மஞ்சக்காட்டு மயிலே
தோகை 6
காதலே ஜெயம்,
காதலே ஜெயம்,
காண்பதே உன் மையம்,
என் மரியாதைக்கு உரியவளே,
மனதிற்கு இனியவளே,
நீதான் என் தேசிய கீதம்,
ரஞ்சனா, ரஞ்சனா,
என் ஒரே பாடலே…
காலை கண் விழிக்கும் போதே காதல் திரை பாடல் காதில் சத்தமாக ஒலிக்க… “அம்ம்மா… இவங்களை…” பரபரவென எழுந்து வந்தாள் மயூரி.
பாடலோடு தானும் பாடிக் கொண்டு, கீரையை ஆய்ந்து கொண்டிருந்த பூரணி, மகளை பார்த்ததும், புன்னகைத்தார்.
டீ.வி.யின் சத்தத்தை குறைத்தவள், “ஏன் ம்மா… ஏன் இப்படி? ஒரு நாள் செல்லாத்தா செல்ல மாரியத்தான்னு பக்தி பரவசமா என்னை எழுப்பறீங்க! இன்னொரு நாள், காதலே ஜெயம்னு… முடியலை.”
“இதை எல்லாம் ரசிக்க ஒரு ஞானம் வேணும் மயூ!”
“ம்மா… இது டூ மச் சொல்லிட்டேன்.”
“நீ கிழவி மாதிரி நடக்கறதால, நான் யூத்தா மாறிட்டேன்.”
‘இவங்களோட இப்படி லோல் படறதுக்கு பேசாம ஆத்தூருக்கே போய் வேலையில சேர்ந்துடலாம் போல’ முணுமுணுத்தவாறு தனதறைக்குள் நுழைந்தாள்.
வேலையில் சேராமல், லீவில் ஒரு வாரமாக வீடே கதி என்று இருக்கிறாள் மயூரி. சாம் அங்கிள் விசாரித்த வரை மயூவிடம் சொல்லப்பட்ட காரணங்களே அடுக்கப்பட, அந்த முயற்சி வீணானது.
சௌந்தர், ‘இதோ பேசுகிறேன்… அதோ பேசுகிறேன்’ என மணிமாறனை இழுத்தடிக்க. அவன் உருப்படியாக எதுவும் செய்ய மாட்டான் என்பதை அறிந்தவளால், அதனை அண்ணனிடம் சொல்ல முடியாத நிலையில் சிக்கி, தவிக்கிறாள்.
இதற்கு நடுவே திருச்சியில் இருந்து ஒரு வரன் வந்தது. மணமகனும் கால்நடை மருத்துவர். இரண்டு நாளாக இந்த வரன் புராணம் ஒரு பக்கம் என மயூவுக்கு சோதனை மேல் சோதனை வரிசை கட்டி, படுத்தி எடுக்கிறது.
**********************************************
ஆத்தூர்…
மில், ஃபேக்டரி என ஒரு சுற்று மேற்பார்வை செய்து முடித்து விட்டு, மதிய உணவுக்கு அமர்ந்த அழகனிடம்,...
“அண்ணியோட உறவுல… தாத்தா முறையாரவர், உங்களை எப்படியும் பார்த்துட்டு தான் போவேன்னு கார்த்தாலேந்து இங்க வெளிய பழியா கிடக்காருண்ணா.”
சௌந்தர் தந்த தகவலில், நல்ல பசியில் இருந்த அழகனுக்கு இப்போது உணவு ருசிக்கவில்லை.
“என்ன சொல்ல? அப்பாயின்ட்மென்ட் இல்லாம முடியாதுன்னு அனுப்பிடட்டா ண்ணா?”
“எத்தனை நாளைக்கு பார்க்காம தவிர்க்க முடியும் சௌந்தர்? கொஞ்சத்துல உள்ள அனுப்பு, பேசிடறேன்.”
அறையின் உள்ளே வந்த நரைத்த தலை மூத்த மனிதரின் தோளில் இருக்க வேண்டிய துண்டு, இடுப்பில் கட்டி இருக்க, வணக்கம் சொல்லி பவ்யமாக கை கட்டி நின்றிருந்தார்.
“உட்காருங்க…”
“இருக்கட்டுங்க சின்னையா…” வளைந்த முதுகாக நின்றவரை காண அழகனுக்கு என்னவோ போலாகி விட்டது.
இது தான் உண்மையான நிதர்சனம். வயதில் மூத்தவர் கூட சாதியின் காரணமாக, அவனுக்கு அதீத மரியாதை தந்தே ஆக வேண்டிய நிலை. அவன் பல மாற்றங்களை சகஜமாக ஏற்று கொண்டு விட்டாலும், ஊரை பொறுத்தவரை சில நடைமுறைகள் பழமை மாறாமல் இன்றும் அப்படியே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
“ம்ம்… சொல்லுங்க, என்ன விஷயம்? ஓடை பிரச்சனை சுமூகமா முடிஞ்சுதே… இன்னும் என்ன?” வேண்டும் என்றே ஊர் விஷயம் போல பேச்சை துவக்கினான் அழகன்.
