//ஒரு சதுர கஜம் எட்டரை விலைக்கு நிலம் வாங்கி வீடு கட்டினாராம் கிஷனின் அப்பா. ரயில்பெட்டித் தொடர் மாதிரி வரிசையாய் அறைகள். எல்லா அறைகளும் முடிந்தபின் போனால் போகிறது என்று ஒட்டவைத்தாற்போல் ஒரு சமையலறை. இரு ஜன்னல்கள். ஒரு ஜன்னலின் கீழ், குழாய் வைத்த தொட்டி, ஒரு பெரிய தட்டுக்கூட வைக்க வகையில்லாமல் குறுகியது. கீழே, செங்கல் தடுப்பு இல்லாத சாக்கடை முற்றம். மேலே குழாயைத் திறந்ததும் கீழே பாதங்கள் குறுகுறுக்கும். பத்து நிமிடங்களில் ஒரு சிறு வெள்ளக்காடு காலடியில். அதில் நின்று நின்று அடிப்பாதம் எல்லாம் வெடிப்புக் கீறல்கள். சமையலறையில் அடி வைத்து, முதல் நாள் சமைத்து, கைக்குத் தங்க வளையல் போட்ட உடனேயே வெடிப்புக்குத் தடவ ஒரு மெழுகுக் களிம்பு தந்து விடுவாள், ஜீஜி என்று எல்லோரும் கூப்பிடும் கிஷனின் அம்மா.//
இவ்வரிகள் எழுத்தாளர் அம்பையின் சிறுகதை தொகுப்பில் ஒன்றான ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற கதையிலிருந்து எடுக்கப்பட்டது.
கதைகள் என்பது வெறும் வரிகளின் அணிவகுப்பு அல்ல. அது உணர்வுகளின் சஞ்சாரம். வலிகளின் வழித்தடம். இந்த சிறுகதையை நீங்கள் படித்திருப்பீர்களேயேனால் உங்களுக்கு நான் சொல்வதன் அர்த்தம் நன்றாகவே விளங்கும்.
ஒரு வேளை நீங்கள் படித்திருக்காவிட்டால் உடனடியாக படித்து பாருங்கள்.
இன்று பெண்களின் நிலை உயர்ந்திருக்கிறது. ஆனால் அதேநேரம் இந்த சமையலறை அவளுக்கான அறை என்ற அடையாளப்படுத்த பட்டிருப்பது இன்றும் மாறவில்லை. மாற்றம் வந்திருக்கிறது. ஆண்கள் சமையலறையில் உதவி புரிய முன்வந்திருக்கிறார்கள். இருப்பினும் பொறுப்பு அவளுடையதுதான்.
சம்பாதிப்பது கணவனின் கடமை என்பது கைமாறிய போதும் கரண்டிகள் இடமாறவில்லை.
ஒரு கவிதை படித்த நினைவு
‘உள்ளே வீசப்படும்
செய்தித்தாளை
அப்பாவிடம் கொடுக்கவும்,
கீரை விற்பவள் வந்தால்
அம்மாவை கூப்பிடவும்
கற்றுகொள்கிறது குழந்தை
யாரும் கற்றுத் தராமலேயே.’
அலுவலகம் விட்டு களைப்போடு எந்த நேரத்தில் வீடு திரும்பினாலும் சமையலறை அவள் வரவிற்காக காத்து கொண்டிருக்கும். அந்த அறையின் மௌனத்தை அவள்தான் வந்து குலைக்க வேண்டுமென்று அது அத்தனை நேரம் மௌன விரதம் பூண்டிருக்கும்.
‘சாகும் வரை இந்த அடுப்படில வெந்து சாகணும்னு என் தலைவிதில எழுதி இருக்கு’ என்று பொறுமிய அம்மாக்களின் குரல்கள் குக்கர் விசில்களின் சத்தத்தினூடே இப்போதும் நம் காதுகளில் ஒலிக்கத்தான் செய்கின்றன.
அவர்களின் எண்ணங்கள் கூட அங்கிருந்து எண்ணெய் சிகிடுகளோடு பிசுபிசுத்து போயின. கோபம் வெறுப்பும் அலுப்பு எல்லாம் ஒரு நிலைக்கு மேல் அவர்களுக்கே சலித்து போய்விட்டன.
இது போன்ற வலிகளை வீட்டாரிடம் சொன்னாலும் அதை காது கொடுத்து கேட்போர் இல்லை. காற்றில் எழுதினாலும் கரைந்து போய்விடும். தண்ணீரில் எழுதினாலும் மறைந்து போய்விடும்.
அதனால்தான் அவள் கதைகளில் எழுதினாள். கவிதைகளில் சாடினாள்.
காலத்திற்கு அவள் குரல் ஒலிக்கும்படி பதிவு செய்தாள்.
கதைகள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அது பேசும் உணர்வுகளின் மொழி ஆழமானது. எழுதுபவரின் எழுதுகோலின் கூர்மையை பொறுத்தது மிகவும் அழுத்தமாக பதிவானது.
எழுத்தாளர் அம்பையின் பெண்ணிய சிந்தனைகளும் அப்படியாக பதிவு செய்யப்பட்டது.
ஆமாம் யார் இந்த அம்பை?
இந்த கேள்விக்கு ஒரு வேளை உங்களுக்கு பதில் தெரியாமல் இருந்தால் இதோ அவரின் சிறு குறிப்பு.
அம்பை (Ambai) என்கிற சி. எஸ். லக்சுமி (C. S. Lakshmi, பிறப்பு:1944) சிறந்த பெண் ஒருவர். பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர்.
பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதாரணமாக தொட்டுச் சென்றவர். உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர்.
பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாக படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.
இவர் ”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.
டாக்டர் சி. எஸ். லட்சுமி (Dr. C. S. Lakshmi) என்ற தன்னுடைய இயற்பெயரில் , தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார்.
விஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்தார்.
காரணங்கள் மட்டுமின்றி படைப்பு, மற்றும் தான் தேர்ந்தெடுத்த சமூகப் பணிகளுக்குக் குழந்தைகளை உள்ளடக்கிய குடும்ப அமைப்பு தடையாக இருக்கும் என்பது அவரது கருத்தாக இருந்தது. வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடிஸில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
, , மற்றும் புலமை பெற்றவர். ‘தங்கராஜ் எங்கே’ என்ற சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். ‘முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.
இது அவருடைய சிறு குறிப்பு மட்டும்தான். அவர் தொட்ட உயரங்களும் அனுபவங்களும் ஒரு தனி புத்தகம் எழுதுமளவிற்கு நீண்ட நெடியது.
மேலும் அம்பை அவர்கள் அவர் காலத்திற்கு முன்பும் பின்பும் எழுதிய பெண்ணிய எழுத்தாளர்களின் பெயர் பட்டியல்களையும் அவர்கள் சிந்தனையின் சிறு துளிகளையும் ‘உடலெனும் வெளி’ என்ற தன் கட்டுரை தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார்.
ஒவ்வொரு பெண்ணும் முக்கியமாக பெண் எழுத்தாளர்களும் படிக்க வேண்டிய கட்டுரை தொகுப்பு அது.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மிக சுலபமாக எழுத்தாளர் என்ற அடையாளத்தை பெற்றுவிட்டார்கள். ஆனால் அக்காலகட்டத்து பெண்களுக்கு அது சுலபம் அல்ல என்பதை அக்கட்டுரை தொகுப்பை முழுவதுமாக படித்தால் நமக்கு புரியும்.
பெண் தன் உணர்வுகளை பேசினால் கூட அது ஒழுக்கமற்ற செயலாக பார்க்கப்பட்ட காலங்கள் அது.
என்னதான் நதிகளை அணைகள் போட்டு தடுத்தாலும் அது ஒரு நாள் கரையை உடைக்கும். அப்படித்தான் தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குடும்ப வன்முறை அடக்குமுறைகளுக்கு எதிராக பெண்களின் எழுத்துக்கள் சீறி கொண்டு பாய்ந்தன. அதன் வீரியம் தாங்காமல் பல ஆண்கள் மிரண்டு போனார்கள். எழுதிய விரல்கள் உடைக்கப்பட்ட போதும் குரல்கள் நசுக்கப்பட்ட போதும் அவர்களின் பெண்ணிய சிந்தனைகளை சிதறடிக்க முடியவில்லை. எழுத்துக்களை நிறுத்த முடியவில்லை.
ஏனெனில் அவை எழுதுகோல் மைகளில் இருந்து சுரக்கவில்லை. அவர்களின் கண்ணீரிலும் இருந்தும் குருதியிலும் இருந்தும் உணர்வுகளின் வழியாக செரிந்தது.
ரிலே ஓட்டத்தில் கை மாறும் குச்சியை போல அடுத்தடுத்த நிலைக்கு ஒவ்வொரு காலகட்ட எழுத்தாளர்களும் அதனை கைமாற்றி எடுத்து கொண்டு வந்தனர்.
உரிமைக்கான பெண்களின் குரல் அவர்களின் கதைகள் கவிதைகள் மூலமாக களம் கண்டன. அந்த வலி நிறைந்த வழி தடத்தில் ஏறி வந்து இன்றைய பெண் எழுத்தாளர்கள் சுதந்திரமாக தங்கள் சிந்தனைகளை பதிவு செய்ய தொடங்கியிருக்கின்றனர்.
தேவர் மகன் படத்தில் வரும் வசனம் நினைவிற்கு வருகிறது.
‘விதை போட்டது நான்… இது பெருமையா… இல்ல ஒவ்வொருத்தரோட கடமை’
ஆம். விதையிட்டது அவர்கள். அதன் விளைவுதான் பெண்களுக்கு மட்டுமல்ல. திருநங்கைகளும் கூட அங்கீகாரம் பெற தொடங்கியிருக்கிறார்கள்.
நூற்றாண்டுகள் முன்பிலிருந்து இன்று வரை கதைகள் புதினங்கள் கவிதை வடிவங்கள் மூலமாக பெண்ணிய சிந்தனையை ஆழமாக விதைத்திருக்கின்றனர். அதன் காரணமாகவே இன்று பெண்களின் வளர்ச்சிகள் ஆலமரமாக வேரூன்றி வளர்ந்து நிற்கின்றன.
அதற்காக பாலின பேதங்கள் ஒழிந்துவிட்டதாக அர்த்தம் அல்ல. அவர்கள் தூவிய விதைகள் முளைத்து வளர்ந்துள்ளன. அவ்வளவுதான்.
அதனை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமை இன்றைய ஒவ்வொரு பெண் எழுத்தாளர்களுக்கும் உண்டு. எழுத்துதான் நம்முடைய ஆயுதம். ஆனால் இன்றைய அந்த எழுத்து என்கிற ஆயுதம் முனை தேய்ந்து அதன் கூர்மையை இழந்துவிட்டதாக தோன்றுகிறது.
சமீப கால குடும்ப நாவல் எழுத்தாளர்கள் இந்த வளர்ச்சியை வேரோடு தகர்க்குமளவுக்காய் ஆணாதிக்க உணர்வை உயர்த்தி பிடிக்கிறார்கள். பலரின் நாவல்கள் அத்தகைய ஆணாதிக்க உணர்வுகளை பிரதிபலிக்கின்றன.
ஆணாதிக்கத்தை கொண்டாடும் மனநிலை ஒரு புறம் என்றால் அவர்களே பெண்ணின் சுதந்திரத்தை போட்டு உடைக்கும் நிலையும் கூட உருவாகியுள்ளது.
நமக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்திற்கு பின்னிருக்கும் வலியை புரிந்து கொள்ளாத அலட்சிய மனபோக்கு நிறைய பெண் எழுத்தாளர்களின் வரிகளில் காண முடிகிறது.
ஆண் என்பவனிடம் ஆதிக்கத்தில் அடங்கி இருக்கிறாள் அல்லது காதலால் அடங்கி இருக்கிறாள். பெண்களின் தனித்துவம் இது போன்ற எழுத்துக்களிலும் கதைகளிலும் மீண்டும் கேள்விகுறியாக்கப்பட்டுள்ளன.
முன்பிருந்த பெண் எழுத்தாளர்ளுக்கு இருந்த தெளிவு இப்போது நம்மிடம் இருக்கிறதா? நாம் அடுத்த நிலையை எட்ட முயல்கிறோமா? நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு நாம் என்ன தந்துவிட்டு செல்ல போகிறோம்?
இது போன்ற கேள்விகளை நாம் நம்மிடமே கேட்டு பதில் தேட வேண்டும்.
மாற்றம் எழுத்திலிருந்து உருவாகிறது. கதைகளிலிருந்து சமுதாயங்களில் பரவுகிறது. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.
அன்றும் சரி இன்றும் சரி. இலக்கியங்கள் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இடமாகவே இருக்கின்றன. ஏன்? ஆண் எழுத்தாளர்கள் தங்கள் ஆளுமையை தக்கவைத்து கொள்கிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு எழுத்து துறையில் பெண்கள் அடுத்த நிலையை எட்டுவதில் தயக்கம் காட்டுகிறார்கள்.
அவர்களுக்குள் இருந்த போராட்ட குணம் மலிந்து வருகிறது.
உச்சம் தொட்டு உயரத்தில் நிற்பதாக எண்ணி கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர்கள் தாங்கள் நின்று கொண்டிருக்கும் பாதையில் பதிவான வலி நிறைந்த வரலாறுகளை படித்தறிந்து கொள்வது அவசியம்.
மகாகவி பாரதியின் இந்த வரிகள் புதுமைப் பெண்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.
இதைச் செய்த, செய்துகொண்டிருக்கிற, இன்னும் செய்யப்போகிற பெண்கள் ஏராளம் ஏராளம்!
அதில் சந்தகமே இல்லை.
ஆனால் 'மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்; மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;' என்று சொல்லியிருக்கிறாரே இந்த மூத்த பொய்மையிலும் மூட கட்டுக்களிலும் இன்றளவும் உழன்று கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் அதிகம்தான்.
அதனால்தான் பெண்கள் பார்க்கும் தொலைக்காட்சி தொடர்களிலும் பெண்கள் வாசிக்கும் கதைகளிலும் அந்த மூட கட்டுகளையும் மூத்த பொய்களையும் பிடித்துத் இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
'கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?' என்ற கேள்வி மாதிரி 'இவர்கள் கேட்கிறார்கள் நாங்கள் கொடுக்கிறோம்! இவர்கள் கொடுக்கிறார்கள் நாங்கள் கேட்கிறோம்!' எனச் சொல்லிக்கொண்டே ஒரு கால் நூற்றாண்டு கழிந்துவிட்டது.
இனிமேலும் இது தொடர்ந்தால், விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை விரும்பி ஏற்கும் வீரப் பெண்கள்தான் நாங்கள்' என்ற நிலை வந்துவிடும் அபாயம் இருக்கிறது.
இந்த பொந்திலிருந்து பெண் சமுதாயம் மெல்ல மெல்ல வெளியேறி வர எத்தனை வீர பெண்மணிகள் எந்த அளவுக்குத் தியாகம் செய்திருக்கிறார்கள் என ஒவ்வொருவரும் சிறு துளியேனும் அறிந்தால் இந்த மடமை கொஞ்சம் மாறலாம்.
அதில் ஒரு துளி இதோ...
'தாசிகளின் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்'
இது 1936ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நாவலின் பெயர்.
'இது ஒரு 'Anti-Hero' கதையா என யாராவது கேட்டுக்கொண்டு வந்தாலும் வரலாம்!
ஒன்றும் சொல்வதற்கில்லை.
உண்மையில் தேவதாசிகளின் பரிதாப வாழ்வையும், அதை படைத்தவரின் சொந்த அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட நாவல் அது.
தமிழகத்தில் 'தேவதாசி' முறையை ஒழித்துக்கட்ட இந்த நாவல் ஒரு பெரும்பங்கு ஆற்றியதென்றால் அதன் ஆழம் எப்படி இருக்கும் என அறிந்துகொள்ள முடியும்.
'புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்தது இந்நாவல்' என்கிறார் தன் வாழ்க்கையில் பட்ட வலிகளை ஒரு வரலாற்று ஆவணமாக வடித்த அந்த சிங்க பெண்மணி!
இவர் சுயமரியாதை இயக்க முன்னோடிகளில் ஒருவர்.
இவர்தான் அனைவராலும் 'மூவலூர் மூதாட்டி' என அன்புடன் அழைக்கப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.
இந்தியப் பண்பாட்டிற்கே களங்கமாக விளங்கிய 'தேவதாசி' முறையை ஒழிக்க முழு மூச்சுடன் போராடியவர் இவர்.
மகாத்மா காந்தி அவர்கள் தேவதாசிகளை 'வழுக்கி விழுந்தவர்கள்' என்று சொல்லி, அவர்கள் வாழ்க்கை மேம்பட காங்கிரஸ்வாதிகள் போராடவேண்டும் என ஊக்குவித்து அதில் அக்கறை செலுத்தவே, அம்மையாருக்குக் காங்கிரஸ் கட்சியின்மேல் ஒரு ஈடுபாடு உண்டானது.
கதர் துணியின் முக்கியத்துவம் உணர்ந்து அதைத் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கப் பெரியாருக்கு இணையாக உழைத்துள்ளார் அவர்.
காக்கிநாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்குக் கொடி பிடித்துச் செல்லக்கூடாது என உத்தரவு போட்டனாராம் வெள்ளைக்காரர்கள்.
எனவே பல கொடிகளை ஒன்றாக இணைத்து அதைப் புடவையாகக் கட்டிக்கொண்டு அந்த மாநாட்டிற்குச் சென்றாராம் ராமாமிர்தம் அம்மையார்.
காங்கிரசிலிருந்து பெரியார் வெளியேறிய பொழுது காங்கிரசின் அதே சனாதன கொள்கையை எதிர்த்து வெளியேறி அவருடைய சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார்.
அதன் பின் இவருடைய அனல் பறக்கும் கட்டுரைகள் 'குடியரசு' இதழில் தொடர்ந்து வெளிவந்தன.
அண்ணாவின் ‘திராவிட நாடு’ ஏட்டில் ‘தமயந்தி’ என்கிற தொடர்கதையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக இஸ்லாம் பற்றிய அவரது எழுத்து முக்கியமானது.
பெண்கள் அடக்குமுறை, உடன்கட்டை ஏறுதல் , கைம்மை நோன்பு, குழந்தை திருமணம் எனப் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக ஓங்கி ஒலித்தது அவரது குரல்.
வறுமை தாளாமல் இவரது தந்தை குடும்பத்தை நிர்க்கதியாக விட்டுவிட்டு எங்கேயோ சென்றுவிட, ஐந்து வயதுக் குழந்தையாக இருந்த இவரை வெறும் பத்து ரூபாய்க்கும் ஒரு பழைய புடவைக்கும் ஒரு தேவதாசியிடம் விற்றுவிட்டார் இவரது தாய் சின்னம்மா.
அதன் பின் ஆடல் பாடல் என பல கலைகளைக் கற்றார் இவர்.
இவருக்குப் பொட்டுக் கட்டும் சமயத்தில் பல இடையூறுகள் வர, பதினேழே வயதான ராமாமிர்தம் அம்மையாரை ஒரு வயதான கிழவருக்குத் திருமணம் செய்யும் ஏற்பாடு நடக்க, அதை எதிர்த்து சபதம் செய்து அவரது சங்கீத ஆசிரியரான சுயம்பு பிள்ளை என்பவரை மணந்தார்.
அவருடைய இல்லற வாழ்க்கையைக் குலைக்கப் பலவாறு முயன்றவர்கள், ஒரு பெண்ணை அவர் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தி அவரை சிக்க வைக்க முயன்றனர்.
அந்த பெண்ணை உயிருடன் அழைத்துவந்து நீதிமன்றத்தில் நிறுத்தி, யார் யார் அந்த பெண்ணை அடைத்துவைத்து கொடுமைப் படுத்தினர் என்பதை நிரூபித்து அவர்களுக்குத் தண்டனையும் வாங்கி கொடுத்தார்.
அதற்கு பிறகுதான் தேவதாசி முறையையே வேரோடு களையவேண்டும் என முழு மூச்சுடன் போராடத் தொடங்கினார் அவர்.
1917இல் மயிலாடுதுறை பகுதியில் தன் போராட்டத்தைத் துவங்கினார்.
