார்க்கறப்ப எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்றாங்க. அவங்க பிடுங்கல் தாள முடியலை.”
“போதாததுக்கு உன்னோட சின்ன தாத்தா வேற, அது இருக்கும் ஒரு எட்டு மாசம் முன்ன, அவருக்கு தெரிஞ்ச வரன் ஒண்ணை உனக்கு பேச பார்த்தார். மாறனுக்கும், எனக்குமே அது சரியா வரும்னு தோணலை. உன்கிட்ட கூட கலந்து பேசாம ‘இஷ்டமில்லை’ன்னு நாங்களே தட்டி கழிச்சுட்டோம். அதுல அவருக்கும் என் மேல கொஞ்சம் வருத்தமாகிடுச்சு. அப்போவே, சீக்கிரம் உன் கல்யாணத்தை முடிக்க சொல்லி என் காதுல ஓட்டை போட்டார் மனுஷன்.”
“இத்தனை மாசமாகியும் உன் விஷயத்துலயும், மாறனுக்கும் ஏத்த பொண்ணை நான் இன்னும் கண்டுபிடிக்கல. இப்போ ஊர் பக்கம் போனா, என் தலையை மொத்த குடும்பமும் தாயக்கட்டை போல உருட்டிடுவாங்க.”
ஊரில் இருக்கும் உறவின கூட்டத்தை கண்டு அஞ்சியவராக, “மாறன்கிட்ட பேசலாம். அப்படியே அப்பாவோட ஃபிரெண்ட் சாம் அங்கிள்கிட்ட சொல்லி, எதுவும் ஆர்டரை கேன்சல் பண்ண முடியுமான்னு பார்க்கலாம். இப்போ நீ ஆத்தூருக்கு போக வேணாம். ஆமா, ஊருக்கு போறது சரி வராது.”
படபடவென கொட்டி தீர்த்த பூரணி, “ஆமா… வேணாம் பூரி, இப்போ போனா உன்னை காரி துப்புவாங்க.” தனக்கே சொல்லி கொள்ள, அவர் பேச்சுக்கு செவி கொடுத்திருந்தவளுக்கு, அன்னையின் முக பாவனையை கண்டதும், ஒரு நொடி அவளின் குழப்பங்கள் மறைய, கலகலவென சிரித்தாள்.
“தட் தட் பர்சன் தட் தட் ப்ராப்ளம்ஸ்…” மயூ விடாமல் சிரிக்க, மகளின் கூற்றின் முழு அர்த்தத்தை யோசிக்காதவர், அவளின் சிரிப்பில் சற்றே மனம் லேசாக,
“அது சரி… நான் என்னமோ உனக்கும், மாறனுக்கும் கல்யாணம் செய்யாம வீட்டுக்குள்ளே வெச்சுருக்கறது போல குறை பேசுறாங்க. ‘பொண்ணு சம்பாதிச்சு கொடுக்கற பணம் வந்து, உன் வீடு நிறையனுமா?’ன்னு என்னை வருத்தெடுக்கறாங்க. இதெல்லாம் உங்களுக்கு எங்க புரியுது,” அலுத்தவராக பூஜை அறைக்குள் நுழைந்தார்.
அம்மாவின் கஷ்டம் புரியத்தான் செய்தது மகளுக்கு. ‘ஹும் எப்படியோ அம்மாவுக்கும் விருப்பமில்லை’ என்ற நிம்மதியில், குளிக்க சென்றாள் மயூரி.
மயூரி ரெஃப்ரெஷ் செய்து வரும் முன்பாக, பலகாரம் செய்து கொண்டே, கணவர் சிவபாதத்தின் நண்பரும், சக கால்நடை மருத்துவருமான சாம்மை தொடர்பு கொண்ட பூரணி, பரஸ்பர நலன் விசாரிப்புக்கு பின், விஷயத்தை விளக்கினார்.