“அது… இப்போ அங்க எல்லாம் சரியா போகுதுங்க சின்னையா, இது வேற சமாசாரம் ஐயா. என் பெரியப்பா பேத்தி… அதாங்க, மாட்டு வைத்தியர் சிவபாதம்னு நம்மூர்ல கூட, பெரியைய்யா சமயத்துல வேலை பார்த்தாருங்களே…”
“ஆமா…”
“அவரு பொண்ணை, இங்க நம்ம ஆத்தூர்ல வேலைக்கு சேரும் படி ஐயா தான் உத்தரவு போட்டு இருக்கீங்களாம்.”
தயங்கி தன் முகம் பார்த்தவரிடம், “மேல சொல்லுங்க…”
“அது தம்பி, பிள்ளைக்கு கல்யாண வயசு. இப்போ கூட ஒரு வரன் தகைஞ்சு வரும் போல இருக்கு. மாப்பிள்ளைக்கு திருச்சி பக்கம் ஊரும், வேலையும். இந்த நேரத்துல பிள்ளை இங்க வேலைக்கு வரணும்னா… அது சரி வருமான்னு நீங்களே சொல்லுங்க ஐயா. நீங்க பெரிய மனசு வெச்சு கொஞ்சம் தயவு பண்ணி, உத்தரவை ரத்து செஞ்சா கல்யாணத்தை முடிக்க தோதா இருக்குங்கையா.”
இந்த விவரங்கள் ஏதும் அறியாதவன் போல, உடன் இருந்த சௌந்தரை ஏறிட்டான் அழகன். எஜமானனின் குறிப்பறிந்து மயூரி குறித்த இன்ன பிற விவரங்களை உதவியாளன் குறிபேட்டில் இருந்து வாசித்தான்.
“பாருங்க, ஹாங்… கார்கோடன், நம்ம ஊருக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் அமைஞ்சு இருக்கு. நீங்க சொல்ற பிள்ளை, நாட்டு பசுங்களை வெச்சு ஏதோ ஆராய்ச்சி செய்யுதாம். இப்போ இங்க வேலையில சேர்ந்தா தான், நம்ம பக்க ஜனங்களோட எதிர்காலத்துக்கும், வருமானத்துக்கும் பெரிய உபகாரமா இருக்கும். ஊருக்கு நல்லதுன்னு தான் இந்த ஏற்பாடு செஞ்சுருக்கேன்.”
“அதுங்க… ஐயா… புரியுதுங்க… ஆனாலும்…”
நாற்காலியில் இருந்து எழுந்த அழகன், “இது என் ஒருத்தன் முடிவு இல்ல. அரசாங்க உத்தரவு, என்கிட்டே சொல்லிட்டீங்க இல்ல, ஏதாவது செய்ய முடியுதான்னு பார்க்கறேன்.”
அழகனின் உடல்மொழி கொண்டே இனி தான் பேச ஒன்றுமில்லை என்று அந்த பெரியவரும், கும்பிட்டு விட்டு கிளம்பி விட்டார்.
உப்ப்… மூச்சை இழுத்து விட்ட அழகன், “புதுசா ஒரு வில்லன் என்ட்ரி கொடுத்து இருக்கான்! மயூ மறுத்துட்டதா தானே, ரெண்டு நாள் முன்ன நம்மாள் ரிப்போர்ட் கொடுத்தான்.”
“ஆமாங்க ண்ணா…”
மயூவுக்கு வரன் பார்க்கப்படுவது புதிதில்லை என்பதை அழகன் அறிவான். கல்யாணத்தை முன்னிறுத்தி, அவள் வகை ஆளை தூது அனுப்புவதென்றால், மகளின் மறுப்பை பொருட்படுத்தாது அவள் வீட்டினர் இந்த வரனில் தீவிரம் காட்டுகின்றனர் என்று அர்த்தமாகிறது. இனி தான் காலம் கடத்த முடியாது என்பது புரிய, சில நிமிடங்கள் கண் மூடி அமர்ந்தவன், “இன்னைக்கு நைட்டே நாம கிளம்பறோம். டிரைவர் வேணாம்… நீ மட்டும் கூட வா போதும். திருவண்ணாமலைக்கு போறோம்.”
“எப்படிண்ணா? பத்து நாள் இங்க ஊர்ல தான்னு ஏற்கனவே வீட்ல பெரியம்மாட்ட சொல்லி இருக்கீங்களே? அம்மு அக்கா வேற, சட்டசபை கூட இல்லையேன்னு சரியா கேள்வி கேப்பாங்க. என்னன்னு சமாளிப்பீங்க?”
“நீ எதுக்கு இருக்க? ஒரு ஏழு மணிக்கு, எனக்கு போனை போடுற. ஏதாவது அவசர மீட்டிங், உடனே சென்னை போகணும்னு என்னை கிளப்பற.”