தேவதாசி பெண்களைத் தேடிச்சென்று அந்த இழிவான வாழ்க்கையிலிருந்து வெளியேறுமாறு அவர்களை வலியுறுத்தினார்.
தேவதாசிகளை உறுப்பினர்களாகக் கொண்டு 'நாகபாசத்தார் சங்கம்' என்கிற அமைப்பைத் தொடங்கினர்.
அதன் பின் தேவதாசி முறைக்கு எதிராக இரண்டு மாநாடுகளையும் கூட்டினர்.
அதனால் அரசியல் தலைவர்கள், ஜமீன்தார்கள், மைனர்கள், காவல் துறையினர் எனப் பலரிடம் மிகப்பெரிய எதிர்ப்பையும் சம்பாதித்தார்.
வருத்தப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், யாருக்காக இவர் போராடினாரோ அந்த தேவதாசி இன பெண்களே இவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிராக நின்றனர்.
ஒரு இசை வேளாளர் வீட்டில் அமர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த வீட்டுப் பெண்மணி குடிக்கப் பால் கொடுத்தார். ஒரு மிடறு பருகியதும் வாய் எரிந்தது. காரணம் அந்த பாலில் விஷம் கலந்திருந்தது. எவ்வளவு கேட்டும், போலீஸாரிடம் பால் கொடுத்தவரை காட்டிக் கொடுக்கவில்லை ராமாமிர்தம் அம்மையார்.
தேவதாசி முறைக்கு எதிராக இவர் நடத்திய நாடகத்தில் அம்மையார் நடித்துக்கொண்டிருந்த பொழுது மேடையிலேயே இவரது கூந்தலை அறுத்தெறிந்தனர் இவருடைய எதிர்ப்பாளர்கள்.
அதன் பின் கூந்தலை வளர்த்துக்கொள்ளாமல் 'கிராப்' உடனேயே இருந்துவிட்டாராம் அவர்.
தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்காகச் சட்டமன்றத்தில் வாதாடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும் ஆழமான நட்பு இருந்தது.
பல போராட்டங்களுக்குப் பிறகு, 1947ஆம் ஆண்டு ஒருவழியாக தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
தேவதாசி முறை ஒழிக்கப்பட்டாலும் ரகசியமாகப் பல இடங்களில் அந்த முறை தொடர்ந்து நடந்து வந்தது. அங்கெல்லாம் நேரடியாகச் சென்று, விசாரணை நடத்திப் பல பெண்களை விடுவித்தார்.
அண்ணா, சிவாஜி கணேசன், டி.வி.நாராயணசாமி போன்றோர் நடித்த நாடகங்களில் தாயார் பாத்திரத்தில் தொடர்ந்து நடித்து, எழுத்து மூலமும் கலை மூலமும் புரட்சியை செய்தார் அம்மையார்.
அவர் வாழும் போது அறிஞர் அண்ணா தன் கையால் திமுக சார்பில் விருது கொடுத்து அவரை கௌரவித்தார்.
அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் அவரின் பெயரால் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் ஒன்றை அறிவித்தார். அதுவே மூவலூர் ராமாமிர்ந்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவி திட்டமாகும்.
பெண்கள் வீட்டை விட்டே வெளியில் வராத காலகட்டத்திலேயே ஒரு மாபெரும் சமுதாய புரட்சிக்காக உறுதியுடன் போராடிய இந்த பெண்மணியைப் பற்றி அறியும்பொழுது, 'நாமெல்லாம் என்ன செய்து கிழித்துவிட்டோம்?' என்ற எண்ணம் தோன்றுகிறது.
இன்று எல்லா தளைகளையும் உடைத்தெறிந்துவிட்டு சுதந்திர காற்றை ஒரு பெண் சுவாசிக்கிறாள் என்றால் இவரைப் போன்றோரின் தியாகம் அந்த காற்றில் கலந்திருப்பதால்தான் என்பதை மறுக்க இயலாது.
ஆனால் நமக்கு கிடைத்திருக்கும் இந்த சுதந்திரத்தை நாம் முறையாகத்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.
ஆனால் குடும்பத்தில் எதார்த்தமாக நடக்கும் சிறு சிறு பிரச்சினையைக் கண்டே ஓய்ந்து போகும் அளவுக்குப் பெண்கள் வலிமை குன்றிப்போய் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
நம் சமுதாய அவலங்களை யாரேனும் சுட்டிக்காட்டினால் 'எங்களுக்கு கனமான விஷயங்கள் வேண்டாம். மதியைத் தற்காலிகமாக மயங்க வைக்கும் மென் காதல் அல்லது சிற்றின்ப கதைகள் போதும்!
தயவு செய்து யாரும் கருத்துச் சொல்லாதீர்கள்' என்கிற மனோபாவம் அதுவும் பெண்கள் மத்தியில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பது நகைப்பிற்கும் வேதனைக்கும் உரிய விஷயம்.
காரணம் சமுதாயத்தின் அடுத்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு பெண்களிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பெண்ணியம் என்றதும் ஆண் பெண்ணை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தி கொண்டிருக்கிறான் என்றும் இது ஒரு ஆணாதிக்க சமுதாயம் என்றும் நான் கருத்து சொல்ல போவதாக எண்ணி கொள்ள வேண்டாம்.
இங்கே நான் பேச போவது பெண்களின் அடிமை மனநிலை பற்றி!
அதாவது அடிமை மனப்பான்மையை உருவாக்கி வைத்திருக்கும் இலக்கியங்கள் புராணங்கள் பற்றி!
அவற்றை தொடர்ந்து இங்கே உள்ள பெண் எழுத்தாளர்கள் பலரும் தங்கள் எழுத்துக்கள் மூலமாக அத்தகைய அடிமை மனப்பானமையை கண்ணும் கருத்துமாக போற்றி காத்துவரும் மிக மோசமான நிலையை பற்றி!
ஆனால் இது பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்னதாக நான் பார்த்த படித்த அனுபவப்பூர்வமாக உணர்ந்த பெண்ணிய கருத்துகளை இந்த கட்டுரையின் மூலமாக பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
மற்றபடி நான் சொல்லும் கருத்துக்களோடு நீங்கள் கண்டிப்பாக உடன்பட வேண்டுமென்ற அவசியமுமில்லை. இது என் கருத்து மட்டுமே ஒழிய நான் பெரிய அறிவாளி… நான் சொல்வதே சரி என்று பறைசாற்றவுமில்லை.
நற்சமுதாயத்தை உருவாக்கும் நோக்கொடு மட்டுமே விதைபந்து இங்கே தூவப்படுகிறது. யார் மனதையும் புண்படுத்த அல்லது நம்பிகையையும் உடைக்கும் நோக்கத்தில் கிடையாது.
அதேநேரம் ஒரு பொய்யான நம்பிக்கைகள் மீது நம் மனங்களும் சிந்தனைகளும் ஆதாரப்பட்டு இருக்குமேயானால் அது நம்மை மட்டுமல்ல நம் சமூகத்தை சிந்தனையை சந்ததிகளை என்று எல்லாவற்றையும் முடமாக்கிவிட கூடும் என்று சொல்லி கொண்டு
வாருங்கள் விதைப்போம்!
நற்சிந்தனைகளை…
சமீபமாக நடந்த சென்னை புத்தக கண்காட்சிக்கு நான் சென்றிருந்த போது அங்கே ஒரு பதிப்பகத்தில் பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புத்தகத்தை வாங்கினேன்.
அப்போது அந்த பதிப்பகத்திலிருந்த பெண் ஒருவர் என் கையை பற்றி, “எங்க பப்ளிகேஷன்ல இந்த புத்தகத்தை வாங்குகிற முதல் பெண்மணி நீங்கதான்” என்று பாராட்டி கை குலுக்கினார். நான் பதிலேதும் சொல்லாமல் மிதமாக புன்னகைக்க அவர் என்னிடம், “இந்த புத்தகத்தை எல்லா பெண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டும்” என்று சொன்னார்.
ஒரு வகையில் என் கருத்தும் கூட அதுதான்.
கல்வி மறுக்கபட்ட காலத்தில் பெண்கள் அடிமைகளாக இருந்தது கூட பரவாயில்லை. ஆனால் இன்றைய கால்கட்டத்த்திலும் அத்தகைய அடிமை மனபான்மையை விட்டு வெளியே வராமல் இருப்பதை என்னவென்று சொல்வது?!
தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் விளம்பரங்கள் தொடங்கி எழுத்து துறை வரை அத்தகைய அடிமை மனபான்மையின் தாக்கத்தை அழுத்தமாக உணர முடிகிறது.
சீரியல்களில் வரும் நாயகி சமையல்காரியாக இருந்தாலும் சரி. அல்லது ஒரு மாவட்ட ஆட்சியராகவே இருந்தாலும் சரி. தாலி செண்டிமென்ட், மண் சோறு சாப்பிடுவது, தீ மிதிப்பது, மாமியாரின் அடக்கு முறைக்குள் சிக்கி சின்னபின்னமாவது என்று இதெல்லாம் மாறாமல் எல்லா சீரியல்களினும் டெம்ப்ளேட்களாக தொடர்கின்றன!
அதையும் ஒரு கூட்டம் பார்த்து ரசிக்கின்றது.
இதே போலஅடிக்கடி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் கூட அவ்விதமே இருக்கின்றன. ஒரு டிஷ் வாஷர் விளம்பரம். சிறுவன் ஒருவன் தன் அம்மாவுக்கு எந்தவித அங்கீகாரமும் இல்லையென்பது போல, “அம்மாவுக்கு எதுவும் இல்லை” என்கிறது. அதாவது குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களுக்கு எந்தவித சுயமும் அங்கீகாரமும் இல்லையென்று சொல்வது போல. இது சரியான மனநிலைதானா?
அவள் ஏதாவது ஒரு வேலை செய்தால்தான் அவளுக்கு அங்கீகாரம் தரப்படுமா? எந்தவித பிரதிபலனுமின்றி குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களை இப்படியான வார்த்தைகள் அவமானப்படுத்துவது போல் இல்லையா? அவர்களின் உழைப்பிற்கு எந்தவித அர்த்தமும் இல்லையா?
வீட்டிலிருந்தபடி பெண்கள் தங்கள் குழந்தைகளை நல்லபடியாக வளர்ப்பதும் கூட சாதனைதான். Home maker என்பது அவமதிப்பான ஒன்றாக நம் வருங்கால சந்ததிகள் முன்பாக காட்டுவது நம் அம்மா பாட்டி என்று எல்லோரையும் அவமதிக்கும் செயலாகும்.
தந்தைகளை போல தாயுமே அந்த குடும்பத்திற்காக பாடுபட்டு உழைக்கும் போது வீட்டிலிருக்கும் பெண்களை அங்கீகாரமில்லாதவர்களாகவும் அதனை அவமானமாகவும் சித்தரிப்பது மிக பெரிய தவறு. அப்படி பெண்கள் வீட்டிலிருந்து குழந்தைகளை தங்கள் குடும்பத்தை அரவணைத்து அன்பு செலுத்தி நல்வழிப்படுத்தவில்லை என்றால் இந்த சமூகமே முடமாகி போகும் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க தற்சமயம் ஒளிப்பரப்பாகும் விளம்பரங்கள் பெண்களை மிகவும் கவர்ச்சிகரமான ஒரு போகப்பொருளாக காட்டுகின்றன. அதுவும் பெண்கள் அடிமை தளைகளிலிருந்து வெளியே வந்து சுயசார்போடு வளர்ந்துவிட்ட பிறகுதான் இப்படியான அவலங்கள் அதிகமாக அரங்கேறி கொண்டிருக்கின்றன.
சினிமா, சின்னத்திரை, விளம்பரங்கள் போன்றவற்றில் இன்றளவிலும் பெரும்பாலும் ஆண்களின் ஆதிக்கத்திற்குள்ளாகதான் இருக்கிறது. ஆனால் எழுத்து துறை அப்படி இல்லை. தமிழ் நாவல்களில் எண்ணற்ற பெண் எழுத்தாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருக்கின்றனர்.
அதுவும் இணையத்தின் மூலம் புத்தகம் படிக்கும் பழக்கும் பெருமளவில் உலகமெங்கும் பரவ தொடங்கிய பிறகு ஆண்களை விடவும் பெண்களின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வருவது மனதிற்கு சந்தோஷமாக இருந்த போதும் பல பெண் எழுத்தாளர்களின் பெரும்பாலான கதைகள் ஆண்களின் ஆதிக்க நிலையை தூக்கி நிறுத்துவது போலவே காட்சிப்படுத்துவது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்.
அதுவும் சமீபத்தில் படித்த பல நாவல்கள் ஆணாதிக்க மனநிலையை அப்பட்டமாக காட்டுவது போலவே உள்ளது. அதுவும் ஒரு பெண்ணின் வாழ்க்கை லட்சியமே நாயகனின் காதலை அடைவதே என்பது போலவும் அதுவே மிக பெரிய முக்தி நிலை என்றும் தீவிரமாக சொல்லப்பட்டு கொண்டிருக்கிறது.
இதுவே ஒரு பெண்ணின் வாழ்க்கை என காட்டப்படுவதன் மூலமாக அந்த கற்பனைக்குள் கனவுகளை மட்டுமல்ல கண்களையும் தொலைத்து குருடாகி போனவர்கள்தான் அதிகம்!
அழகான கற்பனைகளை ரசிப்பது தவறா என்று கேட்கும் வாசக தோழமைகளுக்கு நாயகன் நாயகியை அடித்து துன்புறுத்துவதும் கடத்தி கொண்டு போய் வைத்து கொள்வதும் மேலும் காட்டாயப்படுத்தி அவள் கழுத்தில் தாலி கட்டுவதும் மேலும் உச்சகட்ட நிலையாக பாலியல் வன்முறை செய்வதும் இறுதியாக அவளை காதலாகி கசிந்துருக வைப்பதும்தான் அழகான ரசனையா? என்று கேட்க தோன்றுகிறது.
இருப்பினும் பெண்களின் மனநிலையிலிருந்து யோசித்தால் இதை ஒரு தவறான விஷயமாக கருத முடியாது. இயல்பாகவே பெண்கள் ஆல்பா ஆண்களை அதாவது ஆதிக்கம் செலுத்தும் ஆண்களை விரும்புவதுதான் வழக்கம். இது காலம் காலமாக இப்படிதான் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.
வேட்டையாடிய காலகட்டத்தில் பெரிய விலங்கை வேட்டையாடுபவன் ஆல்பா ஆண். குறி பார்த்து அம்பு எய்துபவன், மாட்டை அடக்குபவன், இப்படி ஆளுமையான ஆண்கள் காலத்திற்கு ஏற்றார் போல மாறி வந்திருக்கின்றன.
Orgin of species என்ற உயிரனங்களின் பரிமாண வளர்ச்சிகளை விளக்கிய சார்லஸ் டார்வின் இது பற்றியும் அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆதிகாலம் தொட்டு பெண்னினம் எத்தகைய ஆண் தனக்கு துணையாக வேண்டுமென்பதை அவளே முடிவு செய்திருக்கிறாள். ஆளுமையும் செய்திருக்கிறாள். தாய் வழி சமூகமாக ஒரு மூத்த பெண்ணின் வழிநடத்தலில் ஒட்டுமொத்த மனித இனமே இயங்கியிருப்பபதற்கு நிறைய ஆதாரங்கள் இந்த பூமி முழுக்கவும் நிறைந்திருக்கின்றன.
ஏன்? பூமியில் வாழும் மற்ற உயிரினங்களே சான்று. ஆண் சிங்கத்திற்கு பிடரி முடியும் ஆண் மயிலுக்கு தோகையும் ஆண் மாட்டிற்கு கம்பீரமான திமிலும் என்று ஆணினம்தான் தன் திறமையை அழகை கம்பீரத்தை பறைசாற்றி பெண் இனத்தை கவர முயன்றிருக்கிறது.
வேட்டையாடுவதில் தொடங்கி தங்கள் சந்ததிகளை காப்பது வரை பெண்ணினமே முன்னே நின்று அதிகாரம் செலுத்தி கொண்டிந்தது. ஏன் பூச்சி இனமான தேனீக்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் மனித இனம் மட்டும் இப்படி தலை கீழான ஒரு மாற்றத்தை அடைந்ததற்கு பின்னணயில் நாம் வணங்கும் கடவுள்கள், சாஸ்திரம் சம்பிராதயம், புராணங்கள் என்று ஒரு மிக பெரிய சூட்சம சூழ்ச்சிகள் அரங்கேறின.
அடுத்த சந்ததிக்கு தங்கள் மரபணுக்களை கடத்த ஆண்கள் பெண்களை கவர்வதற்கான புதுப்புது யுக்திகளை கண்டறிந்தனர். ஆனால் பெண்ணவள் மிகவும் கறாராக (ஆல்பா) ஆளுமையான ஆண்களை மட்டுமே தேர்ந்தெடுத்தாள்,
அடுத்த சந்ததிக்கு அத்தகைய ஆரோக்கியமான மரபணுக்களை கடத்தினாள். ஆனால் இதன் விளைவு தோல்வியை தழுவிய ஆண்களுக்குள் பொறாமையும் துவேஷமும் அபிரிமிதமாக வளர்ந்தது.
பெண்ணின் சுதந்திரமும் சுயமும் ஆதிக்க மனபான்மையும் நீண்ட நெடிய கால இடைவெளியின் போராட்டத்தில் முற்றிலுமாக பறிக்கப்பட்டது. பெண்கள் இரண்டாம்தர பிரஜையாக ஆணினத்திற்கு அடிமையாக மாற்றப்பட்டார்கள். அவமதிக்கப்பட்டார்கள்.
பெண் தன்னுடைய choser நிலையை துறக்க வேண்டி அவளின் உடல்ரீதியாக உண்டாகும் பாலியல் உணர்வுகளை மறக்கடிக்கும் பொருட்டு பெண்ணுறுப்புகள் தீயால் சுடப்பட்டன. இன்றும் சில ஆதிவாச இனங்கள் அத்தகைய கொடுரங்களை செய்வதாக சான்றுகள் உண்டு.
ஆனால் ஏன் மற்ற உயிரினங்களுக்குள் இத்தைகய புரட்சியும் மாற்றமும் நிகழவில்லை என்பதற்கு மிக முக்கிய காரணம் மனித மூளை.
எல்லா மிருகங்களும் தன்னை வேட்டையாட வரும் மிருகங்களிடமிருந்தும் இயற்கை சூழ்நிலை மாற்றங்களிலிருந்தும் தங்களை தற்காத்து கொள்ள ஏதோவொரு திறமையை பிறப்பிலேயே பெற்றுவிடுகின்றன. வேகமாக ஓடும் கால்கள், கூரிய கொம்புகள், குளிரிலிருந்து காத்து கொள்ள ரோமங்கள், இறக்கைகள்… இப்படியாக
ஆனால் மனிதனுக்கு இப்படி எந்தவிதமான தற்காத்து கொள்ளும் அமைப்புகளும் அவன் உடலில் இல்லை. அங்கேதான் மனிதன் மற்ற உயிரனங்களை விட்டு விலகி நிற்கின்றான்..
பல விதமான ஆபத்துகளிலிருந்து தன் உயிரை காப்பாற்றி கொள்ளும் தேடலில்தான் மனிதன் அறிவார்ந்தவனாக மாறினான். கூரிய கற்களை கொண்டு ஆயுதம் தயாரிப்பது மலை குகைகளை தங்கும் இடங்களாக மாற்றி கொண்டது. ஆற்று படுகைகளை விவசாய நிலமாக மாற்றி உணவு தயாரித்தது என்று மனிதன் பூமியை தனக்கு ஏற்றவாறு மாற்றி கொண்டான்.
அத்தகைய மாற்றங்களுக்கு வித்திட்ட மனித அறிவுதான் மனித இன பெண்களை அடிமையாக்கியது.
விளைவு… பெண் அடிமையானாள்… ஆண் ஆளுமையானான்… பூமி அழிவு நிலையை எய்து கொண்டிருக்கிறது.
பூமியை அழிவதற்கும் பெண் அடிமையானதற்கும் யாதொரு சம்பந்தம் என்ற கேள்வி எல்லோருக்கும் தோன்றும்.