“நம்ம சிவத்தோட ஊர் பக்கமா இருக்கே தங்கச்சி. ஊரோட உறவு நிலைக்கணும்ல?” சாம் எதிர்வாதம் வைக்க…
“இல்லண்ணா, மாறனுக்கு எப்போ எந்த ஊருல வேலைன்னு சொல்ல முடியாத நிலை. மயூவை இங்க டவுன் பக்கமா செட்டில் செஞ்சுட்டா தேவலை. இதுக்கு தான் கவர்ன்மென்ட் ஜாப் வேணாம்னு சொன்னேன். அவளுக்கு இந்த பால்வளம் மேல இருக்கற ஆர்வத்துல, ‘இல்ல நான் ரிசர்ச் பண்ணனும்’னு பிடிவாதமா அரசாங்க உத்தியோகத்துல உக்காந்துட்டா.”
“அவர் வேலை செய்யும் போதும் இதே தானே! எத்தனை இட மாற்றல் பார்த்துட்டேன். சில நேரம் லஞ்சம் கொடுத்து, ட்ரான்ஸ்ஃபர் கேன்சல் செஞ்சு இருக்கோமே, அது போல இப்போவும் செஞ்சுடலாம் ண்ணா.”
“சரிம்மா… நான் சீதாராமன்கிட்டயும், சிங்காரவேலுகிட்டையும் என்ன ஏதுன்னு விசாரிக்கறேன். மாறன் எப்போ ஊருக்கு வரான்?”
“ஆச்சுண்ணா, இன்னும் ஆறு வாரத்துல இங்க இருப்பான்.”
“அப்போ சரி… வரன் பார்க்கற வேலையில தீவிரமா இறங்கு தங்கச்சி. இந்த வருஷம் எல்லாம் சுபமா நடக்கணும்.”
“சரிண்ணா…” பேசியை வைத்த பூரணிக்கு அப்போதே மகனிடம் பேச ஆவல் பிறந்தது.
இரவு உணவு முடிந்த பின், வழக்கமான நேரத்துக்கு முன்பே ஜெர்மனியில் இருக்கும் மணிமாறனுக்கு அழைத்தார். விவரத்தை சொல்லவும், இவரை போலவே ஆத்தூர் செல்ல வேண்டாம் என்று விட்டான் மாறன்.
“நீ லீவ் போடு மயூ… அங்க ஆத்தூர்ல சௌந்தர்னு, அதான் ஸ்கூல் ஹெட்மாஸ்டர் பையன், என்னோட ஸ்கூல்ல படிச்சானே! அவன் கூட மினிஸ்டர் செந்தூர் அழகனுக்கு பி.ஏவோ என்னவோ போஸ்ட்ல இருக்கறதா எப்போவோ எங்க ஸ்கூல் வாட்சப் க்ரூப்ல பார்த்த ஞாபகம்.”
“அந்த சௌந்தர் கூட எனக்கு அவ்வளவா பழக்கம் இல்லன்னாலும், இருந்தாலும் எதுக்கும் ஆர்டர் கேன்சல் பத்தி பேசி பார்க்கறேன்.” இவர்களின் பள்ளி வாட்சப் க்ரூப்பில் சௌந்தர் இருப்பதே மையூவின் உடன்பிறப்பாகப்பட்ட மாறனின் மேல் ஒரு பார்வை வைக்க தான் என்ற முக்கிய விவரம் அறியாதவனாக அந்த அப்பிராணி அண்ணனாகப்பட்டவன், ஒரு வியூகம் வகுத்தான்.
சௌந்தரின் பேரை கேட்டதும், சட்டென தொண்டை வரை வந்த ஐயோவென்ற அலறலை பெரும்பாடுபட்டு அடக்கிய மயூ, அழகனின் நம்பிக்கைக்கு உரிய சௌந்தர் எதையும் யாரிடமும் உளற மாட்டான் என்று நன்கறிவாள். அந்த தைரியத்தில், “சரி மாறா…” என்று விட்டாள்.