“சரிங்கண்ணா… ஆனா செக்யூரிட்டி ஆளுங்க…”
“ஓ… மண்டை மேல இருக்கற கொண்டையை மறந்துட்டேன்!” சில நொடிகள் யோசனைக்கு பின், “நைட் சென்னை ஃபிளைட்க்கு டிக்கெட் போடு சௌந்தர். காலையில நாம மட்டும் அங்கிருந்து கார்ல போறோம். தன்ராஜ்கிட்ட நான் பேசி, செக்யூரிட்டி வேணாம், என் ஆளுங்க கூட வராங்கன்னு சொல்லிடறேன்.”
“ண்ணா, முன்ன போல இல்ல… இப்ப நீங்க அமைச்சர்.”
“மயூ விஷயத்துல தான், நான் அமைச்சருன்னே எனக்கு புரிய வந்திருக்கு. இந்த ரெண்டு மாசமா என் அமைச்சர் பந்தா, ஹோதா எல்லாம் இந்த விஷயத்துக்கு ரொம்ப உதவியா இருக்குல்ல சௌந்தர்.” என்று விட்டு அர்த்த புஷ்டி சிரிப்பை அழகன் உதிர்க்க…
“நடக்கட்டும் அமைச்சரே!” கேலியாக சௌந்தரும் நகைப்பில் இணைந்தான்.
அன்று இரவு அழகனின் திட்டப்படி கிளம்பினார்கள். துறை தொடர்பான தவிர்க்க முடியாத எதிர்பாராத வேலை என ஊர் விஜயத்தை குறுக்கி கொண்டு திடீரென அழகன் சில முறை இப்படி கிளம்பி இருந்ததால், இந்த முறையும் வீட்டு பெண்கள் வழமையான புலம்பல்கள் தவிர்த்து பெரிதாக கேள்விகளே எழுப்பவில்லை.
சென்னைக்கு சென்று சேர்ந்து, மினிஸ்டருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவுக்கு சென்ற பின், “என்ன ப்ளான் ண்ணா? எப்படி அண்ணியை பார்க்க போறீங்க?”
“ம்ம்… லீவ் போட்டதுல இருந்து மயூ, அதிகமா வெளிய வரதில்லைன்னு தெரியும். பார்ப்போம்டா… ஏதானும் வழி கிடைக்கும்.” என்று சமாளித்த அழகன், அதன் பின் வேறு விஷயங்களை குறித்து சௌந்தரிடம் பேசினாலும், மயூவின் மனதை மாற்ற, அவளிடம் என்ன சொல்லி சமாளிக்க, என்ற யோசனை மண்டைக்குள் வண்டாக குடைந்தது .
*******************************************
விடிந்த காலை நல்ல விதமாகவே அமைந்தது செந்தூர் அழகனுக்கு. மயூரி குடியிருக்கும் வளாகத்தின் வெளியே அவள் தரிசனத்துக்காக, உள்ளே இருப்பவர் தெரியாத அளவுக்கு கருப்படிக்கப்பட்ட காரில் காத்திருந்தான். வாகனத்தில் எந்த அரசு முத்திரைகளும் இல்லை. நம்பகமான இரு பாதுகாப்பு ஆட்கள் இன்னொரு வண்டியில், சற்று தொலைவில்… யார் கவனத்தையும் ஈர்க்காமல் இவனை கண்காணிக்கும் விதத்தில் பின் தொடர்ந்தனர்.
மையூவை கண்காணிக்கும் அழகனின் கட்டளைக்குட்பட்ட தனியார் துப்பறியும் நிபுணர், ‘வார கடைசியில் மட்டும் நூலகம் சென்று வருகிறாள். மற்றபடி, வீட்டில் அடைந்து கிடக்கிறாள்.’ என்று தந்திருந்த தகவலை கொண்டு, வெளியே வரும் மயூவை தொடர்ந்து சென்று சந்திக்க திட்டமிட்டிருந்தான்.
மயூவின் ஸ்கூட்டி குடியிருப்பு கேட்டை கடக்கையில் தான், பின்னே அமர்ந்திருந்த பூரணியை கவனித்தான். ‘இவங்க கூட போறாங்களே, எப்படி மயூட்ட தனியா பேச?’ நினைத்தவனாக… ‘சரி… கிடைக்கற கேப்ல பேசிடலாம்’ என இடைவெளி விட்டே ஸ்கூட்டியை அழகன் தொடர, அவனை பாதுகாப்பவர்களும் இடைவெளி விட்டு வால் பிடித்து சென்றனர்.
ஒரு கோயிலின் முன் இருந்த வாகனம் நிறுத்துவதற்கென்று இருந்த விசால இடத்தில் ஸ்கூட்டி நிற்கவும், மெதுவாக பக்கவாட்டில் சற்று தள்ளி நிறுத்தினான்.
“எப்படி பேச போறீங்க அண்ணா? நான் வேணா, இறங்கி போறேன். என்னை பார்த்தா, நிச்சயம் அண்ணி பேசுவாங்க… நீங்க வந்திருக்கறதை சொல்லிட்டு, அப்படியே பெரியவங்களை டைவர்ட் பண்ண முடியுதான்னு பார்க்கறேன்.”