சூரியனை பூமி சுற்ற வேண்டுமென்பது இயற்கையின் விதி. ஒரு வேளை அந்த விதி உடைக்கபட்டால்….
அப்படிதான் இயற்கை சில விதிகளை இய்லபாகவே உருவாக்கி வைத்திருக்கின்றன. அந்த விதியில்தான் உயிரினங்களின் படைப்புகள் பெண்ணினத்தின் ஆளுமையிலிருந்தது. ஆனால் அத்தகைய இயற்கை விதி முறியடிக்கப்பட்டதில் நிறைய விபரீதமான மாற்றங்கள் நிகழ தொடங்கின.
அடிமை மனபான்மைக்குள் கிடந்த பெண்கள் வழியாக உருவாகிய சந்ததிகள் அறிவற்ற சமூதாயத்தை உருவாக்கின. இப்படியாக மனித இனம் மானவரியாக பூமி முழுக்க பல்கி பெருக தொடங்கியதன் விளைவாக மற்ற உயிரனங்கள் அழிவு நிலையை எய்தின. பெரும்பாலும் மனிதன் தன் தேவைக்காக அவற்றை அழிக்க முற்பட்டான். Ecological balance உடைப்பட்டு இயற்கை விதிகள் முறியடிக்கப்பட்டன.
இது எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம் பெண்ணின் அடிமை மனபான்மை. இத்தகைய அடிமை மனப்பானமை எழுத்திலும் விரவியிருக்கின்றன. பெரும்பான்மையான புத்தகங்களில் மனதளவிலும் உடலளிவிலும் பெண்ணை பலவீனமானவளாக காட்டுவதன் மூலம் வெகுகாலமாக அடிமை மனப்பான்மையிலிருந்த பெண்ணினம் இன்னும் அந்த மனநிலையிலிருந்து மீண்டு வரவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
காலம்காலமாக ஆணாதிக்கவாதிகளின் கீழ் வாழ்ந்து பழகிய பெண்கள் அப்படியானவர்களையே தங்கள் நாயகர்களாக ஆல்பா ஆண்களாக பார்த்து பழகிவிட்டார்கள் என்பதே உண்மை.
சிறு வயதில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட யானை தான் வளர்ந்த பின்பும் அந்த பிணைப்பிலிருந்து தன்னை மீட்டு கொள்ளாமல் இருப்பதற்கு பேர்தான் அடிமை மனபான்மை.
அந்த யானை வளர்ந்த பின்னும் மனதளவில் பலவீனப்பட்டு பாகன் சொல் பேச்சை தட்டாமல் கேட்கும் அவனின் சேவகனாகவே தன்னை பாவித்து கொள்கிறது. தன் பலத்தை அது மொத்தமாக மறந்து அடிமையாகவே வாழ்ந்து பழகிவிடுவது போலதான் இன்று பெண்களின் மனநிலையும்!
அந்த மனநிலை மாறினால்தான் மாற்றங்கள் உருவாகும்.
பெண்கள் தங்கள் மனோபலத்தை உணர்ந்து கொள்ளும் வகையில் இனி வரும் இலக்கியங்கள் உருவாக வேண்டும். எழுத்திற்கு மட்டுமே அத்தகைய சக்தி உண்டு.
ஆண்கள் எழுதிய பல புராணங்கள் ஆளுமை நிலையிலிருந்த பெண்ணை ஏவளாகவும் நளாயினியாகவும் திரௌபதியாகவும் சீதையாகவும் சித்தரித்து பெண்களை அடிமை மனப்பான்மைக்குள் தள்ளியிருக்கிறது.
அங்கேதான் கதை என்ற ஆயுதம் எழுத்தின் மூலமாக பல்லாயிரம் சந்ததிகள் கடந்தும் பெண்ணை அடிமையாக வைத்திருக்கும் சூட்சமத்தை கையாள்கிறது.
அத்தகைய ஆயுதம் இன்று நம் கையிலும் இருக்கிறது. அதை வெறும் பொழுதுபோக்கு என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் முடக்கிவிடாமல் மாற்றங்களுக்கான விதையாக அதனை வித்திடுவோமாக!
எழுதுபவர்கள் மட்டுமல்ல. படிப்பவர்களும் இப்படியான ஆணாதிக்க கதைகளை ஆதாரிக்காமல் இருப்பதன் மூலம் இனி வரும் சந்ததிகள் ஆரோக்கியமான சமூதாயமாக உருவாக கூடும்… உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் நம் விதைப் பந்து…
[வண்டே! தத்தி தாது ஊதுதி - தாவிச் சென்று பூந்தாதினை ஊதி உண்ணுகின்றாய்; தாது ஊதித் துத்தி - பூந்தாதினை ஊதி உண்ட பின்னர் மீளவும் தாவி எங்கோ செல்லுகின்றாய்; துத்தி துதைதி - துத்தி என ரீங்கார ஒலி எழுப்பியபடியே மற்றொரு பூவினை நெருங்குகின்றாய்; துதைந்து அத்தாது ஊதுதி - அப் பூவினை அணுகி அதனிடத்துப் பூந்தாதினையும் ஊதி உண்ணுகின்றாய். தித்தித்த தாது எது நினக்கு இனிப்பாயிருந்த பூ எதுவோ? தித்தித்தது எத் தாதோ - இனித்திருந்தது எதன் மகரந்தமோ? தித்தித்த தாது - இதழாக அழகியதும் எப் பூவோ? துதைந்து என்ற சொல் துதைத்து என விகாரமாயிற்று. தாது - பூந்தாது, பூவிதழ், பூ என மூன்றையும் குறிப்பதாம்]
இப்படிப்பட்ட இலக்கிய சுத்தமான பாடலை இலகுவாக புரிந்துக்கொண்டு ரசிக்கச் சிலரால் முடியும்.
பூ பூக்கும் ஓசை...
அதைக் கேட்கத்தான் ஆசை!
புல் விரியும் ஓசை...
அதைக் கேட்கத்தான் ஆசை!
என எளிமையாகச் சொன்னால்தான் பலரால் இரசிக்கவே முடியும்.
மக்களுடைய ரசிப்புத்தன்மை என்பதை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்கிவிட முடியாது.
ஒரு சிலருக்கு இயற்கையை ரசிக்கப் பிடிக்கும்.
ஒரு சிலர் விலங்குகளையும் பறவைகளையும் ரசிப்பார்கள்.
சுவைத்து ரசித்துச் சாப்பிடச் சிலருக்குப் பிடித்தால், ரசித்து ரசித்து விதம் விதமாகச் சமையல் செய்யச் சிலருக்குப் பிடிக்கும்.
ஒருவரது ரசனை அவர்களால் சுலபமாக அணுக முடிந்த விஷயத்தைச் சார்ந்ததாகவே இருக்கும்.
அந்த காலம் தொட்டு பெண்களின் ரசனை சமையல், கோலம் போடுவது, அழகாக ஒரு தோட்டத்தைப் பராமரிப்பது வாய்ப்பு கிடைத்தரவர்களுக்கு சங்கீதம் நடனம் என ஒரு வட்டத்துக்குள் அமைந்ததே துரதிர்ஷ்டம்.
அவர்களது ரசனை அதனைக் கடந்து எழுத்து, இலக்கியம், விஞ்ஞானம் என வளர்வதற்கு ஒரு நூறாண்டு காலம் தேவைப் பட்டது.
ரசனையும் படைப்பாற்றலும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.
தானே ரசிக்காத ஒன்றை ஒருவரால் படைக்க இயலாது.
ஒவ்வொரு படைப்பாளியும் ஒரு ரசிகராகத்தான் இருக்கமுடியும்.
தான் ஆழ்ந்து ரசித்த ஒவ்வொரு விஷயத்தையும் தானே படைக்கவேண்டும் என்ற வேட்கைதான் அவர்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது.
அதை அடுத்தவர் பாராட்டும்பொழுது அந்த படைப்பாற்றல் வேறு நிலைக்குப் போகிறது.
இந்த சமூக வலைத்தளங்கள் தலையெடுப்பதற்கு முன்புவரை, அதாவது ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை பல திறமையாளர்களுக்கு அங்கீகாரம் என்பது ஒரு எட்டாக்கனியாகவே இருந்தது.
ஆனால் இன்றோ சாமானியர்கள் கூட தங்கள் திறமைகளை ஒரு பெரிய சமூகத்தின் முன் நிறுத்த அவர்களுக்கு வாய்ப்பிருக்கிறது.
உண்மையாகவே திறமை இருப்பவர்கள் பலரால் ரசிக்கப்படுகிறார்கள், புகழப்படுகிறார்கள்.
சிலர் நேர்மறையாகச் சென்றால், சிலர் எதிர்மறையாகச் சென்று இங்கே தங்களை நிலைநிறுத்த முயல்வதும் நடக்கிறது.
காரணம், பல ஆண்டு காலமாக அடக்குமுறைகளுக்குள்ளேயே வாழ்ந்து புழுங்கித் தவித்த பெண் சமுதாயம், கடந்த நூற்றாண்டில்தான் தன் கூட்டை விட்டு வெளியே வந்து சுதந்திர காற்றைச் சுவாசித்தது.
என்னதான் படித்து வேலைக்குச் சென்று பொருள் ஈட்டினாலும், கணவர், மாமியார் நாத்தனார் உட்பூசல்களுடன் கூடிய வீட்டுக்கடமைகள் மற்றும் அலுவலக/ தொழில் சார் கடமைகள் என இரண்டு படகுகளில் சவாரி செய்ய வேண்டிய சூழ்நிலை இருபாலரில் பெண்களுக்கு மட்டுமே இருந்தது. (இன்றும் இருக்கிறது)
இதற்கிடையில் மகப்பேறு, பிள்ளை வளர்ப்பு, பிள்ளைகளின் கல்வி எனப் பெண்கள் அனைத்தையும் ஒரு கை பார்க்கத்தான் செய்தார்கள்.
ஆனாலும் அன்னையும் பாட்டியும் பட்ட இன்னல்களையும் அடக்குமுறைகளையும் பார்த்தும் கேட்டும் வளர்ந்ததால் தற்பொழுது காட்டாற்று வெள்ளமென அனுபவிக்கும் சுதந்திரம் இத்தலைமுறை பெண்கள் சிலரைப் புகழ் எனும் போதைக்கு அடிமையாக்கி எதிர்மையான பாதைக்கு இட்டுச்செல்கிறது எனலாம்.
அதன் வெளிப்பாடுதான் இந்த 'டிக் டாக்' செயலி போன்ற சமூக ஊடகங்கள் மூலம் அவர்கள் தம்மை வரம்பு மீறிக் காட்டிக்கொள்ளக்கூடக் காரணம்.
எழுத்துலகிலும் கூட இதுதான் நடக்கிறது.
ஒரு சிலர் எதிர்மறையாகத் தகாத விஷயங்களை இணைத்து எழுதுவதால், பொதுப்படையாக எல்லா பெண் எழுத்தாளினிகளுமே, (எழுத்தாளர் என்பதே ஆண் பெண் இருவருக்கும் பொதுவான வார்த்தைதான். எழுத்தாளிணி என்ற வார்த்தை தமிழில் இல்லவே இல்லை. ஆனால் இப்படி சொல்வதால் தவறொன்றும் இல்லை என நினைக்கிறேன்.) இகழ்ச்சிக்கு உள்ளாகிறார்கள் என்பது கசப்பான உண்மை.
இயற்கையே ஒரு பெண்ணை படைப்பாளியாகத்தான் படைத்திருக்கிறது.
ஒரு உயிரை இந்த உலகத்திற்குக் கொண்டு வருவதில் ஒரு பெண்ணின் பங்கு அளப்பரியது.
பெண் நினைத்தால் மட்டுமே உயிர்கள் உலகில் நிலைத்திருக்கும்.
ஒரு கற்பனைக்கு, உலகில் உள்ள பெண்கள் அனைவரும் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் எனச் சொல்கிறார்கள் என்று வையுங்கள், ஒரு சில வருடங்களில் இங்கே மனித இனம் என்ற ஒன்றே இல்லாமலே போய்விடும்.
அதை யாருமே உணரவில்லை.
பெண்கள் முன்னேற்றம் அடைந்துவிட்டாரகள்.
பெண்கள் எல்லா துறைகளிலும் கால் ஊன்றி இருக்கிறார்கள் என நாம் பெருமைப் பட்டுக்கொண்டாலும் இன்னும் கூட ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆண்களின் அடி மனதில் பெண்ணை அடிமைப் படுத்தும் எண்ணம் என்பது முற்றிலுமாக ஒழியவில்லை.
இன்றைய அவளின் வாழ்க்கை முறை ஆண்களால் வரையறுக்கப்பட்டதுதான்.
நம் சமூகத்தைப் பொறுத்தமட்டில் இன்றளவும் ஒரு பெண் அதிகாலை கண் விழிக்கும் முன்னமே அவளது அன்றாட பணிகள் கண் விழித்து விடும்.
காலை சிற்றுண்டிக்கு என்ன செய்வது என்பதுதான் அவளது ஆகச்சிறந்த முதல் கவலையாக இருக்கும்.
'என்ன இன்னைக்கு ஒரே ஒரு சைட் டிஷ் தானா?'
'தினமும் இதே இட்லி; இதே தோசை! வேற வெரைட்டி செய்யக்கூடாதா?' என்ற கேள்விகள் மற்ற அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிடும்.
'நேத்து என்ன டிபன் செஞ்சோம்; முந்தாநாள் என்ன குழம்பு வெச்சோம்' இதையல்லாம் சிந்தித்து பார்த்து அன்றைய உணவு வகைகளைத் திட்டமிட வேண்டும்.
வருவாய் ஈட்ட வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தாலும் சரி வீட்டில் இருந்து குடும்பத்தை கவனிக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி எல்லோருமே இந்த கவலைகளைப் பட்டே தீரவேண்டும்.
பூரண அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் குடும்பத்தை கவனித்தாகவேண்டிய பொறுப்பு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகம்.
காரணம் இயற்கையே அவள் மேல் சுமத்தியுள்ள கருணை, தாய்மை போன்ற அடிப்படை பண்புகள்.
இந்த நிலையில் ஒரு ஆணை காட்டிலும் பெண் ஒரு துறையில் முன்னேறிச் செல்கிறாள் என்றாள் அவள் ஒரு ஆணை காட்டிலும் வலிமையாக இருக்கிறாள் என்று பொருள்.
அதுவும் பெண் ஒரு எழுத்தாளராகச் சிறு அங்கீகாரம் பெறுகிறாள் என்றால் அது இமாலய சாதனையே.
ஆண் இலக்கியவாதிகள் போல நம் பெண் எழுத்தாளர்கள் ஒன்றும் இந்த திறமையை வருவாய் ஈட்ட என்று பயன்படுத்துவதில்லை.
சமையல் அறையிலேயே நாம் ஆயுள் முழுதும் முடங்கிவிடுவோமோ என்ற கேள்வி, அவளை அடுத்தடுத்து எழுதத் தூண்டுகிறது.
பெண்களைப் பொருத்தமட்டும் இந்த எழுத்தார்வம் என்பது ஒரு வேட்கை.
வெறும் பொழுதுபோக்கல்ல.
இத்தனை இன்னல்களுக்கு நடுவில் நல்ல விஷயங்களை மட்டுமே நம் வாசகர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்கிற கொள்கை கோட்பாடுகளுடன் எழுதும் எழுத்தாளினிகளுக்கு தகுந்த அங்கீகாரத்தை வாசகர்களால் மட்டுமே கொடுக்கமுடியும்.
மேலும் இணையம் மூலம் நாம் வாசிப்பதையும், நாம் விமர்சிப்பதையும், நாம் இடும் ஒவ்வொரு 'comment மற்றும் likes' அனைத்தையும் பல கண்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன.
நாம் தவறாக எழுதினாலும் சரி தவறான எழுத்துக்குத் துணை போனாலும் சரி கட்டாயம் இகழ்ச்சிக்கு உள்ளாவோம் என்பதே உண்மை.
எனவே தேர்ந்தெடுத்து தரமாக எழுதுவோம்! தரமான எழுத்துக்களைத் தேடிப் படிப்போம்!
****
சிறகுகள் தேவை...
சுதந்திரமாய் சுற்றித் திரிய அல்ல...
குடும்பத்தலைவி என்ற கூட்டுக்குள்ளே இருந்தாலும்கூட...
என்னாலும் விண்ணைத் தொட முடியும் என்ற தன்னம்பிக்கைக் காக-
எனக்கு மென் சிறகுகள் தேவை...
கரண்டிகள் என் கைத்தடியாக மாறிப்போகாமல் இருக்க...
எனக்குச் சிறகுகள் தேவை...
துடைப்பதோடு துடைப்பமாய்…
என் ஆற்றலும் மூலையில் முட்டிக்கொண்டு நிற்காமல் இருக்க...
சிறகுகள் தேவை...
கழிவிரக்கம் என்னைக் கடித்துத் தின்னாமல் இருக்க...
சிறகுகள் தேவை...
தொலைக்காட்சி பெட்டிக்குள் நான் தொலைந்துபோகாமல் இருக்க...
இந்த தலைப்பு அவ்வை பாட்டியின் ‘அறம் செய்ய விரும்பு’ல இருந்து எடுத்ததில்லை. ஜெயமோகனின் அறம் என்ற சிறுகதையிலிருந்து சுட்டது.
சமீபமாகத்தான் அந்த புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. இருப்பினும் முன்பே பலரால் அந்த புத்தகத்தின் சிறப்பை கேட்டறிந்திருக்கிறேன்.
‘என்ன பா இன்னும் நீ அறம் படிக்கலையா?’ இப்படியான கேள்விகளை எதிர்கொள்ளும் போது, ‘அப்படி என்னடா அப்பேர்ப்பட்ட புத்தகம்னு’ ஆச்சரியப்பட வைத்தது அந்த அறம்!
ஆனால் முதன்முதலில் நான் அறம் பற்றி கேள்விப்பட்டது சஷி அக்காவின் வாயிலாகத்தான். இரண்டு வருடம் முன்பு அந்த அறம் சிறுகதையிலிருந்த ஒரு வசனத்தை என்னிடம் சொன்னார். வசனம் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு எழுத்தாளனுக்குள்ளும் கர்வம் புகட்டும் உயிரோட்டமான உணர்வுகள் அவை.
அப்போது முடிவு செய்தேன். இதை நாம் படித்தே ஆக வேண்டும்.
அப்படியென்ன வசனம் அது?
அதுதான் விதைபந்துடைய இன்றைய பதிவின் final touch…
வாருங்கள்… தொடர்ந்து பயணிப்போம்.
அறம் பற்றி சொல்வதற்கு முன்னதாக முந்தைய பகுதியின் விட்டகுறை தொட்ட குறை ஒன்று இருக்கிறதே.
எனக்குள் இருந்த விதை விருட்சமாக மாற முக்கிய பங்காற்றிய அந்த புத்தகம்
FIRST BOOK
அப்படியென்ன இந்த புத்தகத்திலிருந்தது???
இந்த கேள்விக்கான பதில்
அனுபவங்கள்… நூற்றுக்கணக்கான எழுத்தளார்களின் அனுபவங்கள்.
ஒவ்வொரு வார்த்தைகளின் எனக்குள் உறைந்திருந்த எழுத்தாளனை தட்டி எழுப்பியது.