அதன் பின் இது ஒரு விஷயமே இல்லை என்பது போல பூரணியும், மாறனும் வழக்கம் போல கேலியும், கிண்டலுமாக உரையாட, அன்றைய நிகழ்வால் தொய்ந்திருந்த மயூரியால் அந்த பேச்சுக்களை தவிர்க்க முடியாது, அவளும் அவ்வப்போது இடையிட்டு பேசினாள்.
படுக்கையில் விழுந்தவளுக்கோ, ‘உண்மையாகவே ஆராய்ச்சியை நடத்த வந்த உத்தரவா? என்னை ஏதோ வகையில் அழகன் நெருக்குகிறானா?’ குழப்பம் அதிகரிக்க, உறக்கம் வராமல் தவித்தாள்.
*******************************************
மயூவின் மறுப்பு முதல், சற்று முன் சௌந்தரை, வாட்சப்பில் மணிமாறன் தொடர்பு கொண்டது வரை எல்லாமே அறிந்தவனாக, மயூவின் புகைப்படத்தை கைபேசியில் பார்த்தவாறு படுத்திருந்தான் அழகன்.
நிறைய சிரமங்களுக்கிடையே முதல் அடி எடுத்து வைத்தாகி விட்டது. ஆம்… இது வரை அவனுக்கென்று அவனின் எம்.எல்.ஏ, மற்றும் அமைச்சர் பதவியை உபயோகித்து எதையும் செய்து கொண்டதில்லை அழகன். முதல் முறை மயூ விஷயத்துக்காக, சில தகிடுதத்தங்கள் செய்யும் நிலை. அதையும் கூட முடிந்த அளவில் நேர்மையாக நடத்திட பார்த்து, வேலை இழுபறியான பின் தான் அவனே இறங்கி, ஆர்டர் அளவுக்கு வந்திருக்கிறான்.
அப்படி ஒவ்வொரு அடியிலும் சிக்கல்களை சந்தித்து கொண்டிருப்பவனுக்கு, மயூரியின் மறுப்பு ஒரு புறம் இருக்கட்டும். அவன் குடும்பத்தாரை நினைக்க கூட பயப்பட்டான் அழகன் என்பதே நிஜம். அவனால் சுலபத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சு ஒன்று உண்டெனில் அது அவன் வீட்டினரின் எண்ணப் போக்கு தான்.
ஆம்…சாதீய வேற்றுமைகளில் ஊறி… சாதி வெறியர்களாக, காலம் காலமாக சாதிய அரசியலில் ஈடுபட்டு, சாதிக்காக கௌரவ கொலை செய்ய கூட அஞ்சாத குடும்பத்தில் பிறந்திருப்பவன்.
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும், கருவில் இருந்து தன் ரத்தத்தில் உருவேற்றியவர்களிடம், ‘நான் வேற்று சாதி பெண்ணை, அதுவும் தங்களுக்கு சமம் இல்லாத ஜாதியை சார்ந்தவளை விரும்புகிறேன். ஒன்பது ஆண்டுகளாக அவளை மனதார காதலிக்கிறேன். அவள் தான் என் உயிர்! அவள் இல்லாமல் எனக்கு ஏதுமில்லை’ என்று எப்படி சொல்லி அவர்களுக்கு புரிய வைக்க, என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தானே எட்ட நின்று மயூவை பார்வையால் வருடி கொண்டிருந்தான்.
இந்த அதி முக்கிய சிக்கலுக்கு விடை தெரியாமல் தானே, இத்தனை ஆண்டுகள் அழகன் திணறுகிறான். இப்போது பந்தை அடித்தாயிற்று! இனி, இந்த ஆட்டத்தை வெற்றியை நோக்கி செலுத்த வேண்டும். அடுத்து எப்படி, எங்கே அடிக்க? யோசனையில் ஆழ்ந்தான் அமைச்சர் செந்தூர் அழகன்.
அழகி ஏ அழகியே ஏ அழகியே………
மேரி மீ மேரி மீ அழகியே……
Super episode. intha azhagiya azhagan eppadi marry panna porano.
Vasu Raj...