“இல்ல சௌந்தர், இங்க வெச்சு பேச முடியாது. மயூவை தனியா தான் பார்க்கணும்.” மயூரியை அணுகும் மார்கம் பற்றி இவர்கள் இருவரும் இங்கே காருக்குள் அமர்ந்து அலசி கொண்டிருக்க, பூரணியோ கோவிலினுள் நுழையாமல், தங்கள் கார் நோக்கி வருவதை கண்டனர்.
“இவங்க ஏன் இங்க வராங்க?” சௌந்தரின் கேள்விக்கு, அடுத்த நொடி பூரியே விடையும் தந்தார்.
“ம்மா… ப்ச்… என்ன பண்றீங்க? கோவில் வாசல் அந்த பக்கம்… எங்க போறீங்க?” அவசரமாக ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு அம்மாவை தொடர்ந்து வந்த மயூ, அவர் திசை மாறி நடப்பதற்கான காரணத்தை வினவ, பூரணிக்கு பதிலாக, காருக்கு பக்கத்தில் நின்றிருந்த அதுவரை இவர்கள் கவனித்திராத ஒரு பைக்காரன் பதில் தந்தான்.
“ஹாய் ஆன்ட்டி, எப்படி இருக்கீங்க? இவங்க தான் உங்க டாட்டரா?”
“ஆமாம் கேஷவ்… நான் நல்லா இருக்கேன். என்ன, நீ மட்டும் தனியா நிக்கற? சங்கீதா எங்கே?”
“கீத்து இப்போ தான் கிளம்பினா ஆன்ட்டி, நீங்க வருவீங்கன்னு எங்களுக்கு தெரியாது.”
“என்ன கேஷவ், எனி குட் நியூஸ்?”
“அப்படி இருந்தா உங்களுக்கு போன் போட்டிருப்பேனே ஆன்ட்டி…”
இதற்குள், “ம்மா… யார் இவங்க?” மயூவின் பொறுமையற்ற கேள்வியை கண்டுகொள்ளாமல்…
“நான் உங்க வீட்ல வந்து பேசறேன்.” புதியவனோடு வார்த்தையாடலை தொடர்ந்தார் பூரி.
“ஐயோ, இப்போ வேணாம் ஆன்ட்டி…”
“பரவாயில்லை கேஷவ். என்ன திட்டுவாங்க இல்ல கத்துவாங்க! உன் பிள்ளைங்க லவ் பண்ணிட்டு வந்து நின்னா தான் புரியும்னு ஏசுவாங்க. அதெல்லாம் எனக்கு பெரிய விஷயமே இல்ல.”
“சோ ஸ்வீட் நீங்க…!” கேஷவ் சிலாகிக்க…
“அம்…ம்மா… என்ன பண்றீங்க?” அலுப்பும் சலிப்புமாக கேள்வியெழுப்பிய மயூ, அன்னையின் கரம் பற்றி, தன் புறம் திருப்பினாள்.
“சிஸ்டர், இப்படி ஒரு லவ்வபிள் அம்மா அமைய, நீங்க குடுத்து வெச்சவங்க. ஆன்ட்டி, இஸ் சோ அண்டர்ஸ்டாண்டிங் அண்ட் சப்போர்டிவ்.” பூரணிக்கு பரிந்து கொண்டு வந்தவனை ஏதும் சொல்ல இயலாது சங்கடத்தில் நெளிந்தவாறே அம்மாவை தீ பார்வை பார்த்தாள் மயூரி.
மகளின் முறைப்பை கண்டு கொள்ளாத பூரி அம்மாவோ, இல்லாத காலரை தூக்கி விடுவதாக பாவனை செய்தார்.
“எங்க லவ்வுக்கு ஆன்ட்டி தான் ஃபிரெண்ட், ஃபிலாசபர் அண்ட் கைட்.” பெரியவளுக்கு அடுத்து பாராட்டு பத்திரம் வாசித்தான் அந்த கேஷவ்.
“என்னம்மா பண்றீங்க நீங்க?” அதே கேள்வியை இப்போது கடுகடுவென மயூ பல்லை கடித்து மீண்டும் பொறுமை இழந்த த்வனியில் கேட்க.
“ஆன்டியை ஏதும் சொல்லாதீங்க சிஸ்டர். ஷி இஸ் அவர் ஸ்டார். யார் என்னன்னு தெரியாத எங்களுக்கு, நல்லவிதமா எடுத்து சொல்லி, எங்களுக்காக ரெண்டு வீட்ல பேசறேன்னு எவ்ளோ உதவியா இருக்காங்க தெரியுமா சிஸ்டர்?”
மகளின் அதிருப்தி முகபாவனையை பொருட்படுத்தாது, “அடுத்து எப்ப ஊருக்கு வருவே நீ?” கேஷவ்வை கேட்டார் பூரி.