அவற்றிலிருந்து சில வரிகள் உங்களுக்காக
//Practical tips from Best-Selling authors on writing your First Book//
Research well before you write
“Research. Do it! Don’t Assume you know something because there will always be an expert out there to shoot you down if you get it wrong. Always Go back to original sources if you can” - Charolette Betts(Fashion designer authored four books)
“Don’t just plan to write- write. It is only by writing. Not dreaming about it, That we develop your own style” – P.D. James(English crime writer)
“Don’t worry too much about having the perfect idea or the perfect time. There’s no such thing. Start getting things down and tweak them”-Sarah Franklin author
“Start blog and a twitter account- they are a great way to keep writing and a fantastic way to connect and keep in touch with other writers and help you feel less “alone” through the writing process”-Hazel Gaynor Ireland author
“find your best time of the day for writing and write. Don’t let anything else interfere. Afterward it won’t matter to you that the kitchen is a mess”-Esther Freud
“Writing is like a muscle-the more you use it, the more limber you become”-Martina Devlin Bestselling author
“Write all the time. Quantity produces Quality. If you only write few things, you’re doomed”-Ray Bradbury American writer
“Be proud of your achievements. Many people talk about writing books but few reach THE END” – Mary Malone author
“The best book writing tip is to write like you speak!”-Jenna McCarthy author
“For a thriller the most important thing is pace. You need to draw your reader in fast- preferably on the first page- keep them turning to the end. Make sure chapter finishes in a way that compels them to read another page, even if its already two in the morning! That doesn’t mean a cliff-hanger. Sometimes Something subtle but ominous works just as well”- Guysavuille author
“Start telling the stories that only you can tell, because there’ll always be a better writers than you and there’ll always be smarter writers than you. There will always be people who are much better at doing this or doing that- but you are the only YOU” – Neil Gaiman English author
//The purpose of your book is to convey your thoughts or to narrate a story. Not to impress your readers with your knowledge of English vocabulary// (இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்)
“where you have a choice, use the short word instead of the long one. Keep your paragraphs relatively short”-V.S. Naipaul Indian writer
“Be honest with yourself. If you are no good, accept it. If the work you are doing is no good accept it”-Jeanette Winterson written 22 more books won whitebread prize for her first novel
“Write with passion. Fill your paper with the breathings of your heart” -William Wordsworth
இவையெல்லாம் அந்த பெருவெள்ளத்தின் சிறு துளிகள். என்னை மாற்றிய சிறுதுளிகள்… என் விதைகளில் விழுந்த சிறுதுளிகள்.
உனக்கு இதெல்லாம் முன்னமே தெரியாதா? இவையெல்லாம் ஒன்றும் புதிதாக இல்லை என்று கூட சொல்ல தோன்றும்.
முன்னமே தெரிந்த விஷயங்கள் கூட அதை யாராவது சொல்லும் போதுதான் அது தனி மதிப்பு பெறுகிறது. நம் மூளைக்குள் உறைக்கிறது.
‘சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை’ அல்லவா?
அதுவும் அந்த துறையில் சாதிப்பவர்கள் சொல்லும் போது அதன் மதிப்பே தனிதான்.
இன்று புதிதாக நிறைய எழுத்தாளர்கள் உருவாகிய போதும் அதில் வெகுசிலருக்கு மட்டுமே PASSION. பலருக்கும் அது TIME PASS. அவர்களின் எழுத்துக்களை வைத்தே நாம் அவற்றை பிரித்தறிய முடியும்.
கனவு என்பது பெரியதோ சிறியதோ? அது நம்முடைய கனவு. அதன் மீது நமக்கு ஒரு பிடித்தம் வேண்டும். கர்வம் வேண்டும். காதல் வேண்டும். இது எழுத்தளர்களுக்கு மட்டுமல்ல. பலதரப்பட்ட கனவுகளை கொண்ட ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.
கனவுகள் இருப்பவனுக்குதான் தேடல்கள் இருக்கும். அந்த தேடலின் மூலமாக நாம் நிறைய பெறுவோம். எதை எடுத்து கொள்ள வேண்டும். தூக்கியெறிய வேண்டுமென்பதெல்லாம் நம்முடைய சாய்ஸ்.
அப்படியான என் தேடலில் கிடைத்ததுதான் இந்த FIRST BOOK. அப்படி உங்கள் கனவுகள் மெய்ப்பிக்கும் புத்தகங்களும் கூட எங்காவது இங்குதான் ஒளிந்து கொண்டிருக்கும். விடாமல் தொடர்ந்து தேடுங்கள். படியுங்கள்!
இறுதியாக இந்த கனவு, தேடல், காதல் எல்லாம் கடந்து நம் சொல்லிலும் செயலிலும் ஓர் அறம் வேண்டும்.
அறம் என்பது வெறும் மூன்று வார்த்தை. சிறிய சொல். ஆனால் அதன் ஆழத்தையும் அகலத்தையும் ஆராய்ந்தால் இந்த பூமிபந்தே சிறியதாகி போகும்.
ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவர்கள் எழுத்தின் மீது நிச்சயம் காதல் இருக்கும். பெரும்பாலும் அவர்கள் எழுதுவதும் காதல்தான். ஆனால் நான் அதை குறிப்பிடவில்லை.
மற்ற வேலைகள் போல் எழுத்தில் வெற்றி என்பது பணம் அல்ல. கேட்டாலும் அது கிட்டாது. ஒரு வேளை எழுத்தை காதலாக அல்லாது காமச்செயலாக செய்பவனுக்கு வேண்டுமானால் அது கிட்டுமோ என்னவோ?
இங்கிருக்கும் ஒவ்வொரு எழுத்தாளனும் தன் எழுத்துக்களுக்கான அங்கீகாரத்தை தேடித்தான் ஓடி கொண்டிருக்கிறான். அந்த நீண்ட ஓட்டத்தில் சிலர் துவண்டு பாதியிலேயே நின்று போகிறார்கள். எல்லாமே அவரவர்களின் மனஉறுதியை பொருத்ததுதான்.
ஆனால் உண்மையிலேயே தன் எழுத்தின் மீது காதலும் கர்வமும் கொண்டவன் அப்படி துவண்டு போக மாட்டான். அதனை உணர்த்தும் வரிகள்தான் அறம் சிறுகதையில் இடம்பெற்றது.
காசும் பணமும் வரும் போகும். ஆனால் எழுத்து ஞானம் அத்தனை சுலபமாக கிட்டிவிடுவதில்லை. சரஸ்வதி நம்மை பார்க்க ஏழு ஜென்மம் வேண்டுமாம். அப்படியான எழுத்து ஞானம் கொண்ட நாம் கர்வப்பட்டு கொள்ள கூடாதா?
ஆனாலும்… படித்தவர்கள் எல்லாம் பண்பாளர்கள் என்று ஆகிவிட முடியாது. அது போல…
எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என்று ஆகிவிட முடியாது.
எவன் ஒருவன் அந்த எழுத்தை அறத்தோடு செய்கிறானோ அவனே எழுத்தாளனாகிறான்.
அந்த அறத்தை பின்பற்றாத எழுத்தும் எழுத்துக்களும் மோசமான பின்விளைவுகளை உண்டாக்கவல்லது.
அதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமெனில் ரவிவர்மனின் ஓவியம்!
தாசிகளை வைத்து அவர் பெண்தெய்வங்களை வரைந்ததாகவும் அந்த ஓவியங்களைதாம் நாம் பக்தியோடு பூஜையறையில் வைத்து வணங்குகிறோம் என்று சொல்லப்படுகிறது.
இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருப்பினும் அதில் வியந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு.
ஒரு சிறிந்த கலைஞன் நினைத்தால் தாசியை கூட தெய்வமாக மாற்றி வழிப்பட வைக்க முடியும்.
அதே போல தெய்வத்தையும் தாசிகளாக மாற்றிவிட முடியும்.
ஆனானப்பட்ட சரஸ்வதியும் இதில் அடக்கம்தான். நான் சொல்வது சரியாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
எழுத்து, சிந்தனை, செயல் இந்த மூன்று வார்த்தைகளும் ‘அறம்’ என்ற மூன்று எழுத்துக்குள் அடங்கிவிட்டால் எல்லாம் நலமே!
இந்த தடவையும் ஒரு கதை சொல்வோமா?. ஆனால் ரொம்பவும் சுவாரிசயமான சாதனை கதை என்றெல்லாம் சொல்ல முடியாது. அது ஒரு மாற்றத்திற்கான (வி)கதை.
ஒரு புத்தகம் எப்படி ஒரு மாற்றத்தை விளைவிக்கும் என்பதற்கான கதை. அதேநேரம் சீரியஸான கதையெல்லாம் இல்லை. சுமாரான கொஞ்சம் ஜாலியான கதை. அவ்வளவுதான்.
என்ன இத்தனை கதை சொல்றா? ஆனா கதையை மட்டும் சொல்ல மாற்றாளே!
உங்க மைன்ட் வாய்ஸ் நான் கேட்ச் பண்ணிட்டேன். ம்ம்ம் கதையை சொல்வோம்.
ஆனால் கதையை தொடங்கவதற்கு முன்பாக…
சமீபாமாக எனக்கு ஏற்பட்ட ஒரு ஆச்சரிய அனுபவம் பற்றி சொல்கிறேன். எனக்கு மிக நெருக்கமான தோழி என்று சொல்வதைவிட மரியாதைக்குரிய ஒரு எழுத்தாளினி தோழியிடம் பேசியில் உரையாடி கொண்டிருந்த போது,
“நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க… உங்க கதைகளெல்லாம் புத்தகமாக வரணும்” என்று நான் சொல்ல, “இல்ல மோனி… எனக்கு புத்தகமாக பிரிண்ட் செய்வதில் பெரிசாக உடன்பாடில்லை” என்பது போல சொன்னார்கள்.
அதற்கு அவர் சொன்ன காரணம்தான் மிக வியப்பு! மரங்களை நம் சுயநலத்திற்காக வெட்டுவதையும் வெட்டபடுவதையும் அவர் விரும்பவில்லை. சில நொடிகள் ஆச்சரியத்தில் என்ன பேசுவது என்றே எனக்கு புரியவில்லை.
அந்த உரையாடல்கள் முடிந்த பிறகும் நான் அவர் சொன்னது பற்றியே யோசித்து கொண்டிருந்தேன்.
மரங்களை காப்போம்! இயற்கையை காப்போம்!
அப்படின்னு இத்தனை நாளாக மரத்தை வெட்டிதான் சொல்லிட்டு இருந்தோமா? இப்படி ஒரு கோணத்தில் நான் ஏன் யோசிக்கவே இல்லை என்று தோன்றியது.
இருப்பினும் புத்தகங்கள் என்றுமே இயற்கைக்கும் மனிதனுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. அது ஒரு ஆக்கசக்தி. பெரிய பெரிய தலைவர்களை, விஞ்ஞானிகளை, கவிஞர்களை, புரட்சியாளர்களை இந்த பூமிக்கு தந்தது புத்தகம் என்ற அந்த ஆக்கசக்திதான் என்பதில் மாற்று கருத்தே இல்லை.
நம் எல்லோருக்கும் ஆதிகாலத்திலிருந்து சொல்லப்பட்ட ஒரு விஷயம். ‘நிறைய நல்லவர்கள் இருக்கிற இடத்தில் மழை பொழியுமாம்’ கேலியாக விளையாட்டாக கூட இந்த வாக்கியத்தை நாம் எல்லோரும் நம் நண்பர்களிடம் பயன்படுத்தி இருப்போம். எந்த அறிவியல் ஆதாரமுமில்லாவிட்டாலும் அந்த வாக்கியத்தை நம் மனம் நம்பவே செய்கிறது.
அது ஒரு ஆழமான ஆக்கபூரவ்மான நம்பிக்கை. ஆக்கப்பூரவ்மான சிந்தனைகள் அதிகம் இருக்கும் இடத்தில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை. அதே போல இங்கே இன்னொரு விஷயத்தை பதிவு செய்தே ஆக வேண்டும்.
நிறைய புதுமையான நற்சிந்தனைகள் கொண்ட எழுத்தாளர்கள் பலர் இருக்குமிடத்தில் எதை பற்றியுமே யோசிக்காமல் தன்னுடைய புகழ் பணம் என்று சமுகத்தை ஒட்டுமொத்தமாக சீரழிக்க புற்றீசல்கள் போல எழுத்தாளர்கள் என்ற பெயர்களில் இங்கே பலரும் உருவாகி இருக்கிறார்கள். உருவாக்கப்படுகிறார்கள். இதனால் எண்ணற்ற வகையில் . தரம்தாழ்ந்த படைப்புகள் புத்தகங்களாக பதிப்பிக்கப்படுகின்றன என்பதும் மறுக்க இயலாத ஒரு கசப்பான உண்மைதான்!
இருப்பினும் அதனால் எல்லாம் புத்தகத்தின் தரமும் சிறப்பும் குறைந்துவிடாது. கடலில் சாக்கடைகள் கலந்தாலும் சமுத்திரம் சமுத்திரம்தான். அது அந்த சாக்கடைகளை தம்மகத்தே உள்ளிழுத்து கொண்டு தூய்மையான நீரை பூமிக்கு மழையாக வழங்குகிறது. பூமியை செழிப்படைய செய்கிறது. அது போலதான் நல்ல புத்தகங்கள் மனித மனங்களில் மாற்றங்களை உருவாக்கி இந்த சமுகத்தை செழிப்படைய செய்கிறது.
அதேநேரம் ஒரு அளவுக்கு மேல் சாக்கடைகள் கலந்து கொண்டே போனால் சமுத்திரமும் பாழாகி போகும். இந்த சமுதாயமும் பாழாகி போகும் என்பதை சொல்லி கொண்டு…
நம்ம ஆரம்பத்தில் சொன்னது போல கதைக்குள் போகலாம்.
கதை என்றதும் கற்பனை கதையென்று எல்லாம் எண்ண வேண்டாம். இது ஒரு உண்மை கதை. என்னோட உண்மை கதை.
‘ஆட்டோ பயோ எழுதுற அளவுக்கு நீ பெரிய அப்பாடக்கரான்னு எல்லாம் கேட்காதீங்க’ நிச்சயாக இல்லை. நான் அவ்வளவு பெரிய ஆளும் இல்லை. இது அவ்வளவு பெரிய கதையும் இல்லை.
ஏன்னா? என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தின் விதையாக… என் முன்னேறத்தின் முதல் படியாக ஒரு புத்தகம் இருந்தது. எனக்கு இளம்வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. கணக்கு வழக்கில்லாமல் நிறைய வகையறாக்களில் நிறைய நிறைய படித்து என் தேடலை நான் அதன் மூலமாக கொஞ்ச கொஞ்சமாக விரிவாக்கி கொண்ட போதும் ஒரே ஒரு புத்தகம் என் இலட்சியத்தை நான் எப்படி அடைவது என்ற கேள்விக்கும் விடை(தை)யாக எனக்கு கிட்டியது அந்த புத்தகம். அது என்ன புத்தகம் என்று கதை முடிவில் சொல்கிறேன்.
ஓகே… எங்கிருந்து நம்ம கதையை தொடங்குகிறது…
ம்ம்ம் நான் ஆறாவது படிக்கும்போதுதான் முதன்முதலாக நானே யோசிச்சு ஒரு மொக்கை கவிதை எழுதினேன். கவிதையோ கிறுக்கல்களோ? அங்கிருந்துதான் எனக்கு எழுத்தின் மீதான ஆர்வம் உண்டானது. இப்படியெல்லாம் கிறுக்குகிறதால நான் மேதாவித்தனமா படிப்பேன்னு எல்லாம் நினைக்க வேண்டாம்.
முதல் மதிப்பெண்ணும் எடுக்க மாட்டோம். கடைசி மதிப்பெண்ணும் எடுக்க மாட்டோம். நடுவாப்ல எடுத்துட்டு போயிடுவோம்.
அதேநேரம் என்னை யாரச்சும் demotivate பண்ணி பேசுனாலோ குறைவா பேசுனாலோ எனக்கு பிடிக்காது. அப்படி என்னோட கணக்கு ஆசிரியர் உமா மிஸ்
'உங்க அக்கா சென்டம் எடுக்குற நீ என்னடான்னா செவன்டி சிக்சிடிதான் எடுக்கிறேன்னு குத்தி காட்டினாங்க’ எனக்கு வந்துது பாருங்க கோபம். அடுத்த தேர்வில அவங்க கேட்ட சென்டம் எடுத்து காண்பிச்சிட்டேன். ஆனா அதுலதான் ஒரு ட்விஸ்ட்! நான் சென்டம் மார்க்குக்கு எழுதவே இல்லயே.
அதற்கு வாய்ய்பே இல்ல. ஏன்னா நான் ஒரு இரண்டு மார்க் கேள்வியை எழுதவே இல்லை. அது எழுதுன எனக்கு தெரியாதா?. பின்ன எப்படி சென்டம்? யோசிச்சு பேப்பரை செக் பண்ணா நைண்டி எய்ட்தான் வந்துச்சு.
இந்த நேரத்தில் நம்ம நேர்மை எருமை கருமைன்னு எல்லாம் யோசிக்கல. மிஸ்கிட்ட நல்ல பேரு வாங்க இது ஒரு நல்ல சான்ஸ்னு யோசிச்சு அவங்ககிட்ட சொன்னேன். அங்கேதான் அடுத்த ட்விஸ்ட்.
மிஸ் கவுன்ட் பண்ணி பார்த்துட்டு சரி பரவாயில்ல இந்த இரண்டு மார்க் உன் முயற்சிக்கும் நேர்மைக்கான பரிசு அப்படின்னு சொன்னாங்க,
முதல் முறையாக முயற்சிக்கான மதிப்பு என்னன்னு நான் உணர்ந்த நொடி அது. கஷ்டப்பட்டு முயற்சி செஞ்சா அதுக்கான மதிப்பையும் சிறப்பையும் நம்ம நேர்மையாகவே பெற முடியும். குறுக்கு வழியெல்லாம் தேவையே இல்லை.
இப்படிதான் வாழ்க்கை அடிக்காம உதைக்காம எனக்கு நிறையவே கற்று தந்துச்சு. தோளில் தட்டி கொடுத்து!
இந்த மாதிரி நிறைய அனுபவங்கள் யோசனைகள் என்னை நிறைய கிறுக்க வைச்சுது. அந்த கிறுக்கல்களின் உச்சபட்சமா ஒன்பதாவது படிக்கும் போது என் தமிழ் ஆசிரியருக்கு பக்கம் பக்கமா கவிதை என்கிற பெயரில் நிறைய கிறுக்கி கொடுத்தேன். ஏன்னா எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும். இத்தனைக்கும் அந்த தமிழ் ஆசிரியர் ஒரே ஒரு வருடம்தான் என் வாழ்க்கை பயணத்தில என்னுடன் வந்திருந்தார்.
ஊடல் கதையில் ஒரு வரி நான் எழுதியிருப்பேன்.
‘ஒரே நாளில் மாற்றங்கள் நடந்துவிடுவதில்லை. ஆனால் அது தொடங்க ஒரு கணம் போதும்.’ அப்படி நமக்குள் மாற்றங்கள் நிகழத்த இந்த மாதிரி மனிதர்கள் ரொம்ப வருடங்கள் நம்மோடு இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு சில மணிநேரங்கள் கூட போதுமானது.
அப்படிதான் தமிழ் என்பது வெறும் மொழி அல்ல. ஒரு வாழ்வியல் அப்படின்னு எனக்கு புரிய வைத்தார். தமிழ் எனக்கு எப்பவுமே பிடிக்கும். ஆனால் அந்த பிடித்தம் மரியாதையாகவும் மதிப்பாகவும் நான் தமிழன் என்ற உணர்வில் தலை கால் புரியாத கரவ்மாகவும் மாறியிருந்தது.
அந்த ஒரு வருட காலம் முடிந்த பின் நான் வேறு பள்ளிக்கு மாறிவிட்டேன். ஆனால் அவர் விதைத்த விதை எனக்குள்ளாக ஆழமாக இறங்கியிருந்தது.
அதுவும் அவருக்கு நான் ஆசிரியர் தினம் அன்று கொடுத்த கிறுக்கல்களை பார்த்து பாராட்டிய அதேநேரம் எதுகை மோனையில் எழுதிட்டா மட்டும் அது கவிதை இல்லைன்னு சொன்னாரு.
அது மட்டுமே இல்லை. திடீரென்று ஒரு நாள் என்னை கூப்பிட்டு ஒரு பேப்பரை தந்து ஒரு அறைக்குள் அனுப்பிவிட்டாரு. அது ஒரு கவிதை போட்டிக்கான அறை.
அப்போது அங்கே கொடுக்கும் தலைப்பை வைத்து கவிதை எழுதணுமாம்.
மனுஷன் இப்படி சிக்க வைச்சுட்டாரேன்னு தோணுச்சு.
தலைப்பு- பாரதி கண்ட புதுமை பெண். வாயில் வந்த ஏதோ எனக்கு தெரிஞ்சதை எழுதி வைச்சுட்டு வந்துட்டேன், அப்புறம் அந்த போட்டி எழுதியதையே நான் மறந்து போயிட்டேன்.