“இன்னைக்கு சென்னை கிளம்பறேன் ஆன்ட்டி. அநேகமா அடுத்த வாரம் கீத்து வருவா… உங்களுக்கு மெசேஜ் போட சொல்றேன். நான் ரெண்டு வாரம் கழிச்சு வரப்ப, உங்களை பார்க்கறேன். வரேன் சிஸ்டர்…”
“ஓகே கேஷவ்,” இன்முகமாக பூரி கையசைக்க, இருவரிடமும் விடைப்பெற்று பைக்காரன் கிளம்பி விட்டான்.
“என்னம்மா இதெல்லாம்? யாரு லவ் செஞ்சா உங்களுக்கு என்ன? யாரு என்னன்னு தெரியாதவங்க வீட்ல போய், கல்யாணம் பேச ரெடியாகிட்டீங்க! எதுக்கு வீணா வம்பை இழுத்து விட்டுக்கறீங்க?” மயூ பொரிய துவங்க,
“அது சரி… தானும் லவ் பண்ண மாட்ட. அப்படி பண்றவங்களையும் ஆதரிக்க மாட்ட. சின்னஞ்சிறுசுங்க… பார்த்தல்ல, கேஷவ் எத்தனை ஃபீல் பண்றான்னு. ஏதோ, என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றேன். என் வயத்துல பிறந்த ரெண்டும் தான், காதல் கிலோ என்ன விலைன்னு கேட்டு என்னை அசிங்கப்படுத்தறீங்க. இங்க ஒரு ஜோடி, வீட்டை எதிர்க்காம லவ்வை சக்ஸஸ் செய்ய போராடிட்டு இருக்காங்க… நான் உதவாம, யாரு பண்ணுவா?”
“உங்களை..” நெற்றியில் தட்டி கொண்ட மயூ, “திருத்தவே முடியாது. என்னமும் செய்ங்க... சாமி கும்பிட்டபுறம், போன் பண்ணுங்க, நான் வந்து வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.”
“யாரு? புக்கை பார்த்த உடனே என்னை மறந்துடுற நீ… நீ வந்து கூட்டிட்டு போக போறியா? ஜோக்கடிக்காத மயூ. பேச்சு துணைக்கு இங்க யாராவது மாட்டுவாங்க, அப்படியே கதையடிச்சுக்கிட்டே, நான் காலாற நடந்து வீட்டுக்கு போயிடுவேன்.”
“வேணாம் தாயே! கதை பேசுறேன்னு, இன்னும் புது வில்லங்கத்தை இழுத்து விடுவீங்க. நீங்க ஆட்டோ பிடிச்சு போங்க.”
“எல்லாம் எனக்கு தெரியும். ஆன்மிகம்… ஆராய்ச்சின்னு இல்லாம, காதல் ரசம் சொட்ட சொட்ட கிக்கா ஒரு லவ் ஸ்டோரி ஏதாவது படி. அப்போவாவது, வைட்டமின் ஆர் உனக்கு வேலை செய்யுதான்னு பார்க்கறேன்.”
“ம்மாஆஆ… கோவில் வாசல்ல வெச்சு என்ன பேச்சு இது?”
“சாமியே லவ் மேரேஜ் தாண்டீ,” கண் சிமிட்டினார் பூரணி.
“ஐயோ ஆண்டவா… அவ்வ்வ்வ்… முடியலையே இவங்க டார்ச்சர். டேய் மாறா… இவங்ககிட்ட என்னை தனியா சிக்க வெச்சுட்டு அங்க வெளிநாட்ல ஜாலியா இருக்கியே… சீக்கிரம், கிளம்பி வாடா தடியா,” சத்தமாக மயூ புலம்ப…
“அட போடி, அவன் என்னவோ, ஜெர்மனில தோளுக்கு ஒரு கேர்ல் ஃபிரெண்டோட ஜல்சாவா சுத்துற மாதிரி சீனை போடுற. சரி சரி, மறக்காம மில்ஸ் அண்ட் பூன்ஸ் எடுத்துட்டு வா, நானாவது படிக்கறேன்.”
“பூ… ரீ… உன் அலம்பலுக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு. வரவர என்னை ரொம்ப டென்ஷன் பண்ணற நீ. யார் வீட்ல யார் லவ் செஞ்சாலும் நமக்கு அதெல்லாம் தேவையில்ல. வம்பு பேசி, சண்டை இழுத்துக்காதீங்க. போங்க… அம்மா, தாயே எனக்கு நல்ல புத்தி கொடுன்னு சாமிட்ட வேண்டிட்டு வாங்க.” அன்னைக்கு அறிவுறுத்திய மயூ, விறுட்டென ஸ்கூட்டி நோக்கி வேக எட்டு போட்டு, பின் அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
லேசாய் இறக்கி விடப்பட்ட ஜன்னலின் வழியாக மொத்த சம்பாஷணையையும் கேட்டு கொண்டிருந்த அழகன், காரை நகர்த்த கூட தோன்றாமல் அதிர்ச்சியில் உறைந்திருந்தான்.
“ண்ணா… என்ன? அண்ணி கிளம்பிட்டாங்க… எடுங்க வண்டியை… சீக்கிரம்…” சௌந்தர் பரபரக்க,
நொடியில் பறந்து விட்ட ஸ்கூட்டி, மறைந்த திசையை பார்த்த அழகனோ, “நான் பேச வேண்டியது மயூட்ட இல்ல அவ அம்மாகிட்ட.”
“ண்ணா… இது என்ன புது ப்ளான்?”
“ஹாங்... அதான் இப்போ கேட்டியே, என்னோட அத்தை செம ஃபாஸ்ட் மாதிரி தெரியறாங்க. இவங்க பேசினதை வெச்சு பார்த்தா, அத்தை தான் சரியா வருவாங்கன்னு தோணுது.”
சில நொடிகள் கண் மூடி அமர்ந்த அழகன், ஒரு முடிவுக்கு வந்தவனாக, “நீ கோவில் உள்ள போ சௌந்தர். சரியா அத்தை வெளிய வர்றப்ப, இன்னார்னு அறிமுகப்படுத்திக்கிட்டு, நம்ம காருக்கு கூட்டிட்டு வா. மத்ததை, நான் பேசிக்கறேன்.”
தைரியமாக உதவுகிறான் தான் சௌந்தர். ஆனால், ‘சில நிமிடங்கள் காதில் விழுந்த இந்த அம்மாளின் பேச்சை கொண்டு பொது இடத்தில் அவரோடு பேசுவதா? அதுவும் இப்போது அழகன் சாதாரண ஆளா?’ யோசனையாக “சரிண்ணா…” என்றவன், இவர்களின் காதலின் வெற்றிக்காக வேண்டி கொண்டான்.
திட்டம் தலைகீழாக மாறி விட, காரில் சற்றே டென்ஷனாக அமர்ந்திருந்த அழகன், கோவில் வாசலிலே ஒரு கண்ணும், சுற்றிலும் ஒரு பார்வையும் வைத்திருந்தான். யாரும் தன்னை அடையாளம் கண்டு விட கூடாதே என்ற அவஸ்தையில் இருந்தவனுக்கு நொடிகள் ஆமை வேகத்தில் நகர, பொறுமையை இழக்க துவங்கினான்.
ஒரு வழியாக பூரணியும், அவரை தொடர்ந்த சௌந்தரும் கண்ணில் பட, நிம்மதி பெருமூச்சை விட்டவனின் கண்கள் வாசலை விட்டு அகலவில்லை.
“மேடம்… ம்மா…” செருப்பை மாட்டி கொண்டிருந்த பூரணி குரல் கேட்டு யாரென திரும்பி பார்க்க…
“நான் சௌந்தர், மணிமாறன் ஃபிரெண்ட்…”
இவர் எங்கே இங்க? என்ற குழப்பத்தை அவரின் கண்களில் பார்த்த சௌந்தர், இரண்டு எட்டு எடுத்து வைத்தவாறே, “கொஞ்சம் உங்ககிட்ட பேசணும்.”
“சரி தம்பி… இல்ல சார்.” தடுமாறிய பூரணியிடம்,
“எனக்கும் மணிமாறன் வயசு தான் ம்மா,” சௌந்தர் சிரித்த முகமாகவே சொன்னாலும்,
“இல்ல… ஊர் ஆளு நீங்க! மரியாதையா சார்னு சொல்றது தான் முறை.” பூரியின் விளக்கத்தை கேட்டவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.
“மயூரி, லைப்ரரிக்கு போயிருக்காளே. இருங்க போன் போட்டு, வர சொல்லறேன்.”
“இல்லம்மா… வேணாம். நீங்க… உங்ககிட்ட தான்… தனியா பேசணும்.”
“என்ன சொல்றீங்க? நீங்க இன்னைக்கு வரதா எங்க மாறன் ஏதும் சொல்லலையே!” புதியவனின் பேச்சு புரியாமல் குழம்பியவர், தன்னையும் அறியாமல் அவனோடு நடந்திருந்தார். பேசிக் கொண்டே அழகனின் வாகனத்தின் அருகே வந்து விட்ட சௌந்தர், முன் பக்க கார் கதவை திறக்க கை நீட்டிட…
“இல்ல சார். மயூரி இல்லாம என்ன பேச? ரொம்ப நேரமாகாது, ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுவா,” மறுத்து கொண்டிருந்தவர், தன் கைப்பையை திறக்க முயன்ற போது தான், மகிழுந்தின் ஜன்னல் பாதி திறக்கப்பட, அங்கே வாகன ஓட்டியின் இருக்கையில் இருந்த அழகனை கண்டவர், திகைத்து பேரதிர்வுக்கு உள்ளானார்.
“வண்டியில ஏறுங்க… பேசுவோம்… சீக்கிரம்…” அழகனுக்கு யாரும் தங்களை பார்த்திடுவார்களோ என்ற பதைபதைப்பில் அவசரப்படுத்தினான்.