ஒரு நாள் அந்த போட்டிக்கு பரிசு அறிவிச்சாங்களாம். இது நான் செவி வாழியாக கேட்ட செய்தி. ஏன்னா அன்று பள்ளிக்கு போக முடியாத சூழ்நிலை. பூப்படைந்ததால்! அந்த வருடத்திற்கான Full attendance என் பெயரை செலெக்ட் பண்ணி இருந்தாங்க. அதுவும் போச்சு… இதுவும் போச்சு. மேடை ஏறி வாங்க rehersal எல்லாம் பார்த்து அது நடக்காமலே போச்சு!
ஆனால் அதுவும் ஒரு அனுபவமாக என் வாழ்க்கையில் பதிவானது. அதற்கு பின் என் கல்வி பயணம் வேறு பள்ளியில் தொடர்ந்திருந்தது. என்னோட தமிழ் ஆசிரயரோட தொடர்பு விட்டு போனாலும் அவர் சொல்லி கொடுத்த எதுவும் என் சிந்தனையை விட்டு போகவில்லை. பின் எப்படி போகும். அவர் விதைத்த விதை அப்படி?
என்னுடைய முதல் புத்தகம் வெளியான போது அவரிடம் சொல்லி சந்தோஷப்பட ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா எப்படி?
அவர் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று எனக்கு தெரியாதே. சரியாக பதினைந்து வருடத்திற்கு பிறகு அவர் தொடர்பு எனக்கு திரும்பவும் கிடைச்சது. அது எப்படி கிடைச்சதுன்னு சொன்னா நீங்க எல்லாம் ஆச்சரியப்படுவீங்க.
என்னுடைய வாடி என் தமிழச்சி கதையை படித்து கொண்டிருந்த வாசகி என்னை பாராட்டி உள்பெட்டியில் தகவல் அனுப்பி இருந்தாங்க. நானும் பதிலளித்தேன். அந்த உரையாடலின் போதுதான் அவர் நான் படித்த பள்ளியில் நான் படித்த அதே வருடத்தில் ஆசிரியராக பணிபுரிந்தது தெரியவந்தது.
எங்க ஐயாவோட பெயரை சொல்லி அவரை உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன்.
ஒ! நல்லாவே தெரியுமே அவர் எனக்கு நண்பர்னு சொன்னாங்க
இந்த வாழ்க்கை அமைக்கிற காட்சி அமைப்புகள் நம்ம எழுதுகிற கதைகளை விட மிகுந்த சுவாரசியமானது. என்ன ஒரு டிசைன்! என் வாசகர் மூலமாக அவரின் அறிமுகம் எனக்கு மீண்டுமே கிடைச்சது. அவரே எனக்கு தொடர்பு கொண்டு பேசினார்.
Best moment in my life. இப்படி நிறைய ஆச்சரியங்களும் அதற்கு பின்புலத்தில் நிறைய அனுபவங்களும் எனக்காக காத்திருந்தன.
என் தமிழ் ஐயாவோட அறிவுரையால் பள்ளி காலத்தில் என் கிறுக்கல்களும் சிந்தனைகளும் புது பரிமாணத்தை அடைந்தது. நிறைய எழுதுவேன். எழுதுனதும் தூக்கி போட்டுடுவேன். அப்படி ஒரு ஆகசிறந்த நல்ல பழக்கம் எனக்கு. தூக்கி போடாம தப்பிச்ச சில கவிதைகளில் ஒன்று. ‘கடவுள்’ அப்படிங்கிற கவிதை. அதை பள்ளி முதல்வர் கிட்ட காண்பிச்சிட்டா என்னோட அக்கா!
என் எழுத்தை பார்த்து எனக்கு மதிப்பு இருக்கோ இல்லையோ? என் தங்கைக்கும் அக்காவுக்கும் இருந்துச்சு. அப்படி பெருமையா அவள் காட்ட போக பிரின்ஸி என்னை கூப்பிட்டு வைச்சு பாராட்டினாரு.
இந்த சின்ன வயசுல எப்படி நீ இப்படியெல்லாம் யோசிக்கிற அப்படின்னு கேட்டாரு.
‘அவ்வளவு நல்ல்ல்ல்லாவா இருக்குன்னு’ எனக்கு நானே மனசுக்குள்ள் கவுண்டர் கொடுத்துக்கிட்டேன்.
அதெல்லாம் நம்பி நான் நிறைய எழுத ஆரம்பிச்ச போது எனக்கு எழுத்தின் மீதும் எழுத்தாளன் என்ற வாரத்தை மீதும் அபிரிமிதமான ஒரு மோகம். அதுவும் பொன்னியின் செல்வன் படிச்சு முடிச்ச பிறகு அந்த மோகம் தலை கால் புரியாம ஏறியிருந்தது.
ஆனாலும் paasion profession இந்த இரண்டு வார்த்தைக்குள்ள இருந்த வித்தியாசம் தெரியாம நிறைய குழும்பினேன். வழிக்காட்ட வேண்டியாங்களே நம்மை தெளிவா குழும்பினாங்க. சம்பாதிப்பதும் வேலைக்கு போவதும்தான் நம்ம வாழ்க்கையோட லட்சியம்னு கணிபொறி ஆசிரியர் விதைச்ச விதை என்னை தடம் மாறி போக வைச்சுது.
ட்விஸ்ட் இல்லன்னா வாழ்க்கை எப்படி சுவாரசியமா இருக்கும்.
அதுவும் நான் ஒரு பெரிய குழப்பவாதி!
Archaeologist ஆகணும் lawyer ஆகணும் இப்படியெல்லாம் நிறைய வித்தியாசமா யோசிச்சேன். Lawyer entrance exam hall ticket வரைக்கும் வாங்கி வைச்சிருந்தேன். ஆனால் எழுத விட்டார்களா என்னைய? துரத்து துரத்துன்னு துரத்தி கொண்டு போய் bsc computer science சேர்த்துவிட்டாங்க. உண்மையில் என்னை துரத்துனது என் பேரன்ட்ஸ் இல்லை.
எதையெல்லாம் படித்தால் நம்ம எதிர்காலத்திற்கு நல்லது அப்படின்னு கன்வாஸ் பண்ணி நம்மை குழப்ப ஒரு கூட்டம் இருக்கும் இல்லையா? அதுதான்.
எப்பவுமே நம்ம எதிர்காலத்தை பற்றி அடுத்தவனிடம் அபிப்பிராயமே கேட்க கூடாது என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் நான்தான்.
Brain wash அப்படிங்கிற வாரத்தைக்கு அர்த்தம் அப்பத்தான் புரிந்தது. இதுதான் சரின்னு நம்ப வைக்கிறது இல்ல. இதுதான் உனக்கு சரின்னு நமக்கான முடிவை அவர்களே எடுப்பதுதான் பெரிய தந்திரம்.
உண்மையில் கல்வி நமக்கு சுயமாக சிந்திக்க கற்று கொடுக்கும். ஆனால் அந்த கல்வி என்ற கருவியின் மூலமாக வியாபாரம் செய்யும் ஒரு கூட்டம் நம்முடைய இலட்சியத்தை சிந்தனையை சுயத்தன்மையை அழிக்க கங்கணம் கட்டி கொண்டு காத்திருந்தது. அந்த வியாபார கூட்டத்திடம் சிக்கி கொண்டால் என்னை போல வாழ்க்கையே தடம் மாறி போக வாய்ப்பு உண்டு.
அனாலும் 12b பட கதை மாதிரி நான் விட்ட பஸ்சை திரும்ப பிடிச்சேன். அதுவும் விட்ட இடத்திலிருந்து!
இருப்பினும் அதற்கு நான் காவு கொடுத்த வருடங்கள் கொஞ்சம் அதிகம். எத்தனை வருடங்கள் ஆன போதும் அந்த விதை மட்கி போகாம எனக்குள்ள உயிரோட்டமா இருந்ததுதான் ஆச்சரியம்.
அதற்கு பிறகு என்னோட கல்லூரி நாட்கள் கணிப்பொறியை கற்று கொடுத்ததைவிட நிறைய நிறைய புதுப்புது அனுபவங்களை கற்று கொடுத்தது.
நான் நம்ம வீரா மாதிரி எல்லாம் இல்லை. C++ java எல்லாம் எனக்கு நல்லாவே வரும். நல்லா வந்து என்ன செய்ய? என் ஆர்வமும் காதலும் அதன் மீது இல்லையே!
எனக்கு நாவல்கள் படிக்கிறது பொழுது போக்காக இல்லை. அது ஒரு போதை. அங்கேதான் என்னுடைய படிக்கும் ஆர்வம் கதை சொல்லும் ஆர்வமாக மாறியது. படிச்ச கதைகளை அப்படியே suspense maintain பண்ணி சொல்வது கூட ஒரு திறமை இல்லையா?
அப்படிதான் கதை சொல்லியாக நான் மாறிய பின் எனக்குள் இருக்க படிக்கிற ஆர்வம் எழுதுற ஆர்வத்தை அதிகமாக தூண்டிவிட நானும் என் தோழி அப்சானாவும் நிறைய கவிதை போட்டிக்கு போவோம். எத்தனை கல்லூரியிலிருந்து வந்திருந்தாலும் முதல் பரிசு அவளுக்குதான் கிடைக்கும். அவள் வெற்றி பெறுவாள் நான் தோற்றுவிடுவேன். இது வழமையாக நடக்கும் காட்சிதான்!
என்னோட பிரச்சினையே எனக்கு நல்லா எழுத வரும். அந்த கவிதையை பத்து பேர் முன்னாடி படிக்க சொன்னா படிக்க வராது. திக்கி திணறும்.
ஆனால் அதுக்காக எல்லாம் துவண்டு போகாம நான் ஒவ்வொரு போட்டியிலும் போய் தோற்று போவேன்.
Failure is the stepping stone of success அப்படின்னு நான் கற்று கொண்ட காலக்கட்டம் அது.
Failure மட்டும்தானே இருக்கு. எங்க successன்னு நீங்க கேட்கலாம். அதுவும் ஒரு நாள் கிடைச்சது. சென்னை துறைமுக தமிழ்சங்க கவிதை போட்டியில், ‘ஒசோனே இமைமூடு’ அப்படி ஒரு தலைப்பு கொடுத்து எழுத சொல்லி இருந்தாங்க.
அதுல highlight ஆன விஷயம் என்னன்னா எழதி மட்டும் தந்தால் போதும். படிக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அந்த போட்டி நடந்து முடிந்து ஒரு வருடமாகி நான் கல்லூரி காலங்களை முடித்து வந்த பின் ஒரு நாள் என் தோழி அப்சானா எனக்கு கால் பண்ணி உனக்கு இரண்டாவது பரிசு கிடைச்சிருக்குனு சொன்னா.
அதாவது முதல் பரிசு அவளுக்கு. இரண்டாம் பரிசு எனக்கு. பல கல்லூரிகள் கலந்து கொண்ட அந்த போட்டியில் முதல் இரண்டு பரிசுகள் எங்க கல்லூரிக்கு கிடைத்தது ஆச்சரியம்னா அந்த போட்டியில் பரிசு கிடைத்தது குறித்து எங்கள் கல்லூரி நிர்வாகம் எங்களிடம் சொல்லாமல் விட்டது அதிர்ச்சி. பரிசு கொடுத்து ஒரு வருடம் கழித்து அந்த ஷீல்ட் என் கைக்கு வந்துச்சு.
என் பெயர் பொறிக்கப்பட்ட ஷீல்ட். மேடையில் ஏறி வாங்கும் கொடுப்பனை இல்லையென்ற போதும் அந்த பரிசை பார்க்க எனக்கு என் எழுத்தின் மீது கர்வமும் பெருமிதமும் உண்டாகும்.
இந்த மாதிரியான வெற்றிகள்தான் என்னை எழுத தூண்டிய உந்துசக்திகள்.
அதேநேரம் என்னுடைய கல்லூரி காலத்து கடைசி வருடத்தில் நான் ஒரு கதை எழுதினேன். தினமும் ஒரு பத்து பக்கம் எழுதுவேன். அதை என் நட்புங்க படிப்பாங்க. முதன்முதலாக நான் எழுதிய கதையை படிச்ச அந்த நட்பு இன்றும் என் கதையை படிச்சிட்டு இருக்கு. இன்னும் இன்னும் நல்லா எழுதுன்னு என்னை கொட்டிக்கிட்டே இருக்கு!
அந்த நட்போட தொடர்பு கல்லூரிக்கு பின் அறுந்து போனது. ஆனால் அவளோட படிக்கும் ஆர்வம் குறையவில்லை. என்னோட எழுதும் ஆர்வமும் மறித்து போகவில்லை.
மீண்டும் எங்கள் நட்பின் தொடர்பு என் எழுத்தின் மூலமாக பிணைந்தது, என்னுடைய சொல்லடி சிவசக்தி கதையை நான் யாருன்னு தெரியாமலே smsiteலபடிச்சு வருடங்கள் கடந்து மீண்டும் தொடர்பு கொண்டு பாராட்டியதெல்லாம் என் வாழ்க்கை எனக்கு கொடுத்த மிக சுவாரிசியமான ஆச்சரியங்கள்தான்.
என்னதான் நான் bsc computer science படிச்சாலும் நம்ம மூளை எழுதுவதை மட்டுமே பிடிவாதமா பிடிச்சிக்கிட்டு இருந்துச்சு. எல்லோரும் IT company வேலைக்கு போகும் போது டீச்சர் வேலைக்கு போனேன். இதெல்லாம் என் வாழ்க்கையே எடுத்த முடிவுகள்.
நம்ம வாழ்க்கையை எந்த பாதையை கை காண்பிக்கிறதோ அந்த பாதையில் நாமும் அமைதியாக போயிடனும். தேவையில்லாத சில பேரோட வார்த்தைகளை கேட்டு ட்விஸ்ட் அன் டர்ன் பண்ணி திருப்பி சொதப்பி! எதுக்கு இந்த வேலை என்று அமைதியாக வாழ்க்கையின் நீரோட்டத்தில் கலந்து போனேன் நான்.
ஆசிரியர் என்ற அவதாரம் எடுத்த நான் Prekg முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அந்த மூன்று வருட காலகட்டத்தில் பார்த்துவிட்டேன். அதுவும் நான் முதல் முதலாக ஆசிரியராக சேர்ந்த எடுத்துல நான் டீச்சரா ஸ்டுடண்டா அப்படின்னு எல்லோருக்கும் சந்தேகம் வரும்.
பசங்களை விட அதிகமா நான்தான் நிறைய சொதப்பினேன். சந்தோஷம் சுவாரசியம் கலாட்டா கடைசியா ஒரு ட்விஸ்ட், யாராச்சும் attendance register ink ஊத்துவாங்களான்னு கேட்டா?? நான் ஊத்துவேன். முடிஞ்சுது
முதல் வேலை வெற்றிகரமாக தோல்வியில் முடிந்தது. ஆனால் அதற்கு பிறகு அதை விட பெரிய பள்ளியில் இரண்டு மடங்கு சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்ததும் சேர்ந்த சில மாதங்களில் திருமணம் முடிந்ததும் குடும்ப வாழ்க்கை என்னை வெகுவாக உள்ளிழுத்து கொண்டதும் அதிவிரைவாக நடந்து முடிந்தது.
அவ்வளவுதானா? முடிஞ்சிடுச்சா? அப்படின்னு என்னை நானே கேட்டு கொண்ட நாட்களும் உண்டு. என் டைரியில் பக்கம் பக்கமா புலம்பி அது தீர்ந்து காலியாகியும் போனது. ஆனால் என் தேடலும் அதன் தாகமும் தீரவேயில்லை.
ஒரே இடத்தில தேங்கி இருக்கோம்னு மனசு சொல்லிகிட்டே இருக்கும். ஆனால் அதை கடந்து போகும் பாதை தெரியவில்லை.
புத்தகம் படிக்கிறது… அது மட்டுமே என்னையும் என் இலட்சியத்தையும் எக்ஸ்பயரி ஆகாம உயிர்ப்போடு வைத்திருந்தது.
கல்லூரி முடித்ததும் ஆதியே அந்தமாய் கதையை வேறு பெயரில் எழுத ஆரம்பித்து அதன் பின் வேலை கிடைத்து வேலை பளுவில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். அதை திருமணமாகி முதல் மகனுக்கு இரண்டு வயதை எட்டிய போது தொடரலாம்னு எடுத்து அப்பவும் முடிக்க முடியல!
குடும்பம் குழந்தை என்கிற சுழலுக்குள் சிக்கி கொண்டு மீண்டு வருவதும் மீட்டு வருவதும் அத்தனை சுலபமான காரியம் இல்லை. சுழற்றி சுழற்றி என்னை அடிச்சுது. என்னுடைய இலட்சியத்தை ஆசையை கனவை தற்கொலை செய்யவிடாமல் பிடிமானமாகவும் பற்றுகோலாகவும் தாங்கி பிடித்து கொண்டிருந்தது புத்தகங்கள் மட்டும்தான்.
நாவல்கள், சுயமுன்னேற்ற கட்டுரைகள், பரிணாம பாதைகள், ஓஷோ இப்படி புதிதாக புதிதாக அதுவும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத காம்பினேஷனாக நான் படித்து கொண்டிருந்தேன்.
எப்போதெல்லாம் என் குடும்பம் வாழ்க்கையில் எனக்கு மூச்சு முட்டுகிறதோ அப்போதெல்லாம் படித்தேன். எனக்குள் இருக்கும் என்னை தேடி கொள்ள படித்தேன். என் சிந்தனையை மழுங்கடிக்க பார்த்த சீரியல்களிலிருந்து தப்பி கொள்ள படித்தேன்.
எல்லோருக்கும் வருடத்தில் இந்தந்த பண்டிகை வந்தால் சந்தோஷம் என்று ஒரு பட்டியல் இருக்கும். எனக்கு சென்னை புத்தக திருவிழா வந்தாள் ஆகபெரிய சந்தோஷம். அவை வெறும் புத்தக குவியல் இல்லை. புத்தக புதையல். அதன் மதிப்பை எல்லோராலும் உணர்ந்துவிட முடியாது. அந்த புத்தக குவியலுக்குள் இருக்கும் நம் புதையல்களை!
அத்தனை அத்தனை ஸ்டால்களில் என் கண்களுக்கு கிட்டிய அந்த புத்தகம்…
மீண்டும் என்னுடைய எழுதும் ஆர்வத்தை தூண்டிவிட்டது. மீண்டும்
என்னை எழுத வைத்தது.
அடுத்த புத்தக கண்காட்சியில் என்னுடைய முதல் புத்தகம் வெளியானது.
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
அந்த புத்தகத்தோட பெயர் ‘first book’
எழுதவும் எழுத்தாளனாகும் சூட்சமத்தின் ஒரு சின்ன ரகசியத்தை எனக்கு அந்த புத்தகம் கற்று கொடுத்தது. பல எழுதாளர்கள் எழுதிய அந்த புத்தகத்திலிருந்த ஒவ்வொரு வரிகளும் அறிவுரைகள் அல்ல. அனுபவங்கள்.
அனுபவங்கள் அறிவுரைகளை விட உரக்க பேசும். அது எனக்குள் பேசியது. அதில் சொல்லப்பட்ட விஷயத்தை நான் பின்பற்றினேன்.
எழுத்தின் மீதான என் ஆர்வத்திற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். அதற்கு தூண்டுகோலாக அமைந்தது அந்த புத்தகம்தான்.
அப்படி என்ன சொல்லி இருந்தது இந்த first bookல????? அடுத்த அத்தியாயத்தில்…
விதைப்போம்… தொடர்ந்து நல்ல சிந்தனைகளை
உங்க வாழ்க்கையிலும் இப்படி நீங்க நிறைய ஆச்சரியங்களை அதிசயங்களை வெற்றிகளை கடந்து வந்திருக்கலாம். அது என் கதை மாதிரி சுமாரா இல்லாம ரொம்ப சூப்பரா இருக்கலாம்.
அதை நீங்க இங்கே நம்மோட விதைபந்து கட்டுரையில் ஒரு அத்தியாயமாக பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லோரோட வாழ்க்கையோட வெற்றி formula வேற வேற…
அது இங்க இருக்க யாருக்காவது பயன்படட்டுமே! நம் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் போது அது மற்றவருக்கு மட்டும் இல்லை. நமக்குமே புதுநம்பிக்கையை உருவாக்குகிறது.