ஒரே நொடியில் ‘அமைச்சர் அழகனா? இங்கேயா? தன்னிடமா இப்போது பேசினார்? என்ன நடக்கிறது?’ பல கேள்விகள் அலையென எழ, குழம்பிய பூரி, சௌந்தரை சற்றே திகிலோடு பார்க்க,
“சீக்கிரம்மா… ஜனங்க யாரும் பார்த்தா கூட்டம் சேர்ந்துடும். தயங்காம ஏறுங்க,” சௌந்தர் காட்டிய அவசரத்திலும் அசராமல்…
“இல்ல… லைப்ரரி இங்க பக்கம் தான், நானே ஆட்டோ பிடிச்சு வந்துடறேன்.” பூரணி தன் நிலைப்பாட்டில் இருந்து மாறுவதாக இல்லை.
“ம்மா… அதெல்லாம் வேணாம், மொதல்ல நீங்க வண்டியில ஏறுங்க,” சௌந்தரும் விடாமல் வற்புறுத்த,
“நான்… ஐயாவோட வண்டியில… இல்ல…” பூரணி பிடிவாதமாக மறுக்க,
அவரின் தயக்கத்துக்கான காரணம் அழகனுக்கு மெதுவே புரியவும், “இது ஆத்தூர் இல்லை… இங்க நான் சாதாரண ஆள் தான், ஏறுங்க” என்றான்.
“வேணாம் சார்… பிரச்சனை ஆகிடும். நீங்க போங்க, நான் வந்துடறேன்.”
இருந்த டென்ஷனில் அவனுக்கு கூட்டம் கூடுவது பின்னுக்கு போய் விட்டது. “ஓகே, நீங்க கார்ல ஏறலைன்னா பரவாயில்ல, உங்க கூட ஆட்டோல்ல வரேன் நான்.” அழகனின் அதிரடியில் தூக்கி வாரி போட்டது பூரணிக்கு.
என்ன அழகனோடு கார் பயணமா? இப்படி அவர் பேசுவது ஊரில் தெரிந்தால்? அந்த பயம் எழ, திருத்திருத்தார்.
இதற்குள் சௌந்தரின் கைப்பேசிக்கு செக்யூரிட்டியிடம் இருந்து அழைப்பு வர, “ப்ளீஸ்… புரிஞ்சுக்கோங்க…” என்று அவன் அழுத்தி கூறி, முன் பக்க கதவை திறக்க, மறுபேச்சு பேசாமல், முன்னிருக்கையில் பூரணி ஏற, சௌந்தர் பின்னே தொற்றிக் கொள்ள, ஆடி கார் வேகம் பிடித்தது.
அமைச்சர் அழகன் தனக்கு கார் ஓட்டுகிறாரா? அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியில் பெருகிய வியர்வையை துடைத்தவருக்கு படபடப்பு குறைந்த பாடில்லை. “ஏதும் பிரச்சனையா? மினிஸ்டர் சார் வந்து பேசுற அளவுக்கு இருக்கே…” அழகனை கேட்காமல், சௌந்தர் புறமாக திரும்பி பேசினார் பூரணி.
“அப்படி இல்ல… முக்கிய விஷயம், சாரே விளக்குவார்,” சௌந்தர் மொட்டையாக மழுப்பவும், பதட்டத்தில் இருக்கும் சௌந்தரின் முகபாவம் மனதில் பதியவில்லை பூரிக்கு.
அழகனை தவிப்பாக பார்த்தவர், வண்டி பாதை மாறி செல்வது கண்டு… “இது லைப்ரரிக்கு போற வழி இல்லையே…” பூரி கூறி முடிக்கும் முன்பாக, ஆள் அரவமற்ற அந்த சாலையின் ஒரு மரத்தடியில் கார் நின்றது.
“நான் இளநீ வாங்கிட்டு வரேன் சார்…” தன் பாட்டில் இறங்கி கதவை சாற்றிய சௌந்தரை பார்வையால் தொடர்ந்த பூரணிக்கு, ‘என்னடா நடக்குது?’ கேள்விக்கு விடை தெரியாமல் மண்டை வெடித்திடும் போல இருந்தது.
“என்ன பிரச்சனை சார்? மயூரி வேலையில…”
பூரணி முடிக்கும் முன்பாக, “இல்ல அத்தை… அதெல்லாம் வேலையில உங்க மக செம கெட்டி. எங்க கல்யாண விஷயமா பேச தான் வந்திருக்கேன்.”
அழகனின் அத்தை என்ற உச்சரிப்பில் பூரணிக்கு சர்வாங்கமும் உறைய, தன் காதில் சரியாக விழுந்ததா என்ற சந்தேகம் மேலோங்க,
“சார்… என்ன சார்… ஐயோ ஏதேதோ... என்னமோ சொல்றீங்க?” வார்த்தைகள் தந்தி அடிக்க துவங்கி விட்டது.
“ரிலாக்ஸ் அத்தை. கொஞ்சம் நிதானமா நான் சொல்லறதை பதறாம கேளுங்க.”
“அத்தையா? ஐயோ… இல்ல… நீங்க யாரோ ஆள் மாறி தப்பா பேசறீங்க. அவருக்கு உங்க ஊர் தான் சொந்த ஊரு. உங்களை ஆத்தூர்ல பார்த்திருக்கேன் நான். நாங்க உங்க வகையறா இல்ல.”
“மயூரி, உங்க பொண்ணு தானே?” அழகனின் அழுத்தமான கேள்வியில்,
“ஹாங்… ஆ… ஆமா…”
“அப்போ, எனக்கு நீங்க தான் அத்தை!” அழகனின் திட்டவட்டமான தெள்ள தெளிவான கூற்றை கேட்டதும், மேலும் மிரண்டவர்,
“ஐயோ… கருப்பண்ணசாமி, இவர் என்ன சொல்லறாரு? சார், சார்… நீங்க இப்படி பேசுறதை யாராவது கேட்டா, என்ன ஏதுன்னு கூட விசாரிக்காம, எங்களை இல்ல சார் கொன்னு கூறு போட்டுடுவாங்க.” பூட்டிய கார் என்பதை மறந்தவராக அவசரமாக சுற்றிலும் பயத்தோடு பார்த்த பூரணி,
“ஆத்தாடி… இந்த சௌந்தர் சார் கூட அதே ஊரு தானே! தெய்வமே… அவர் போய் எதுவும் ஊருக்குள்ள உளறினா, கலவரமாகிடுமே…” நெஞ்சில் கை வைத்து தன் போக்கில் புலம்பிய பூரணிக்கு பயத்தில் வியர்வை ஆறாக பெருகியது.
“ஒன்பது வருஷமா வெளிய சொல்லாததை சௌந்தர் இப்போவா சொல்ல போறான் அத்தை?”
“ஹாங்… என்னது? ஒம்போது வருஷமாவா?”
“ஆமா… நானும், மயூவும் ஒம்போது வருஷமா லவ் பண்றோம்.”
“இல்… இல்ல…”
“உண்மையா அத்தை.”
பெற்ற மக்கள் இருவரையும் ‘லவ் செய்ங்க,’ என்று வற்புறுத்தி கொண்டிருந்தவருக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியளிக்க… ‘தன் மகளா?’ நம்ப முடியாதவராக, தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தார் பூரணி.
தன் கூற்றை உள்வாங்கி கொள்ள பெரியவளுக்கு சிறிது அவகாசம் கொடுத்தவன், “அத்தை…” மெதுவே அழைத்தான்.
“இல்ல அமைச்சர் சார்… நீங்க, சொல்றதை நம்ப மாட்டேன். எங்கேயோ குழப்பமாகி இருக்கு. எம்பொண்ணு யாரையும் லவ் எல்லாம் பண்ணலை. அவளுக்கும் சரி… எங்க மாறனுக்குமே காதல்னா பிடிக்காது.”
“ஓகே… உங்க பொண்ணுக்கு காதல் பிடிக்காது. அப்போ, எதுக்கு அந்த திருச்சி வரனை வேணாம்னு சொன்னாளாம்?”
ஹாங்… விழித்தவர், “வரன் விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்?”
“நிச்சயமா உங்க பொண்ணு சொல்லலை. ஆமா, இதுவரை நீங்க பண்ணுற எல்லா கல்யாண ஏற்பாடுகளையும் ஏன் ஆர்வமில்லாம தட்டி கழிச்சுட்டு இருக்கான்னு யோசிச்சு இருக்கீங்களா?”
“அது… அது… அவ இப்போ தானே படிப்பை முடிச்சுருக்கா. ‘அண்ணாவுக்கு முடிச்சப்புறம் நான் செஞ்சுக்கறேன்’னு சொல்றா… வேற ஒண்ணுமில்ல.”
“சரி… நீங்க சொல்றதை ஒத்துக்கறேன். மத்த சம்பந்தங்களை விடுங்க, இப்போ அவ படிப்புக்கு தக்கன, ஒரே துறையில இருக்கற எல்லா வகையிலயும் மறுத்து சொல்லவே முடியாத நல்ல வரன் வந்திருக்கப்ப, வேணாம்னு சொல்றது சரியா?”
இது… இது தானே! இந்த விஷயத்தை கொண்டு தானே, பூரணியுமே கடந்த சில நாட்களாக மகளிடம் மல்லுக்கு நிற்கிறார். “ஒரே தொழில்… உன்னை நன்றாக புரிந்து கொள்வார் இந்த திருச்சி வரன்” என்று தானே, மகளை ஒத்துக் கொள்ள வைக்க வாதிட்டு கொண்டிருக்கிறார் பூரணி.
அதையே அழகன் வாய் மொழியாக கேட்கவும், முதல் முறை அவன் பேச்சில், அவன் கூற்றில் ஏதும் உண்மை இருக்குமோ என்ற சந்தேக வித்து விழ, அருகில் அமர்ந்திருந்தவனை நிமிர்ந்து பார்த்தார் பூரணி.
கைய கட்டி நிக்க சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது
ha haa maamiyarai correct panra marumagan... semma semma
Vasu Raj