விதையின் மூலம் விருட்சம் உருவாகுகிறது. அந்த விருட்சங்கள் மூலம் பல்வேறு விதைகள் உருவாகின்றன. உங்களுக்குள்ளும் நிறைய விதைகள் உள்ளது.
வாருங்கள்… தொடர்ந்து விதைப்போம்… புதுப்புது நற்சிந்தனைகளை!
விதைப்பந்து Episode - 10 புனிதம்
9 - தெளிந்த சிந்தனை

அதற்கு அம்பையின் ‘உடலெனும் வெளி’ படிக்க வேண்டும்.
சிந்திப்போம்!
விதைப்போம் நற்சிந்தனைகளை.
விதைப் பந்து – 8
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று
புதுமை கொணர்ந்திங்கே திலக வாணுத லார்நங்கள்
பாரத தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்;
சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!

விதைப்போம் நர் சிந்தனைகளை.
விதைப் பந்து - 7
மகளிர்தின சிறப்புப் பதிவு!
7.பெண்ணியம்

எமக்குக் கடவுள் நிகர் பதவியும் வேண்டாம்...
காலில் போட்டு மிதிக்கவும் வேண்டாம்!
தேவதை சிறகுகள் எமக்கு வேண்டவே வேண்டாம்!
அச்சிறகுகள் பிய்த்தெறிந்து துடிக்கவும் வேண்டாம்!
எம் சிந்தைக்குள்ளே புகுந்து பாடும்...
பொய் சாத்திரங்கள் எமக்கு வேண்டவே வேண்டாம்!
கண்ணே மணியே காவியமே என வருணிக்க வேண்டாம்!
பச்சிளம் குழந்தையென்றில்லாமல்..
எம்மை பாலியல் கண் கொண்டு பார்க்கவும் வேண்டாம்!
இப் பறந்து விரிந்த புவி தனிலே எமக்கு...
பாரபட்சமில்லா பாதுகாப்பு வேண்டும்!
மனதில் துளிர்க்கும் துளி துணிவையும்...
இங்கே தகர்த்தெறியா நல் சமுதாயம் போதும்!
ஆம்... பெண் இங்கே பெண்ணாய் வாழ...
மாசறு நல் சமுதாயம் போதும்!
விதைப்பந்து தொடரும்…
இரசனையும் படைப்புகளும்!
தத்தித்தா தூதுதி தாதுதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?
[வண்டே! தத்தி தாது ஊதுதி - தாவிச் சென்று பூந்தாதினை ஊதி உண்ணுகின்றாய்; தாது ஊதித் துத்தி - பூந்தாதினை ஊதி உண்ட பின்னர் மீளவும் தாவி எங்கோ செல்லுகின்றாய்; துத்தி துதைதி - துத்தி என ரீங்கார ஒலி எழுப்பியபடியே மற்றொரு பூவினை நெருங்குகின்றாய்; துதைந்து அத்தாது ஊதுதி - அப் பூவினை அணுகி அதனிடத்துப் பூந்தாதினையும் ஊதி உண்ணுகின்றாய். தித்தித்த தாது எது நினக்கு இனிப்பாயிருந்த பூ எதுவோ? தித்தித்தது எத் தாதோ - இனித்திருந்தது எதன் மகரந்தமோ? தித்தித்த தாது - இதழாக அழகியதும் எப் பூவோ? துதைந்து என்ற சொல் துதைத்து என விகாரமாயிற்று. தாது - பூந்தாது, பூவிதழ், பூ என மூன்றையும் குறிப்பதாம்]
இப்படிப்பட்ட இலக்கிய சுத்தமான பாடலை இலகுவாக புரிந்துக்கொண்டு ரசிக்கச் சிலரால் முடியும்.
பூ பூக்கும் ஓசை...
அதைக் கேட்கத்தான் ஆசை!
புல் விரியும் ஓசை...
அதைக் கேட்கத்தான் ஆசை!
என எளிமையாகச் சொன்னால்தான் பலரால் இரசிக்கவே முடியும்.
மக்களுடைய ரசிப்புத்தன்மை என்பதை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்கிவிட முடியாது.
ஒரு சிலருக்கு இயற்கையை ரசிக்கப் பிடிக்கும்.
ஒரு சிலர் விலங்குகளையும் பறவைகளையும் ரசிப்பார்கள்.
சுவைத்து ரசித்துச் சாப்பிடச் சிலருக்குப் பிடித்தால், ரசித்து ரசித்து விதம் விதமாகச் சமையல் செய்யச் சிலருக்குப் பிடிக்கும்.
ஒருவரது ரசனை அவர்களால் சுலபமாக அணுக முடிந்த விஷயத்தைச் சார்ந்ததாகவே இருக்கும்.
அந்த காலம் தொட்டு பெண்களின் ரசனை சமையல், கோலம் போடுவது, அழகாக ஒரு தோட்டத்தைப் பராமரிப்பது வாய்ப்பு கிடைத்தரவர்களுக்கு சங்கீதம் நடனம் என ஒரு வட்டத்துக்குள் அமைந்ததே துரதிர்ஷ்டம்.
அவர்களது ரசனை அதனைக் கடந்து எழுத்து, இலக்கியம், விஞ்ஞானம் என வளர்வதற்கு ஒரு நூறாண்டு காலம் தேவைப் பட்டது.
ரசனையும் படைப்பாற்றலும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.
தானே ரசிக்காத ஒன்றை ஒருவரால் படைக்க இயலாது.
ஒவ்வொரு படைப்பாளியும் ஒரு ரசிகராகத்தான் இருக்கமுடியும்.
தான் ஆழ்ந்து ரசித்த ஒவ்வொரு விஷயத்தையும் தானே படைக்கவேண்டும் என்ற வேட்கைதான் அவர்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது.
அதை அடுத்தவர் பாராட்டும்பொழுது அந்த படைப்பாற்றல் வேறு நிலைக்குப் போகிறது.
இந்த சமூக வலைத்தளங்கள் தலையெடுப்பதற்கு முன்புவரை, அதாவது ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை பல திறமையாளர்களுக்கு அங்கீகாரம் என்பது ஒரு எட்டாக்கனியாகவே இருந்தது.
ஆனால் இன்றோ சாமானியர்கள் கூட தங்கள் திறமைகளை ஒரு பெரிய சமூகத்தின் முன் நிறுத்த அவர்களுக்கு வாய்ப்பிருக்கிறது.
உண்மையாகவே திறமை இருப்பவர்கள் பலரால் ரசிக்கப்படுகிறார்கள், புகழப்படுகிறார்கள்.
சிலர் நேர்மறையாகச் சென்றால், சிலர் எதிர்மறையாகச் சென்று இங்கே தங்களை நிலைநிறுத்த முயல்வதும் நடக்கிறது.
காரணம், பல ஆண்டு காலமாக அடக்குமுறைகளுக்குள்ளேயே வாழ்ந்து புழுங்கித் தவித்த பெண் சமுதாயம், கடந்த நூற்றாண்டில்தான் தன் கூட்டை விட்டு வெளியே வந்து சுதந்திர காற்றைச் சுவாசித்தது.
என்னதான் படித்து வேலைக்குச் சென்று பொருள் ஈட்டினாலும், கணவர், மாமியார் நாத்தனார் உட்பூசல்களுடன் கூடிய வீட்டுக்கடமைகள் மற்றும் அலுவலக/ தொழில் சார் கடமைகள் என இரண்டு படகுகளில் சவாரி செய்ய வேண்டிய சூழ்நிலை இருபாலரில் பெண்களுக்கு மட்டுமே இருந்தது. (இன்றும் இருக்கிறது)
இதற்கிடையில் மகப்பேறு, பிள்ளை வளர்ப்பு, பிள்ளைகளின் கல்வி எனப் பெண்கள் அனைத்தையும் ஒரு கை பார்க்கத்தான் செய்தார்கள்.
ஆனாலும் அன்னையும் பாட்டியும் பட்ட இன்னல்களையும் அடக்குமுறைகளையும் பார்த்தும் கேட்டும் வளர்ந்ததால் தற்பொழுது காட்டாற்று வெள்ளமென அனுபவிக்கும் சுதந்திரம் இத்தலைமுறை பெண்கள் சிலரைப் புகழ் எனும் போதைக்கு அடிமையாக்கி எதிர்மையான பாதைக்கு இட்டுச்செல்கிறது எனலாம்.
அதன் வெளிப்பாடுதான் இந்த 'டிக் டாக்' செயலி போன்ற சமூக ஊடகங்கள் மூலம் அவர்கள் தம்மை வரம்பு மீறிக் காட்டிக்கொள்ளக்கூடக் காரணம்.
எழுத்துலகிலும் கூட இதுதான் நடக்கிறது.
ஒரு சிலர் எதிர்மறையாகத் தகாத விஷயங்களை இணைத்து எழுதுவதால், பொதுப்படையாக எல்லா பெண் எழுத்தாளினிகளுமே, (எழுத்தாளர் என்பதே ஆண் பெண் இருவருக்கும் பொதுவான வார்த்தைதான். எழுத்தாளிணி என்ற வார்த்தை தமிழில் இல்லவே இல்லை. ஆனால் இப்படி சொல்வதால் தவறொன்றும் இல்லை என நினைக்கிறேன்.) இகழ்ச்சிக்கு உள்ளாகிறார்கள் என்பது கசப்பான உண்மை.
இயற்கையே ஒரு பெண்ணை படைப்பாளியாகத்தான் படைத்திருக்கிறது.
ஒரு உயிரை இந்த உலகத்திற்குக் கொண்டு வருவதில் ஒரு பெண்ணின் பங்கு அளப்பரியது.
பெண் நினைத்தால் மட்டுமே உயிர்கள் உலகில் நிலைத்திருக்கும்.
ஒரு கற்பனைக்கு, உலகில் உள்ள பெண்கள் அனைவரும் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் எனச் சொல்கிறார்கள் என்று வையுங்கள், ஒரு சில வருடங்களில் இங்கே மனித இனம் என்ற ஒன்றே இல்லாமலே போய்விடும்.
அதை யாருமே உணரவில்லை.
பெண்கள் முன்னேற்றம் அடைந்துவிட்டாரகள்.
பெண்கள் எல்லா துறைகளிலும் கால் ஊன்றி இருக்கிறார்கள் என நாம் பெருமைப் பட்டுக்கொண்டாலும் இன்னும் கூட ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆண்களின் அடி மனதில் பெண்ணை அடிமைப் படுத்தும் எண்ணம் என்பது முற்றிலுமாக ஒழியவில்லை.
இன்றைய அவளின் வாழ்க்கை முறை ஆண்களால் வரையறுக்கப்பட்டதுதான்.
நம் சமூகத்தைப் பொறுத்தமட்டில் இன்றளவும் ஒரு பெண் அதிகாலை கண் விழிக்கும் முன்னமே அவளது அன்றாட பணிகள் கண் விழித்து விடும்.
காலை சிற்றுண்டிக்கு என்ன செய்வது என்பதுதான் அவளது ஆகச்சிறந்த முதல் கவலையாக இருக்கும்.
'என்ன இன்னைக்கு ஒரே ஒரு சைட் டிஷ் தானா?'
'தினமும் இதே இட்லி; இதே தோசை! வேற வெரைட்டி செய்யக்கூடாதா?' என்ற கேள்விகள் மற்ற அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிடும்.
'நேத்து என்ன டிபன் செஞ்சோம்; முந்தாநாள் என்ன குழம்பு வெச்சோம்' இதையல்லாம் சிந்தித்து பார்த்து அன்றைய உணவு வகைகளைத் திட்டமிட வேண்டும்.
வருவாய் ஈட்ட வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தாலும் சரி வீட்டில் இருந்து குடும்பத்தை கவனிக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி எல்லோருமே இந்த கவலைகளைப் பட்டே தீரவேண்டும்.
பூரண அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் குடும்பத்தை கவனித்தாகவேண்டிய பொறுப்பு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகம்.
காரணம் இயற்கையே அவள் மேல் சுமத்தியுள்ள கருணை, தாய்மை போன்ற அடிப்படை பண்புகள்.
இந்த நிலையில் ஒரு ஆணை காட்டிலும் பெண் ஒரு துறையில் முன்னேறிச் செல்கிறாள் என்றாள் அவள் ஒரு ஆணை காட்டிலும் வலிமையாக இருக்கிறாள் என்று பொருள்.
அதுவும் பெண் ஒரு எழுத்தாளராகச் சிறு அங்கீகாரம் பெறுகிறாள் என்றால் அது இமாலய சாதனையே.
ஆண் இலக்கியவாதிகள் போல நம் பெண் எழுத்தாளர்கள் ஒன்றும் இந்த திறமையை வருவாய் ஈட்ட என்று பயன்படுத்துவதில்லை.
சமையல் அறையிலேயே நாம் ஆயுள் முழுதும் முடங்கிவிடுவோமோ என்ற கேள்வி, அவளை அடுத்தடுத்து எழுதத் தூண்டுகிறது.
பெண்களைப் பொருத்தமட்டும் இந்த எழுத்தார்வம் என்பது ஒரு வேட்கை.
வெறும் பொழுதுபோக்கல்ல.
இத்தனை இன்னல்களுக்கு நடுவில் நல்ல விஷயங்களை மட்டுமே நம் வாசகர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்கிற கொள்கை கோட்பாடுகளுடன் எழுதும் எழுத்தாளினிகளுக்கு தகுந்த அங்கீகாரத்தை வாசகர்களால் மட்டுமே கொடுக்கமுடியும்.
மேலும் இணையம் மூலம் நாம் வாசிப்பதையும், நாம் விமர்சிப்பதையும், நாம் இடும் ஒவ்வொரு 'comment மற்றும் likes' அனைத்தையும் பல கண்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன.
நாம் தவறாக எழுதினாலும் சரி தவறான எழுத்துக்குத் துணை போனாலும் சரி கட்டாயம் இகழ்ச்சிக்கு உள்ளாவோம் என்பதே உண்மை.
எனவே தேர்ந்தெடுத்து தரமாக எழுதுவோம்! தரமான எழுத்துக்களைத் தேடிப் படிப்போம்!
****
சிறகுகள் தேவை...
சுதந்திரமாய் சுற்றித் திரிய அல்ல...
குடும்பத்தலைவி என்ற கூட்டுக்குள்ளே இருந்தாலும்கூட...
என்னாலும் விண்ணைத் தொட முடியும் என்ற தன்னம்பிக்கைக் காக-
எனக்கு மென் சிறகுகள் தேவை...
கரண்டிகள் என் கைத்தடியாக மாறிப்போகாமல் இருக்க...
எனக்குச் சிறகுகள் தேவை...
துடைப்பதோடு துடைப்பமாய்…
என் ஆற்றலும் மூலையில் முட்டிக்கொண்டு நிற்காமல் இருக்க...
சிறகுகள் தேவை...
கழிவிரக்கம் என்னைக் கடித்துத் தின்னாமல் இருக்க...
சிறகுகள் தேவை...
தொலைக்காட்சி பெட்டிக்குள் நான் தொலைந்துபோகாமல் இருக்க...
என் சிறகுகள்...
என் சிந்தனையில் பிறந்து-
என் விரல் வழி உயிர் பெரும் எழுத்துக்கள்...
என் சிறகுகள்....
எனக்கான அங்கீகாரம்.
ஒவ்வொருவருக்கும் சிறகுகள் முளைக்கலாம் l...
அவை உங்களை அங்கீகரிக்கலாம்!
(விதைப்போம்)
5. அறம்
இந்த தலைப்பு அவ்வை பாட்டியின் ‘அறம் செய்ய விரும்பு’ல இருந்து எடுத்ததில்லை. ஜெயமோகனின் அறம் என்ற சிறுகதையிலிருந்து சுட்டது.
சமீபமாகத்தான் அந்த புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. இருப்பினும் முன்பே பலரால் அந்த புத்தகத்தின் சிறப்பை கேட்டறிந்திருக்கிறேன்.
‘என்ன பா இன்னும் நீ அறம் படிக்கலையா?’ இப்படியான கேள்விகளை எதிர்கொள்ளும் போது, ‘அப்படி என்னடா அப்பேர்ப்பட்ட புத்தகம்னு’ ஆச்சரியப்பட வைத்தது அந்த அறம்!
ஆனால் முதன்முதலில் நான் அறம் பற்றி கேள்விப்பட்டது சஷி அக்காவின் வாயிலாகத்தான். இரண்டு வருடம் முன்பு அந்த அறம் சிறுகதையிலிருந்த ஒரு வசனத்தை என்னிடம் சொன்னார். வசனம் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு எழுத்தாளனுக்குள்ளும் கர்வம் புகட்டும் உயிரோட்டமான உணர்வுகள் அவை.
அப்போது முடிவு செய்தேன். இதை நாம் படித்தே ஆக வேண்டும்.
அப்படியென்ன வசனம் அது?
அதுதான் விதைபந்துடைய இன்றைய பதிவின் final touch…
வாருங்கள்… தொடர்ந்து பயணிப்போம்.
அறம் பற்றி சொல்வதற்கு முன்னதாக முந்தைய பகுதியின் விட்டகுறை தொட்ட குறை ஒன்று இருக்கிறதே.
எனக்குள் இருந்த விதை விருட்சமாக மாற முக்கிய பங்காற்றிய அந்த புத்தகம்
FIRST BOOK
அப்படியென்ன இந்த புத்தகத்திலிருந்தது???
இந்த கேள்விக்கான பதில்
அனுபவங்கள்… நூற்றுக்கணக்கான எழுத்தளார்களின் அனுபவங்கள்.
ஒவ்வொரு வார்த்தைகளின் எனக்குள் உறைந்திருந்த எழுத்தாளனை தட்டி எழுப்பியது.
அவற்றிலிருந்து சில வரிகள் உங்களுக்காக
//Practical tips from Best-Selling authors on writing your First Book//
Research well before you write
“Research. Do it! Don’t Assume you know something because there will always be an expert out there to shoot you down if you get it wrong. Always Go back to original sources if you can” - Charolette Betts(Fashion designer authored four books)
“Don’t just plan to write- write. It is only by writing. Not dreaming about it, That we develop your own style” – P.D. James(English crime writer)
“Don’t worry too much about having the perfect idea or the perfect time. There’s no such thing. Start getting things down and tweak them”-Sarah Franklin author
“Start blog and a twitter account- they are a great way to keep writing and a fantastic way to connect and keep in touch with other writers and help you feel less “alone” through the writing process”-Hazel Gaynor Ireland author
“find your best time of the day for writing and write. Don’t let anything else interfere. Afterward it won’t matter to you that the kitchen is a mess”-Esther Freud
“Writing is like a muscle-the more you use it, the more limber you become”-Martina Devlin Bestselling author
“Write all the time. Quantity produces Quality. If you only write few things, you’re doomed”-Ray Bradbury American writer
“Be proud of your achievements. Many people talk about writing books but few reach THE END” – Mary Malone author
“The best book writing tip is to write like you speak!”-Jenna McCarthy author
“For a thriller the most important thing is pace. You need to draw your reader in fast- preferably on the first page- keep them turning to the end. Make sure chapter finishes in a way that compels them to read another page, even if its already two in the morning! That doesn’t mean a cliff-hanger. Sometimes Something subtle but ominous works just as well”- Guysavuille author
“Start telling the stories that only you can tell, because there’ll always be a better writers than you and there’ll always be smarter writers than you. There will always be people who are much better at doing this or doing that- but you are the only YOU” – Neil Gaiman English author
//The purpose of your book is to convey your thoughts or to narrate a story. Not to impress your readers with your knowledge of English vocabulary// (இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்)
“where you have a choice, use the short word instead of the long one. Keep your paragraphs relatively short”-V.S. Naipaul Indian writer
“Be honest with yourself. If you are no good, accept it. If the work you are doing is no good accept it”-Jeanette Winterson written 22 more books won whitebread prize for her first novel
“Write with passion. Fill your paper with the breathings of your heart” -William Wordsworth
இவையெல்லாம் அந்த பெருவெள்ளத்தின் சிறு துளிகள். என்னை மாற்றிய சிறுதுளிகள்… என் விதைகளில் விழுந்த சிறுதுளிகள்.
உனக்கு இதெல்லாம் முன்னமே தெரியாதா? இவையெல்லாம் ஒன்றும் புதிதாக இல்லை என்று கூட சொல்ல தோன்றும்.
முன்னமே தெரிந்த விஷயங்கள் கூட அதை யாராவது சொல்லும் போதுதான் அது தனி மதிப்பு பெறுகிறது. நம் மூளைக்குள் உறைக்கிறது.
‘சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை’ அல்லவா?
அதுவும் அந்த துறையில் சாதிப்பவர்கள் சொல்லும் போது அதன் மதிப்பே தனிதான்.
இன்று புதிதாக நிறைய எழுத்தாளர்கள் உருவாகிய போதும் அதில் வெகுசிலருக்கு மட்டுமே PASSION. பலருக்கும் அது TIME PASS. அவர்களின் எழுத்துக்களை வைத்தே நாம் அவற்றை பிரித்தறிய முடியும்.
கனவு என்பது பெரியதோ சிறியதோ? அது நம்முடைய கனவு. அதன் மீது நமக்கு ஒரு பிடித்தம் வேண்டும். கர்வம் வேண்டும். காதல் வேண்டும். இது எழுத்தளர்களுக்கு மட்டுமல்ல. பலதரப்பட்ட கனவுகளை கொண்ட ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.
கனவுகள் இருப்பவனுக்குதான் தேடல்கள் இருக்கும். அந்த தேடலின் மூலமாக நாம் நிறைய பெறுவோம். எதை எடுத்து கொள்ள வேண்டும். தூக்கியெறிய வேண்டுமென்பதெல்லாம் நம்முடைய சாய்ஸ்.
அப்படியான என் தேடலில் கிடைத்ததுதான் இந்த FIRST BOOK. அப்படி உங்கள் கனவுகள் மெய்ப்பிக்கும் புத்தகங்களும் கூட எங்காவது இங்குதான் ஒளிந்து கொண்டிருக்கும். விடாமல் தொடர்ந்து தேடுங்கள். படியுங்கள்!
இறுதியாக இந்த கனவு, தேடல், காதல் எல்லாம் கடந்து நம் சொல்லிலும் செயலிலும் ஓர் அறம் வேண்டும்.
அறம் என்பது வெறும் மூன்று வார்த்தை. சிறிய சொல். ஆனால் அதன் ஆழத்தையும் அகலத்தையும் ஆராய்ந்தால் இந்த பூமிபந்தே சிறியதாகி போகும்.
ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவர்கள் எழுத்தின் மீது நிச்சயம் காதல் இருக்கும். பெரும்பாலும் அவர்கள் எழுதுவதும் காதல்தான். ஆனால் நான் அதை குறிப்பிடவில்லை.
மற்ற வேலைகள் போல் எழுத்தில் வெற்றி என்பது பணம் அல்ல. கேட்டாலும் அது கிட்டாது. ஒரு வேளை எழுத்தை காதலாக அல்லாது காமச்செயலாக செய்பவனுக்கு வேண்டுமானால் அது கிட்டுமோ என்னவோ?
இங்கிருக்கும் ஒவ்வொரு எழுத்தாளனும் தன் எழுத்துக்களுக்கான அங்கீகாரத்தை தேடித்தான் ஓடி கொண்டிருக்கிறான். அந்த நீண்ட ஓட்டத்தில் சிலர் துவண்டு பாதியிலேயே நின்று போகிறார்கள். எல்லாமே அவரவர்களின் மனஉறுதியை பொருத்ததுதான்.
ஆனால் உண்மையிலேயே தன் எழுத்தின் மீது காதலும் கர்வமும் கொண்டவன் அப்படி துவண்டு போக மாட்டான். அதனை உணர்த்தும் வரிகள்தான் அறம் சிறுகதையில் இடம்பெற்றது.
“லட்சுமி வருவா போவா… ஆனா சரஸ்வதி ஏழு சென்மம் பார்த்துதான் கண்ணு பார்ப்பான்னு சொல்வாங்க”
காசும் பணமும் வரும் போகும். ஆனால் எழுத்து ஞானம் அத்தனை சுலபமாக கிட்டிவிடுவதில்லை. சரஸ்வதி நம்மை பார்க்க ஏழு ஜென்மம் வேண்டுமாம். அப்படியான எழுத்து ஞானம் கொண்ட நாம் கர்வப்பட்டு கொள்ள கூடாதா?
ஆனாலும்… படித்தவர்கள் எல்லாம் பண்பாளர்கள் என்று ஆகிவிட முடியாது. அது போல…
எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என்று ஆகிவிட முடியாது.
எவன் ஒருவன் அந்த எழுத்தை அறத்தோடு செய்கிறானோ அவனே எழுத்தாளனாகிறான்.
அந்த அறத்தை பின்பற்றாத எழுத்தும் எழுத்துக்களும் மோசமான பின்விளைவுகளை உண்டாக்கவல்லது.
அதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமெனில் ரவிவர்மனின் ஓவியம்!
தாசிகளை வைத்து அவர் பெண்தெய்வங்களை வரைந்ததாகவும் அந்த ஓவியங்களைதாம் நாம் பக்தியோடு பூஜையறையில் வைத்து வணங்குகிறோம் என்று சொல்லப்படுகிறது.
இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருப்பினும் அதில் வியந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு.
ஒரு சிறிந்த கலைஞன் நினைத்தால் தாசியை கூட தெய்வமாக மாற்றி வழிப்பட வைக்க முடியும்.
அதே போல தெய்வத்தையும் தாசிகளாக மாற்றிவிட முடியும்.
ஆனானப்பட்ட சரஸ்வதியும் இதில் அடக்கம்தான். நான் சொல்வது சரியாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
எழுத்து, சிந்தனை, செயல் இந்த மூன்று வார்த்தைகளும் ‘அறம்’ என்ற மூன்று எழுத்துக்குள் அடங்கிவிட்டால் எல்லாம் நலமே!
தொடர்ந்து விதைப்போம்.
4
மாற்றத்திற்கான விதை
EVERY WO(MAN) IS THE ARCHITECT OF HIS OWN FORTUNE
இந்த தடவையும் ஒரு கதை சொல்வோமா?. ஆனால் ரொம்பவும் சுவாரிசயமான சாதனை கதை என்றெல்லாம் சொல்ல முடியாது. அது ஒரு மாற்றத்திற்கான (வி)கதை.
ஒரு புத்தகம் எப்படி ஒரு மாற்றத்தை விளைவிக்கும் என்பதற்கான கதை. அதேநேரம் சீரியஸான கதையெல்லாம் இல்லை. சுமாரான கொஞ்சம் ஜாலியான கதை. அவ்வளவுதான்.
என்ன இத்தனை கதை சொல்றா? ஆனா கதையை மட்டும் சொல்ல மாற்றாளே!
உங்க மைன்ட் வாய்ஸ் நான் கேட்ச் பண்ணிட்டேன். ம்ம்ம் கதையை சொல்வோம்.
ஆனால் கதையை தொடங்கவதற்கு முன்பாக…
சமீபாமாக எனக்கு ஏற்பட்ட ஒரு ஆச்சரிய அனுபவம் பற்றி சொல்கிறேன். எனக்கு மிக நெருக்கமான தோழி என்று சொல்வதைவிட மரியாதைக்குரிய ஒரு எழுத்தாளினி தோழியிடம் பேசியில் உரையாடி கொண்டிருந்த போது,
“நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க… உங்க கதைகளெல்லாம் புத்தகமாக வரணும்” என்று நான் சொல்ல, “இல்ல மோனி… எனக்கு புத்தகமாக பிரிண்ட் செய்வதில் பெரிசாக உடன்பாடில்லை” என்பது போல சொன்னார்கள்.
அதற்கு அவர் சொன்ன காரணம்தான் மிக வியப்பு! மரங்களை நம் சுயநலத்திற்காக வெட்டுவதையும் வெட்டபடுவதையும் அவர் விரும்பவில்லை. சில நொடிகள் ஆச்சரியத்தில் என்ன பேசுவது என்றே எனக்கு புரியவில்லை.
அந்த உரையாடல்கள் முடிந்த பிறகும் நான் அவர் சொன்னது பற்றியே யோசித்து கொண்டிருந்தேன்.
மரங்களை காப்போம்! இயற்கையை காப்போம்!
அப்படின்னு இத்தனை நாளாக மரத்தை வெட்டிதான் சொல்லிட்டு இருந்தோமா? இப்படி ஒரு கோணத்தில் நான் ஏன் யோசிக்கவே இல்லை என்று தோன்றியது.
இருப்பினும் புத்தகங்கள் என்றுமே இயற்கைக்கும் மனிதனுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. அது ஒரு ஆக்கசக்தி. பெரிய பெரிய தலைவர்களை, விஞ்ஞானிகளை, கவிஞர்களை, புரட்சியாளர்களை இந்த பூமிக்கு தந்தது புத்தகம் என்ற அந்த ஆக்கசக்திதான் என்பதில் மாற்று கருத்தே இல்லை.
நம் எல்லோருக்கும் ஆதிகாலத்திலிருந்து சொல்லப்பட்ட ஒரு விஷயம். ‘நிறைய நல்லவர்கள் இருக்கிற இடத்தில் மழை பொழியுமாம்’ கேலியாக விளையாட்டாக கூட இந்த வாக்கியத்தை நாம் எல்லோரும் நம் நண்பர்களிடம் பயன்படுத்தி இருப்போம். எந்த அறிவியல் ஆதாரமுமில்லாவிட்டாலும் அந்த வாக்கியத்தை நம் மனம் நம்பவே செய்கிறது.
அது ஒரு ஆழமான ஆக்கபூரவ்மான நம்பிக்கை. ஆக்கப்பூரவ்மான சிந்தனைகள் அதிகம் இருக்கும் இடத்தில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை. அதே போல இங்கே இன்னொரு விஷயத்தை பதிவு செய்தே ஆக வேண்டும்.
நிறைய புதுமையான நற்சிந்தனைகள் கொண்ட எழுத்தாளர்கள் பலர் இருக்குமிடத்தில் எதை பற்றியுமே யோசிக்காமல் தன்னுடைய புகழ் பணம் என்று சமுகத்தை ஒட்டுமொத்தமாக சீரழிக்க புற்றீசல்கள் போல எழுத்தாளர்கள் என்ற பெயர்களில் இங்கே பலரும் உருவாகி இருக்கிறார்கள். உருவாக்கப்படுகிறார்கள். இதனால் எண்ணற்ற வகையில் . தரம்தாழ்ந்த படைப்புகள் புத்தகங்களாக பதிப்பிக்கப்படுகின்றன என்பதும் மறுக்க இயலாத ஒரு கசப்பான உண்மைதான்!
இருப்பினும் அதனால் எல்லாம் புத்தகத்தின் தரமும் சிறப்பும் குறைந்துவிடாது. கடலில் சாக்கடைகள் கலந்தாலும் சமுத்திரம் சமுத்திரம்தான். அது அந்த சாக்கடைகளை தம்மகத்தே உள்ளிழுத்து கொண்டு தூய்மையான நீரை பூமிக்கு மழையாக வழங்குகிறது. பூமியை செழிப்படைய செய்கிறது. அது போலதான் நல்ல புத்தகங்கள் மனித மனங்களில் மாற்றங்களை உருவாக்கி இந்த சமுகத்தை செழிப்படைய செய்கிறது.
அதேநேரம் ஒரு அளவுக்கு மேல் சாக்கடைகள் கலந்து கொண்டே போனால் சமுத்திரமும் பாழாகி போகும். இந்த சமுதாயமும் பாழாகி போகும் என்பதை சொல்லி கொண்டு…
நம்ம ஆரம்பத்தில் சொன்னது போல கதைக்குள் போகலாம்.
கதை என்றதும் கற்பனை கதையென்று எல்லாம் எண்ண வேண்டாம். இது ஒரு உண்மை கதை. என்னோட உண்மை கதை.
‘ஆட்டோ பயோ எழுதுற அளவுக்கு நீ பெரிய அப்பாடக்கரான்னு எல்லாம் கேட்காதீங்க’ நிச்சயாக இல்லை. நான் அவ்வளவு பெரிய ஆளும் இல்லை. இது அவ்வளவு பெரிய கதையும் இல்லை.
‘பின்ன எதுக்கு இதையெல்லாம் என்கிட்ட சொல்றன்னு கேட்குறீங்களா?’
ஏன்னா? என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தின் விதையாக… என் முன்னேறத்தின் முதல் படியாக ஒரு புத்தகம் இருந்தது. எனக்கு இளம்வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. கணக்கு வழக்கில்லாமல் நிறைய வகையறாக்களில் நிறைய நிறைய படித்து என் தேடலை நான் அதன் மூலமாக கொஞ்ச கொஞ்சமாக விரிவாக்கி கொண்ட போதும் ஒரே ஒரு புத்தகம் என் இலட்சியத்தை நான் எப்படி அடைவது என்ற கேள்விக்கும் விடை(தை)யாக எனக்கு கிட்டியது அந்த புத்தகம். அது என்ன புத்தகம் என்று கதை முடிவில் சொல்கிறேன்.
ஓகே… எங்கிருந்து நம்ம கதையை தொடங்குகிறது…
ம்ம்ம் நான் ஆறாவது படிக்கும்போதுதான் முதன்முதலாக நானே யோசிச்சு ஒரு மொக்கை கவிதை எழுதினேன். கவிதையோ கிறுக்கல்களோ? அங்கிருந்துதான் எனக்கு எழுத்தின் மீதான ஆர்வம் உண்டானது. இப்படியெல்லாம் கிறுக்குகிறதால நான் மேதாவித்தனமா படிப்பேன்னு எல்லாம் நினைக்க வேண்டாம்.
முதல் மதிப்பெண்ணும் எடுக்க மாட்டோம். கடைசி மதிப்பெண்ணும் எடுக்க மாட்டோம். நடுவாப்ல எடுத்துட்டு போயிடுவோம்.
அதேநேரம் என்னை யாரச்சும் demotivate பண்ணி பேசுனாலோ குறைவா பேசுனாலோ எனக்கு பிடிக்காது. அப்படி என்னோட கணக்கு ஆசிரியர் உமா மிஸ்
'உங்க அக்கா சென்டம் எடுக்குற நீ என்னடான்னா செவன்டி சிக்சிடிதான் எடுக்கிறேன்னு குத்தி காட்டினாங்க’ எனக்கு வந்துது பாருங்க கோபம். அடுத்த தேர்வில அவங்க கேட்ட சென்டம் எடுத்து காண்பிச்சிட்டேன். ஆனா அதுலதான் ஒரு ட்விஸ்ட்! நான் சென்டம் மார்க்குக்கு எழுதவே இல்லயே.
அதற்கு வாய்ய்பே இல்ல. ஏன்னா நான் ஒரு இரண்டு மார்க் கேள்வியை எழுதவே இல்லை. அது எழுதுன எனக்கு தெரியாதா?. பின்ன எப்படி சென்டம்? யோசிச்சு பேப்பரை செக் பண்ணா நைண்டி எய்ட்தான் வந்துச்சு.
இந்த நேரத்தில் நம்ம நேர்மை எருமை கருமைன்னு எல்லாம் யோசிக்கல. மிஸ்கிட்ட நல்ல பேரு வாங்க இது ஒரு நல்ல சான்ஸ்னு யோசிச்சு அவங்ககிட்ட சொன்னேன். அங்கேதான் அடுத்த ட்விஸ்ட்.
மிஸ் கவுன்ட் பண்ணி பார்த்துட்டு சரி பரவாயில்ல இந்த இரண்டு மார்க் உன் முயற்சிக்கும் நேர்மைக்கான பரிசு அப்படின்னு சொன்னாங்க,
முதல் முறையாக முயற்சிக்கான மதிப்பு என்னன்னு நான் உணர்ந்த நொடி அது. கஷ்டப்பட்டு முயற்சி செஞ்சா அதுக்கான மதிப்பையும் சிறப்பையும் நம்ம நேர்மையாகவே பெற முடியும். குறுக்கு வழியெல்லாம் தேவையே இல்லை.
இப்படிதான் வாழ்க்கை அடிக்காம உதைக்காம எனக்கு நிறையவே கற்று தந்துச்சு. தோளில் தட்டி கொடுத்து!
இந்த மாதிரி நிறைய அனுபவங்கள் யோசனைகள் என்னை நிறைய கிறுக்க வைச்சுது. அந்த கிறுக்கல்களின் உச்சபட்சமா ஒன்பதாவது படிக்கும் போது என் தமிழ் ஆசிரியருக்கு பக்கம் பக்கமா கவிதை என்கிற பெயரில் நிறைய கிறுக்கி கொடுத்தேன். ஏன்னா எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும். இத்தனைக்கும் அந்த தமிழ் ஆசிரியர் ஒரே ஒரு வருடம்தான் என் வாழ்க்கை பயணத்தில என்னுடன் வந்திருந்தார்.
ஊடல் கதையில் ஒரு வரி நான் எழுதியிருப்பேன்.
‘ஒரே நாளில் மாற்றங்கள் நடந்துவிடுவதில்லை. ஆனால் அது தொடங்க ஒரு கணம் போதும்.’ அப்படி நமக்குள் மாற்றங்கள் நிகழத்த இந்த மாதிரி மனிதர்கள் ரொம்ப வருடங்கள் நம்மோடு இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு சில மணிநேரங்கள் கூட போதுமானது.
அப்படிதான் தமிழ் என்பது வெறும் மொழி அல்ல. ஒரு வாழ்வியல் அப்படின்னு எனக்கு புரிய வைத்தார். தமிழ் எனக்கு எப்பவுமே பிடிக்கும். ஆனால் அந்த பிடித்தம் மரியாதையாகவும் மதிப்பாகவும் நான் தமிழன் என்ற உணர்வில் தலை கால் புரியாத கரவ்மாகவும் மாறியிருந்தது.
அந்த ஒரு வருட காலம் முடிந்த பின் நான் வேறு பள்ளிக்கு மாறிவிட்டேன். ஆனால் அவர் விதைத்த விதை எனக்குள்ளாக ஆழமாக இறங்கியிருந்தது.
அதுவும் அவருக்கு நான் ஆசிரியர் தினம் அன்று கொடுத்த கிறுக்கல்களை பார்த்து பாராட்டிய அதேநேரம் எதுகை மோனையில் எழுதிட்டா மட்டும் அது கவிதை இல்லைன்னு சொன்னாரு.
அது மட்டுமே இல்லை. திடீரென்று ஒரு நாள் என்னை கூப்பிட்டு ஒரு பேப்பரை தந்து ஒரு அறைக்குள் அனுப்பிவிட்டாரு. அது ஒரு கவிதை போட்டிக்கான அறை.
அப்போது அங்கே கொடுக்கும் தலைப்பை வைத்து கவிதை எழுதணுமாம்.
மனுஷன் இப்படி சிக்க வைச்சுட்டாரேன்னு தோணுச்சு.
தலைப்பு- பாரதி கண்ட புதுமை பெண். வாயில் வந்த ஏதோ எனக்கு தெரிஞ்சதை எழுதி வைச்சுட்டு வந்துட்டேன், அப்புறம் அந்த போட்டி எழுதியதையே நான் மறந்து போயிட்டேன்.
ஒரு நாள் அந்த போட்டிக்கு பரிசு அறிவிச்சாங்களாம். இது நான் செவி வாழியாக கேட்ட செய்தி. ஏன்னா அன்று பள்ளிக்கு போக முடியாத சூழ்நிலை. பூப்படைந்ததால்! அந்த வருடத்திற்கான Full attendance என் பெயரை செலெக்ட் பண்ணி இருந்தாங்க. அதுவும் போச்சு… இதுவும் போச்சு. மேடை ஏறி வாங்க rehersal எல்லாம் பார்த்து அது நடக்காமலே போச்சு!
ஆனால் அதுவும் ஒரு அனுபவமாக என் வாழ்க்கையில் பதிவானது. அதற்கு பின் என் கல்வி பயணம் வேறு பள்ளியில் தொடர்ந்திருந்தது. என்னோட தமிழ் ஆசிரயரோட தொடர்பு விட்டு போனாலும் அவர் சொல்லி கொடுத்த எதுவும் என் சிந்தனையை விட்டு போகவில்லை. பின் எப்படி போகும். அவர் விதைத்த விதை அப்படி?
என்னுடைய முதல் புத்தகம் வெளியான போது அவரிடம் சொல்லி சந்தோஷப்பட ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா எப்படி?
அவர் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று எனக்கு தெரியாதே. சரியாக பதினைந்து வருடத்திற்கு பிறகு அவர் தொடர்பு எனக்கு திரும்பவும் கிடைச்சது. அது எப்படி கிடைச்சதுன்னு சொன்னா நீங்க எல்லாம் ஆச்சரியப்படுவீங்க.
என்னுடைய வாடி என் தமிழச்சி கதையை படித்து கொண்டிருந்த வாசகி என்னை பாராட்டி உள்பெட்டியில் தகவல் அனுப்பி இருந்தாங்க. நானும் பதிலளித்தேன். அந்த உரையாடலின் போதுதான் அவர் நான் படித்த பள்ளியில் நான் படித்த அதே வருடத்தில் ஆசிரியராக பணிபுரிந்தது தெரியவந்தது.
எங்க ஐயாவோட பெயரை சொல்லி அவரை உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன்.
ஒ! நல்லாவே தெரியுமே அவர் எனக்கு நண்பர்னு சொன்னாங்க
இந்த வாழ்க்கை அமைக்கிற காட்சி அமைப்புகள் நம்ம எழுதுகிற கதைகளை விட மிகுந்த சுவாரசியமானது. என்ன ஒரு டிசைன்! என் வாசகர் மூலமாக அவரின் அறிமுகம் எனக்கு மீண்டுமே கிடைச்சது. அவரே எனக்கு தொடர்பு கொண்டு பேசினார்.
Best moment in my life. இப்படி நிறைய ஆச்சரியங்களும் அதற்கு பின்புலத்தில் நிறைய அனுபவங்களும் எனக்காக காத்திருந்தன.
என் தமிழ் ஐயாவோட அறிவுரையால் பள்ளி காலத்தில் என் கிறுக்கல்களும் சிந்தனைகளும் புது பரிமாணத்தை அடைந்தது. நிறைய எழுதுவேன். எழுதுனதும் தூக்கி போட்டுடுவேன். அப்படி ஒரு ஆகசிறந்த நல்ல பழக்கம் எனக்கு. தூக்கி போடாம தப்பிச்ச சில கவிதைகளில் ஒன்று. ‘கடவுள்’ அப்படிங்கிற கவிதை. அதை பள்ளி முதல்வர் கிட்ட காண்பிச்சிட்டா என்னோட அக்கா!
என் எழுத்தை பார்த்து எனக்கு மதிப்பு இருக்கோ இல்லையோ? என் தங்கைக்கும் அக்காவுக்கும் இருந்துச்சு. அப்படி பெருமையா அவள் காட்ட போக பிரின்ஸி என்னை கூப்பிட்டு வைச்சு பாராட்டினாரு.
இந்த சின்ன வயசுல எப்படி நீ இப்படியெல்லாம் யோசிக்கிற அப்படின்னு கேட்டாரு.
‘அவ்வளவு நல்ல்ல்ல்லாவா இருக்குன்னு’ எனக்கு நானே மனசுக்குள்ள் கவுண்டர் கொடுத்துக்கிட்டேன்.
அதெல்லாம் நம்பி நான் நிறைய எழுத ஆரம்பிச்ச போது எனக்கு எழுத்தின் மீதும் எழுத்தாளன் என்ற வாரத்தை மீதும் அபிரிமிதமான ஒரு மோகம். அதுவும் பொன்னியின் செல்வன் படிச்சு முடிச்ச பிறகு அந்த மோகம் தலை கால் புரியாம ஏறியிருந்தது.
ஆனாலும் paasion profession இந்த இரண்டு வார்த்தைக்குள்ள இருந்த வித்தியாசம் தெரியாம நிறைய குழும்பினேன். வழிக்காட்ட வேண்டியாங்களே நம்மை தெளிவா குழும்பினாங்க. சம்பாதிப்பதும் வேலைக்கு போவதும்தான் நம்ம வாழ்க்கையோட லட்சியம்னு கணிபொறி ஆசிரியர் விதைச்ச விதை என்னை தடம் மாறி போக வைச்சுது.
ட்விஸ்ட் இல்லன்னா வாழ்க்கை எப்படி சுவாரசியமா இருக்கும்.
அதுவும் நான் ஒரு பெரிய குழப்பவாதி!
Archaeologist ஆகணும் lawyer ஆகணும் இப்படியெல்லாம் நிறைய வித்தியாசமா யோசிச்சேன். Lawyer entrance exam hall ticket வரைக்கும் வாங்கி வைச்சிருந்தேன். ஆனால் எழுத விட்டார்களா என்னைய? துரத்து துரத்துன்னு துரத்தி கொண்டு போய் bsc computer science சேர்த்துவிட்டாங்க. உண்மையில் என்னை துரத்துனது என் பேரன்ட்ஸ் இல்லை.
Education fair நடந்துச்சு. தெரியாம அதுக்கு போயிட்டேன்.!!!
எதையெல்லாம் படித்தால் நம்ம எதிர்காலத்திற்கு நல்லது அப்படின்னு கன்வாஸ் பண்ணி நம்மை குழப்ப ஒரு கூட்டம் இருக்கும் இல்லையா? அதுதான்.
எப்பவுமே நம்ம எதிர்காலத்தை பற்றி அடுத்தவனிடம் அபிப்பிராயமே கேட்க கூடாது என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் நான்தான்.
Brain wash அப்படிங்கிற வாரத்தைக்கு அர்த்தம் அப்பத்தான் புரிந்தது. இதுதான் சரின்னு நம்ப வைக்கிறது இல்ல. இதுதான் உனக்கு சரின்னு நமக்கான முடிவை அவர்களே எடுப்பதுதான் பெரிய தந்திரம்.
உண்மையில் கல்வி நமக்கு சுயமாக சிந்திக்க கற்று கொடுக்கும். ஆனால் அந்த கல்வி என்ற கருவியின் மூலமாக வியாபாரம் செய்யும் ஒரு கூட்டம் நம்முடைய இலட்சியத்தை சிந்தனையை சுயத்தன்மையை அழிக்க கங்கணம் கட்டி கொண்டு காத்திருந்தது. அந்த வியாபார கூட்டத்திடம் சிக்கி கொண்டால் என்னை போல வாழ்க்கையே தடம் மாறி போக வாய்ப்பு உண்டு.
அனாலும் 12b பட கதை மாதிரி நான் விட்ட பஸ்சை திரும்ப பிடிச்சேன். அதுவும் விட்ட இடத்திலிருந்து!
இருப்பினும் அதற்கு நான் காவு கொடுத்த வருடங்கள் கொஞ்சம் அதிகம். எத்தனை வருடங்கள் ஆன போதும் அந்த விதை மட்கி போகாம எனக்குள்ள உயிரோட்டமா இருந்ததுதான் ஆச்சரியம்.
அதற்கு பிறகு என்னோட கல்லூரி நாட்கள் கணிப்பொறியை கற்று கொடுத்ததைவிட நிறைய நிறைய புதுப்புது அனுபவங்களை கற்று கொடுத்தது.
நான் நம்ம வீரா மாதிரி எல்லாம் இல்லை. C++ java எல்லாம் எனக்கு நல்லாவே வரும். நல்லா வந்து என்ன செய்ய? என் ஆர்வமும் காதலும் அதன் மீது இல்லையே!
எனக்கு நாவல்கள் படிக்கிறது பொழுது போக்காக இல்லை. அது ஒரு போதை. அங்கேதான் என்னுடைய படிக்கும் ஆர்வம் கதை சொல்லும் ஆர்வமாக மாறியது. படிச்ச கதைகளை அப்படியே suspense maintain பண்ணி சொல்வது கூட ஒரு திறமை இல்லையா?
அப்படிதான் கதை சொல்லியாக நான் மாறிய பின் எனக்குள் இருக்க படிக்கிற ஆர்வம் எழுதுற ஆர்வத்தை அதிகமாக தூண்டிவிட நானும் என் தோழி அப்சானாவும் நிறைய கவிதை போட்டிக்கு போவோம். எத்தனை கல்லூரியிலிருந்து வந்திருந்தாலும் முதல் பரிசு அவளுக்குதான் கிடைக்கும். அவள் வெற்றி பெறுவாள் நான் தோற்றுவிடுவேன். இது வழமையாக நடக்கும் காட்சிதான்!
என்னோட பிரச்சினையே எனக்கு நல்லா எழுத வரும். அந்த கவிதையை பத்து பேர் முன்னாடி படிக்க சொன்னா படிக்க வராது. திக்கி திணறும்.
ஆனால் அதுக்காக எல்லாம் துவண்டு போகாம நான் ஒவ்வொரு போட்டியிலும் போய் தோற்று போவேன்.
Failure is the stepping stone of success அப்படின்னு நான் கற்று கொண்ட காலக்கட்டம் அது.
Failure மட்டும்தானே இருக்கு. எங்க successன்னு நீங்க கேட்கலாம். அதுவும் ஒரு நாள் கிடைச்சது. சென்னை துறைமுக தமிழ்சங்க கவிதை போட்டியில், ‘ஒசோனே இமைமூடு’ அப்படி ஒரு தலைப்பு கொடுத்து எழுத சொல்லி இருந்தாங்க.
அதுல highlight ஆன விஷயம் என்னன்னா எழதி மட்டும் தந்தால் போதும். படிக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அந்த போட்டி நடந்து முடிந்து ஒரு வருடமாகி நான் கல்லூரி காலங்களை முடித்து வந்த பின் ஒரு நாள் என் தோழி அப்சானா எனக்கு கால் பண்ணி உனக்கு இரண்டாவது பரிசு கிடைச்சிருக்குனு சொன்னா.
அதாவது முதல் பரிசு அவளுக்கு. இரண்டாம் பரிசு எனக்கு. பல கல்லூரிகள் கலந்து கொண்ட அந்த போட்டியில் முதல் இரண்டு பரிசுகள் எங்க கல்லூரிக்கு கிடைத்தது ஆச்சரியம்னா அந்த போட்டியில் பரிசு கிடைத்தது குறித்து எங்கள் கல்லூரி நிர்வாகம் எங்களிடம் சொல்லாமல் விட்டது அதிர்ச்சி. பரிசு கொடுத்து ஒரு வருடம் கழித்து அந்த ஷீல்ட் என் கைக்கு வந்துச்சு.
என் பெயர் பொறிக்கப்பட்ட ஷீல்ட். மேடையில் ஏறி வாங்கும் கொடுப்பனை இல்லையென்ற போதும் அந்த பரிசை பார்க்க எனக்கு என் எழுத்தின் மீது கர்வமும் பெருமிதமும் உண்டாகும்.
இந்த மாதிரியான வெற்றிகள்தான் என்னை எழுத தூண்டிய உந்துசக்திகள்.
அதேநேரம் என்னுடைய கல்லூரி காலத்து கடைசி வருடத்தில் நான் ஒரு கதை எழுதினேன். தினமும் ஒரு பத்து பக்கம் எழுதுவேன். அதை என் நட்புங்க படிப்பாங்க. முதன்முதலாக நான் எழுதிய கதையை படிச்ச அந்த நட்பு இன்றும் என் கதையை படிச்சிட்டு இருக்கு. இன்னும் இன்னும் நல்லா எழுதுன்னு என்னை கொட்டிக்கிட்டே இருக்கு!
அந்த நட்போட தொடர்பு கல்லூரிக்கு பின் அறுந்து போனது. ஆனால் அவளோட படிக்கும் ஆர்வம் குறையவில்லை. என்னோட எழுதும் ஆர்வமும் மறித்து போகவில்லை.
மீண்டும் எங்கள் நட்பின் தொடர்பு என் எழுத்தின் மூலமாக பிணைந்தது, என்னுடைய சொல்லடி சிவசக்தி கதையை நான் யாருன்னு தெரியாமலே smsiteலபடிச்சு வருடங்கள் கடந்து மீண்டும் தொடர்பு கொண்டு பாராட்டியதெல்லாம் என் வாழ்க்கை எனக்கு கொடுத்த மிக சுவாரிசியமான ஆச்சரியங்கள்தான்.
என்னதான் நான் bsc computer science படிச்சாலும் நம்ம மூளை எழுதுவதை மட்டுமே பிடிவாதமா பிடிச்சிக்கிட்டு இருந்துச்சு. எல்லோரும் IT company வேலைக்கு போகும் போது டீச்சர் வேலைக்கு போனேன். இதெல்லாம் என் வாழ்க்கையே எடுத்த முடிவுகள்.
நம்ம வாழ்க்கையை எந்த பாதையை கை காண்பிக்கிறதோ அந்த பாதையில் நாமும் அமைதியாக போயிடனும். தேவையில்லாத சில பேரோட வார்த்தைகளை கேட்டு ட்விஸ்ட் அன் டர்ன் பண்ணி திருப்பி சொதப்பி! எதுக்கு இந்த வேலை என்று அமைதியாக வாழ்க்கையின் நீரோட்டத்தில் கலந்து போனேன் நான்.
ஆசிரியர் என்ற அவதாரம் எடுத்த நான் Prekg முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அந்த மூன்று வருட காலகட்டத்தில் பார்த்துவிட்டேன். அதுவும் நான் முதல் முதலாக ஆசிரியராக சேர்ந்த எடுத்துல நான் டீச்சரா ஸ்டுடண்டா அப்படின்னு எல்லோருக்கும் சந்தேகம் வரும்.
பசங்களை விட அதிகமா நான்தான் நிறைய சொதப்பினேன். சந்தோஷம் சுவாரசியம் கலாட்டா கடைசியா ஒரு ட்விஸ்ட், யாராச்சும் attendance register ink ஊத்துவாங்களான்னு கேட்டா?? நான் ஊத்துவேன். முடிஞ்சுது
முதல் வேலை வெற்றிகரமாக தோல்வியில் முடிந்தது. ஆனால் அதற்கு பிறகு அதை விட பெரிய பள்ளியில் இரண்டு மடங்கு சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்ததும் சேர்ந்த சில மாதங்களில் திருமணம் முடிந்ததும் குடும்ப வாழ்க்கை என்னை வெகுவாக உள்ளிழுத்து கொண்டதும் அதிவிரைவாக நடந்து முடிந்தது.
அவ்வளவுதானா? முடிஞ்சிடுச்சா? அப்படின்னு என்னை நானே கேட்டு கொண்ட நாட்களும் உண்டு. என் டைரியில் பக்கம் பக்கமா புலம்பி அது தீர்ந்து காலியாகியும் போனது. ஆனால் என் தேடலும் அதன் தாகமும் தீரவேயில்லை.
ஒரே இடத்தில தேங்கி இருக்கோம்னு மனசு சொல்லிகிட்டே இருக்கும். ஆனால் அதை கடந்து போகும் பாதை தெரியவில்லை.
புத்தகம் படிக்கிறது… அது மட்டுமே என்னையும் என் இலட்சியத்தையும் எக்ஸ்பயரி ஆகாம உயிர்ப்போடு வைத்திருந்தது.
கல்லூரி முடித்ததும் ஆதியே அந்தமாய் கதையை வேறு பெயரில் எழுத ஆரம்பித்து அதன் பின் வேலை கிடைத்து வேலை பளுவில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். அதை திருமணமாகி முதல் மகனுக்கு இரண்டு வயதை எட்டிய போது தொடரலாம்னு எடுத்து அப்பவும் முடிக்க முடியல!
குடும்பம் குழந்தை என்கிற சுழலுக்குள் சிக்கி கொண்டு மீண்டு வருவதும் மீட்டு வருவதும் அத்தனை சுலபமான காரியம் இல்லை. சுழற்றி சுழற்றி என்னை அடிச்சுது. என்னுடைய இலட்சியத்தை ஆசையை கனவை தற்கொலை செய்யவிடாமல் பிடிமானமாகவும் பற்றுகோலாகவும் தாங்கி பிடித்து கொண்டிருந்தது புத்தகங்கள் மட்டும்தான்.
நாவல்கள், சுயமுன்னேற்ற கட்டுரைகள், பரிணாம பாதைகள், ஓஷோ இப்படி புதிதாக புதிதாக அதுவும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத காம்பினேஷனாக நான் படித்து கொண்டிருந்தேன்.
எப்போதெல்லாம் என் குடும்பம் வாழ்க்கையில் எனக்கு மூச்சு முட்டுகிறதோ அப்போதெல்லாம் படித்தேன். எனக்குள் இருக்கும் என்னை தேடி கொள்ள படித்தேன். என் சிந்தனையை மழுங்கடிக்க பார்த்த சீரியல்களிலிருந்து தப்பி கொள்ள படித்தேன்.
எல்லோருக்கும் வருடத்தில் இந்தந்த பண்டிகை வந்தால் சந்தோஷம் என்று ஒரு பட்டியல் இருக்கும். எனக்கு சென்னை புத்தக திருவிழா வந்தாள் ஆகபெரிய சந்தோஷம். அவை வெறும் புத்தக குவியல் இல்லை. புத்தக புதையல். அதன் மதிப்பை எல்லோராலும் உணர்ந்துவிட முடியாது. அந்த புத்தக குவியலுக்குள் இருக்கும் நம் புதையல்களை!
அத்தனை அத்தனை ஸ்டால்களில் என் கண்களுக்கு கிட்டிய அந்த புத்தகம்…
மீண்டும் என்னுடைய எழுதும் ஆர்வத்தை தூண்டிவிட்டது. மீண்டும்
என்னை எழுத வைத்தது.
அடுத்த புத்தக கண்காட்சியில் என்னுடைய முதல் புத்தகம் வெளியானது.
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
அந்த புத்தகத்தோட பெயர் ‘first book’
எழுதவும் எழுத்தாளனாகும் சூட்சமத்தின் ஒரு சின்ன ரகசியத்தை எனக்கு அந்த புத்தகம் கற்று கொடுத்தது. பல எழுதாளர்கள் எழுதிய அந்த புத்தகத்திலிருந்த ஒவ்வொரு வரிகளும் அறிவுரைகள் அல்ல. அனுபவங்கள்.
அனுபவங்கள் அறிவுரைகளை விட உரக்க பேசும். அது எனக்குள் பேசியது. அதில் சொல்லப்பட்ட விஷயத்தை நான் பின்பற்றினேன்.
எழுத்தின் மீதான என் ஆர்வத்திற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். அதற்கு தூண்டுகோலாக அமைந்தது அந்த புத்தகம்தான்.
அப்படி என்ன சொல்லி இருந்தது இந்த first bookல????? அடுத்த அத்தியாயத்தில்…
விதைப்போம்… தொடர்ந்து நல்ல சிந்தனைகளை
உங்க வாழ்க்கையிலும் இப்படி நீங்க நிறைய ஆச்சரியங்களை அதிசயங்களை வெற்றிகளை கடந்து வந்திருக்கலாம். அது என் கதை மாதிரி சுமாரா இல்லாம ரொம்ப சூப்பரா இருக்கலாம்.
அதை நீங்க இங்கே நம்மோட விதைபந்து கட்டுரையில் ஒரு அத்தியாயமாக பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லோரோட வாழ்க்கையோட வெற்றி formula வேற வேற…
அது இங்க இருக்க யாருக்காவது பயன்படட்டுமே! நம் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் போது அது மற்றவருக்கு மட்டும் இல்லை. நமக்குமே புதுநம்பிக்கையை உருவாக்குகிறது.
விதையின் மூலம் விருட்சம் உருவாகுகிறது. அந்த விருட்சங்கள் மூலம் பல்வேறு விதைகள் உருவாகின்றன. உங்களுக்குள்ளும் நிறைய விதைகள் உள்ளது.
வாருங்கள்… தொடர்ந்து விதைப்போம்… புதுப்புது நற்சிந்தனைகளை!
COMMENTS
விதைப்பந்து - 3 வாசித்தலின் பொன்னான பயன்கள்
உங்களுக்காக வால் போய் கத்தி வந்த கதை audio வடிவில்
COMMENTS
விதைப்பந்து - 2 கதையின் கதை
Kindly post your comments here.
Comments
விதைப்பந்து - 1 கதைகள்
Kindly Post Your Comments Here.
Comments